கொரோனா தொற்று விவகாரம்: அமெரிக்காவை சாடும் சீனா

கொரோனா வைரஸ் எங்கிருந்து முதலில் தோன்றியது என்ற விவகாரத்தில் சீனாவை குற்றம்சாட்டும் முன்பு முதலில் தமது நாட்டில் அது தொடர்பான விசாரணையை அமெரிக்கா நடத்த வேண்டும் என சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பெய்ஜிங்கில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ட்செள லிஜியாங், “2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 முதல் 16ஆம் தேதிக்கு இடைப்பட்ட நாட்களில் அமெரிக்காவின் கலிஃபோர்னியா, ஓரிகான், வாஷிங்டன் ஆகிய பகுதிகளில் சேகரிக்கப்பட்ட குறைந்தபட்சம் 39 மாதிரிகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிர்வினையாற்றும் ஆன்டிபாடிக்கள் கண்டறியப்பட்டது.

ஆரம்ப காலத்தில் தோன்றிய இந்த வைரஸ் குறித்து அமெரிக்கா வெளிப்படையான வகையில் விசாரிக்க வேண்டும். அமெரிக்காவில் கொரோனா வைரஸை கையாளும் நடவடிக்கையில் மிகவும் மோசமாக செயல்பட்டதற்கு யாரை பொறுப்புடைமையாக்குவது? உலகிலேயே அதிமேம்பட்ட மருத்துவ வசதிகளையும் தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ள ஒரு நாட்டில் 30 மில்லியன் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆறு இலட்சம் பேர் இறந்திருக்கிறார்கள்”  என்றார்

கொரோனா வைரஸ் எங்கிருந்து தோன்றியது என்பது குறித்த அறிக்கையை 90 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று  அமெரிக்க அதிபர் ஜோ பைடன்,  உளவு அமைப்புகளுக்கு கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.