கொரோனா தடுப்பூசிகளுக்கான காப்புரிமையை விட்டுக் கொடுப்பதை ஆதரிக்கிறேன்: திருத்தந்தை பிரான்ஸிஸ்

கொரோனா தடுப்பூசிகளுக்கான காப்புரிமையை விட்டுக் கொடுப்பதை தானும் ஆதரிப்பதாக திருத்தந்தை பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருத்தந்தை பிரான்ஸிஸ் வெளியிட்டுள்ள காணொலி ஒன்றில், “கொரோனா தடுப்பூசிகளுக்கான காப்புரிமையை விட்டுத் தருவதை நான் ஆதரிக்கிறேன். இதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் முடிவுகளை ஆதரிக்கிறேன்.

கொரோனா காரணமாக இந்தியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைக் கண்காணித்து வருகின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பல நாடுகளில் தீவிரம் அடைந்துள்ளது. தினந்தோறும் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.  ஆயிரக்கணக்கான மக்கள் மரணித்துக் கொண்டிருக்கிறார்கள்.  இந்த நிலையில் தடுப்பூசியைக் கொள்முதல் செய்வதில் உலக நாடுகளிடையே பெரும் வேறுபாடு நிலவுகிறது. வளர்ந்த, வளர்ச்சி அடைந்த நாடுகள் தங்களது தேவைக்கு அதிகமாகத் தடுப்பூசிகளை வாங்கி வைத்துள்ளன. ஏழை நாடுகளோ தடுப்பூசி கிடைக்காமல் திணறி வருகின்றன.

இந்த நிலையில் கொரோனா  தடுப்பூசி காப்புரிமையை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு நிறுத்திவைக்க வேண்டும் என்று அறிவியல் விஞ்ஞானிகள், உலகத் தலைவர்கள் பலரும் வலியுறுத்தினர். இதற்கான போராட்டங்களும் பல நாடுகளில் முன்னெடுக்கப்பட்டன.

கொரோனா தடுப்பூசிகளுக்கு காப்புரிமை கூடாது என்று இந்தியா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளும் உலக சுகாதார அமைப்பிடம் வலியுறுத்தின. ஆனால், இவ்விவகாரத்தில் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் மவுனம் காத்து வந்தன. மருந்து நிறுவனங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர், கொரோனா தடுப்பூசிகளுக்கான காப்புரிமையை விட்டுக் கொடுப்பதை ஆதரிப்பதாக அமெரிக்கா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.