கொரோனாவால் உயிரிழப்பவர்களின் உடல்களை மன்னாரில் அடக்கம் செய்ய எதிர்ப்பு

கொரோனா வைரஸினால் உயிரிழக்கும் முஸ்லீம்களின் சடலங்களை அடக்கம் செய்ய மன்னார் மாவட்டத்தைப் பயன்படுத்தினால் குழப்பங்களுக்கே அது வழிவகுக்கும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

அதற்கு மாறாக அந்தந்த மாவட்டங்களில் பொது இடங்களில் இறந்த உடல்களை புதைப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கினால் சிறந்தது என்றும் கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட எம்.பி சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

“கொரோனா வைரஸினால் உயிரிழக்கின்ற முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதியளித்ததாக ஊடகங்களில் கண்டேன். ஆனால் மன்னார் மாவட்டத்தில் அடக்கம் செய்ய இடங்கள் கணிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரே இதற்கான யோசனையை முன்வைத்திருப்பதாகவும் அறியமுடிந்தது. மன்னார் தீவு கடலால் சூழப்பட்டிருப்பதை பாதுகாப்பு செயலாளர் சுட்டிக்காட்டியதாக அறிகிறேன். இலங்கையை சுற்றிலும் கடல்தான் உள்ளது.

இந்த நடவடிக்கை இடம்பெற்றால் குழப்பத்திற்கே வழிகோலும். அந்த தீர்மானத்தை நான் எதிர்க்கின்றேன். அந்தந்த மாவட்டங்களில் பொதுவான இடங்களில் அடக்கம் செய்ய அனுமதிக்கும்படி கோருகிறேன்” – என்று தெரிவித்தார்.