கொரோனா ஒழிப்பில் அரசு வெற்றிபெறவில்லை – ஐக்கிய மக்கள் சக்தி

ஆறு வாரகால கொவிட் – 19 ஒழிப்பு செயற்பாட்டில் அரசாங்கம் வெற்றிபெற்றுவிட்டது என்பதனை காணமுடிகின்றதா? என ஐக்கிய மக்கள் சக்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை வருமாறு:

கொரோனா தொற்று நோய் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய எதிர்க்கட்சி என்ற முறையில் நாம் தொடக்கத்திலிருந்தே அவதானமாக இருந்ததுடன், ஜனவரி 24 மற்றும் பெப்ரவரி 25 ஆகிய திகதிகளில் இரு தடவைகள் பாராளுமன்றத்தில் நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளோம். ஆனால், அப்பொழுதும்கூட அரசாங்கம் பொறுப்பற்ற விதத்திலேயே நடந்துகொண்டது.

அவ்வாறே சம்பிரதாயபூர்வமான எதிர்க்கட்சியாகவன்றி, பொறுப்புணர்ச்சியுடன்கூடிய, மனித உயிர்களின் பெறுமதியை மதிக்கின்ற எதிர்க்கட்சியாக நாம் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றோம்.

தொற்றுநோய் தீவிரமடைந்த பின்னர் இரண்டு தடவைகள் பிரதமர் கட்சி தலைவர்களை அழைத்து, கொரோனா அபாயத்திலிருந்து நாட்டைக் காப்பாற்றுவது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தியதுடன், அவ்விரு சந்தர்ப்பங்களிலும் நாம் கலந்துகொண்டோம். இந்த நோயிலிருந்து விடுபடுவதற்கு பொறுப்புடன் நாம் காரியமாற்றியதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கல், அரச பொறிமுறையை உரிய விதத்தில் செயற்படுத்துதல், அனர்த்த முகாமைத்துவ கட்டமைப்பை முறையாகக் கையாளுதல், நிவாரண உதவிகளை அரசியல் மயப்படுத்தாதிருத்தல், பரிசோதனைகளை துரிதமாகவும் முறையாகவும் மேற்கொள்ளல், கொரோனா ஒழிப்பு சம்பந்தமான செயலணிக்கான சுகாதார மற்றும் பாதுகாப்பு அங்கிகளை போதிய அளவில் பெற்றுக்கொள்ளல் போன்றவை பற்றியும் அரசாங்கத்திற்கு ஆலோசனைகளை முன்வைத்தோம். ஆனால், அந்த ஆலோசனைகள் யோசனைகளில் எது பற்றியும் அரசாங்கம் எந்த முயற்சியும் எடுக்காததையிட்டு நாம் கவலையடைகின்றோம்.

இந்த அனர்த்தத்தை தவிர்ப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள தொடர்பில் தகராறுகள் நிலவிய போதிலும், நாம் அவற்றை பொருட்படுத்தாது அரசாங்கத்துடன் ஒத்துழைக்கின்றோம்.

ஆறு வாரங்களாக அரசாங்கத்தினால் சட்டபூர்வமற்ற விதத்தில் அவசர காலம் பிறப்பிக்கப்பட்டிருந்தும் கொரோனா ஒழிப்பு என்ற அத்தியாவசியமான காரணத்தினால் அந்த விடயத்திலும்கூட நாம் நிதானமாக நடந்துகொள்கிறோம்.

ஆனால், அரசாங்கம் அநேகமாக அவசரகால சட்டத்தைத் துஷ்பிரயோகம் செய்ததோடு, சமூக வலைத்தள செயற்பாட்டாளர்களை கைது செய்வதற்கும், அரசுக்கு நெருக்கமானவர்களுக்கு ஊரடங்கு வியாபார அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொடுப்பதற்கும், அவசர காலச் சட்டம் என்ற போர்வையில் நிவாரண வினியோகத்தை அரசியல் மயப்படுத்தவும் நடவடிக்கை எடுத்தது.

ஆறு வாரங்களாக பொதுமக்கள் அளவு கடந்த அர்ப்பணிப்புடன் நடந்து கொண்டதோடு எல்லாவிதமான வேதனைகளையும், துன்பங்களையும் சகித்துக்கொண்டு செயலாற்றியது. இந்த அனர்த்தத்தினைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் முடியும் என்ற அபார நம்பிக்கையினாலேயே ஆகும்.

ஆயினும், ஆறு வாரகால கொவிட் – 19 ஒழிப்பு செயற்பாட்டில் அரசாங்கம் வெற்றிபெற்றுவிட்டது என்பதனை காணமுடிகின்றதா?

அவசர காலத்தில்கூட ஆறு வார காலத்தில் கொவிட் அனர்த்த வரைபடக்கோடு கீழ் நோக்கி செல்வதனையே சுட்டியிருக்க வேண்டும். ஆனால், அது ஏறுமுகமாகவே உயர்ந்து செல்கிறது. ஏனைய நாடுகளில் அநேகமானவை அவசர காலத்தைப் பிறப்பிக்காமல் முடக்கல் செயற்பட்டினூடாகவே சில வாரங்களுக்குள் கொவிட் ஒழிப்பு வரை கோட்டை கீழ் மட்டத்திற்குக் கொண்டுவந்துள்ள போதிலும் அவசரகாலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலைமையில் இந்த நாட்டில் கொரோனா அனர்த்த வரைகோடு மேல் நோக்கி செல்வது கவனத்திற் கொள்ளவேண்டிய பாரதூரமான நிலைமையாகும்.

