கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட இருவர் மரணம்

கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட பின் இந்தியாவில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஜனவரி 16-ம் திகதி இந்தியாவில் கொரோனா தடுப்பூசித் திட்டத்தைத் தொடங்கிவைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. கடந்த மூன்று நாட்களில் 3.81 இலட்சம் சுகாதாரப் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

அதில் 580 பேருக்கு கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட பின் சில எதிர்வினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் ஏழு பேர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட வேண்டியிருந்ததாகவும் மத்திய சுகாதார அமைச்சகம்  கூறியுள்ளது.

மேலும் கர்நாடகா மற்றும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இரு சுகாதாரப் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்ட பின் இறந்தது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கமளித்திருக்கிறது.

உத்தர பிரதேசத்தில் மொராதாபாத்தைச் சேர்ந்த 52 வயதான சுகாதாரப் பணியாளர் ஒருவர் ஜனவரி 16-ம் திகதி கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்ட நிலையில், அதற்கு மறுநாளே (ஜனவரி 17) உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் மூன்று மருத்துவர்களை கொண்ட குழுவால் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

அதில், அவர் உயிரிழந்ததற்கான காரணம் இருதய மற்றும் நுரையீரல் பிரச்சனைகள் (Cardiopulmonary disease) எனக் கூறப்பட்டது.

அதே போல கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த 43 வயது ஆண் சுகாதாரப் பணியாளர் கடந்த ஜனவரி 16-ம் தேதி தடுப்பூசி செலுத்திக் கொண்டார். ஜனவரி 18-ம் தேதி உயிரிழந்தார். இவருடைய உயிரிழப்புக்கு இரத்த ஓட்ட தடையுடன் கூடிய இருதய மற்றும் நுரையீரல் செயலிழப்பே காரணமென்று  கூறப்படுகின்றன.

இந்நிலையில், குறித்த இவரின் உயிரிழப்புக்கும் கொரோனா தடுப்பு மருந்துக்கும் தொடர்பில்லை என மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலர் மனோகர் அக்னானி கூறியதாக ஏ.என்.ஐ செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.