கொரோனாவால் யாழில் மேலும் நால்வர் மரணம் – 57 பேருக்கு புதிதாக தொற்றுறுதி

யாழ்ப்பாணத்தில் மேலும் நால்வர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர் என்று யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

இதன் மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 72ஆக உயர்வடைந்துள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 55 வயதுடைய பெண் ஒருவரும் 65 தொடக்கம் 85 வயதுக்குட்பட்ட ஆண்கள் மூவரும் நேற்று உயிரிழந்துள்ளனர்.

இதே வேளையில், கடந்த 24 மணி நேரத்தில் யாழ். ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகூடப் பரிசோதனைகளில் யாழ். குடாநாட்டில் 57 பேர் உட்பட வடக்கில் மேலும் 66 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று பகலிலும், யாழ்.பல்கலைக் கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று பகலிலும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் இவ்வாறு வடக்கில் மேலும் 66 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் நேற்று 516 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 38 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் – 10 பேர், யாழ். போதனா வைத்தியசாலையில் – 05 பேர், மானிப்பாய் பிரதேச வைத்தியசாலை யில் – 05 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் – 03 பேர், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் – 03 பேர், பண்டத்தரிப்பு பிரதேச வைத்திய சாலையில் – 02 பேர், தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் – ஒருவர், தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலையில் – ஒருவர் என இவ்வாறு யாழ். மாவட்டத்தில் 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதேபோன்று, மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையில் – 02 பேர், புதுக்குடியிருப்பு ஆதார வைத்திய சாலையில் – 02 பேர், இரணைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் – ஒருவர், பளை பிரதேச வைத்தியசாலையில் – ஒருவர் இலங்கை கடற்படையினர் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

(முள்ளிக்குளம் மற்றும் காங்கேசன்துறை ஆகிய முகாம்களை சேர்ந்த தலா ஒவ்வொரு கடற்படையினர்) முன்னதாக, யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் நேற்று முன் தினம் இரவு 388 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 13 பேருக்கும், இதேபோன்று, யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இவ்வாறு யாழ்.மாவட்டத்தை சேர்ந்த மேலும் 14 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்த அடிப்படையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் யாழ். மாவட்டத்தில் 57 பேர் உட்பட வடக்கில் மேலும் 66 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.