கொரோனோ ஒழிப்பு செயற்பாட்டினூடாக உலகின் பல நாடுகளில் சுகாதாரத் துறையைச் சேர்ந்த அநேகருக்கே கொரோனா தொற்று ஏற்பட்ட போதிலும், இலங்கையின் பாதுகாப்பு துறையினரில் ஒரு சாராருக்கே இந்நோய் தொற்றியுள்ளது. இதிலிருந்து விளங்குவது கொரோனா ஒழிப்பு செயற்பாட்டிற்கு பாதுகாப்புப்படையினரை ஈடுபடுத்தியிருந்தும் அவர்களுக்கு அவசியமான உரிய தரம் வாய்ந்த தற்பாதுகாப்பு சுகாதார மேலங்கிகள் வழங்கப்படாமலும், தொற்றுநோய் சம்பந்தமான பயிற்சி அளிக்கப்படாமல் அந்த படை வீரர்ரகளை உயிராபத்திற்கு உட்படுத்தியதுமாகும்.

இவ்வாறான எல்லா நிலைமைகளுக்கு மத்தியிலும் நாட்டின் மீதான பற்றுள்ள கட்சிகளில் முக்கிய கட்சியினரான நாங்கள் கடந்த 26 ஆம் திகதி அதிமேதகு ஜனாதிபதி கோதாபய ராஜபக்க்ஷ அவர்களுக்கு ஒருமித்து எழுதிய கடிதமொன்றை அனுப்பியிருந்தோம்.

அந்த கடிதத்தை நாங்கள் மிகவும் கண்ணியமான முறையில் அனுப்பியதோடு, அதில் மறைவான ஏதும் நிகழ்ச்சி நிரலோ, முறைகேடான கோரிக்கையோ இடம்பெற்றிருக்கவில்லை.

அதில் அடங்கியிருந்தது, ஏப்ரல் 30ஆம் திகதிக்குப் பிறகு சட்டபூர்வமாக அரச நிதியைச் செலவு செய்வதுபற்றியும், கொரோனா ஒழிப்பு சட்டமூலங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்குவது பற்றியுமாகும்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்குப் பதிலாக, மக்களது இயல்பு வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்கும், அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அவசியமான ஆதரவை நிபந்தனையின்றி அரசாங்கத்துக்குப் பெற்றுக்கொடுப்பதற்கான எழுத்துமூல உத்தரவாதம் பற்றி அக்கடிதத்தில் உள்ளடங்கியிருந்தது.
ஆயினும், அக்கடிதத்திற்கு அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தரப்பிலிருந்து எந்தவிதத்திலும் நாகரிகமற்ற பதில் அவரது அதிகாரியின் மூலம் அனுப்பப்பட்டதையிட்டு நாம் கவலையடைகின்றோம்.

எதிர்க் கட்சியின் பிரதான கட்சித் தலைவர்களினால் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவது சம்பந்தமாக அனுப்பப்பட்ட கடிதத்தை முக்கியமற்றதாக கணித்து, புறக்கணிப்பதே ஜனாதிபதியால் அதிகாரியொருவரினூடாக அனுப்பப்பட்ட பதிலின் உள்ளடக்கமாகும்.

இந்த நெருக்கடியான நிலைமையில் கட்சி, நிற பேதங்களுக்கு அப்பால் செயற்படுவதன் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தி எங்களால் அதிமேதகு ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் பொன்னான உள்ளடக்கத்தை அவராகவே கவனத்தில் எடுக்காதபோது, பிரதமரின் தலைமையில் எதிர்வரும் திங்கட்கிழமை (4) பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரையும் அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆயினும், பாராளுமன்றத்தை கூட்டுவதோ, பழைய பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும் தேவைப்படாது என அரசாங்கமும் ஜனாதிபதியும் கடினமான நிலைப்பாட்டில் இருக்கின்ற வேளையில், அரச மற்றும் அரசுக்கு ஆதரவளிக்கும் தனியார் ஊடகஙக்ளைப் பாவித்து பெரிதாகப் பிரசாரஞ் செய்யப்படும். நிலைமை இவ்வாறிருக்க, பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரையும் அழைக்கும் பிரதமரின் தீர்மானத்தையிட்டு நாம் மகிழ்ச்சியடைந்தாலும், அரசாங்கத்தின் இரட்டை வேடத்தையிட்டு நாம் கவலையடைகிறோம்.

இந்த நிலைமையில், குறித்த சந்திப்பில் கலந்துகொள்வதற்கு நாங்கள் எண்ணவில்லை. இவ்வேளையில் மேற்கொள்ளப்படவேண்டிய நடைமுறைச் சாத்தியமான செயற்பாடு, முன்னாள் சபாநாயகரின் தலைமையில் பாராளுமன்றத்தைக் கூட்டுவதேயாகும் என நாம் பொறுப்புணர்வுடன் மீண்டும் கவனத்திற்குக் கொண்டுவருகின்றோம்.

ஏனெனில், அரச நிதிச் செயற்பாடு மற்றும் உரிய சட்டங்களை நிறைவேற்றுதல் என்பன சம்பந்தமாக பாராளுமன்றத்தினால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்பதனாலேயாகும்.

ரன்ஜித் மத்தும பண்டார,
பொதுச் செயலாளர்,
ஐக்கிய மக்கள் சக்தி