கொரோனா தடுப்பு மருந்தை பதுக்கும் பணக்கார நாடுகள் தென் ஆபிரிக்க அதிபர் குற்றச்சாட்டு

உலகின் பணக்கார நாடுகள் தேவைக்கு அதிகமாகக் கொரோனா தடுப்பு மருந்துகளை பதுக்கி வைத்துக் கொள்வதால் மற்ற நாடுகளுக்குக் தடுப்பு மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமாஃபோசா குற்றம் சாட்டியுள்ளார்.

உலக பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) காணொலி காட்சி மாநாடு சுவிட்சர்லாந்தின், தாவோஸ் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தென் ஆபிரிக்க அதிபர் சிரில், உலகின் பணக்கார நாடுகள் கொரோனா தடுப்பு மருந்துகளை உற்பத்தியாளர்களிடம் இருந்து வாங்கியுள்ளனர் என்றும், சில நாடுகள் கொரோனா ஒரு படி மேலே சென்று, தன் நாட்டில் உள்ள மக்கள் தொகையை விட நான்கு மடங்கு அதிகமான தடுப்பு மருந்துகளை பெற்றுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

40 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்டுள்ள நாடுகள் ஒரு கோடியே 20 இலட்சத்துக்கு மேற்பட்ட கொரோனா தடுப்பு மருந்துகளை வாங்கி வைத்திருப்பது எதனால் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனவே பணக்கார நாடுகள் பதுக்கி வைத்துள்ள மருந்துகளை திரும்பி அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்தோடு ஒரு சில நாடுகள் தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொண்டு, மற்ற நாடுகள் தடுப்பு மருந்து போட்டுக்கொள்ளவில்லை என்றால் அது அனைவருக்கும் ஆபத்தாக முடிந்து விடும்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.