கிழக்கில் தமிழர்களின் இனப் பரம்பலை திட்டமிட்டு குறைத்த அரசாங்கம் -கோவிந்தன் கருணாகரம்

கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்டு தமிழர்களின் இனப்பரம்பலை கடந்த காலத்தில் குறைத்த அரசாங்கம், இன்று இறுதியாக 74வீதம் தமிழர்கள் வாழும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் இனப்பரம்பலை குறைப்பதற்காக மிகவும் சாதுரியமாக தங்களது காரியங்களை எல்லைப்புறங்களில் அரங்கேற்றி வருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்  குற்றம்சுமத்தியுள்ளார்.

IMG 0087 கிழக்கில் தமிழர்களின் இனப் பரம்பலை திட்டமிட்டு குறைத்த அரசாங்கம் -கோவிந்தன் கருணாகரம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரடியனாறு,கதிரவன் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் கலாசார விளையாட்டு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கு கிழக்கிலே எத்தனையோ திறமையானவர்கள் இருந்தும் மாறிமாறி இந்த நாட்டை ஆண்ட அரசுகளினால் எமது இனம் புறக்கணிக்கப்பட்டு இரண்டாந்தரப் பிரஜைகளாகவே நடத்தப்பட்டுக்கொண்டு வருகின்றனர்.

IMG 0055 3 கிழக்கில் தமிழர்களின் இனப் பரம்பலை திட்டமிட்டு குறைத்த அரசாங்கம் -கோவிந்தன் கருணாகரம்

இன்று இந்த நாட்டில் தமிழர்களுக்கு மட்டுமல்ல நாட்டின் அனைத்து மக்களுக்கும் இந்த அரசாங்கம் அநியாயம் இழைத்துவருகின்றது. எதிர்த்துப் பேசுபவர்கள் சிறைப்பிடிக்கப்படுவது மாத்திரமல்லாமல் பிணையெடுக்க முடியாதளவிற்கு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

தமிழினம் கடந்த காலங்களில் பலவகையிலும் துன்புறுத்தப்பட்டு அகிம்சைப் போராட்டம் நடத்தி பின்னர், ஆயுதப்போராட்டம் நடத்தினர். ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டு 12வருடங்களாகின்றது. தமிழ்த் தேசியபக் கூட்டமைப்பும் தேசியம் சார்ந்த கட்சிகளும் ஜனநாயக ரீதியாக இராஜதந்திர ரீதியாக எமது மக்களின் உரிமைகளை பெறுவதற்கு போராடிக்கொண்டிருக்கின்றோம்.

2015ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டின் தொடக்கம் வரை இந்த நாட்டில் நல்லாட்சி என்று கூறிக்கொண்ட ஒரு ஆட்சி நடைபெற்றது. அந்த ஆட்சியில்கூட எமது மக்களின் உரிமைகள் பெறப்படவேண்டிய நிலை இருந்திருந்தாலும் அங்கேயிருந்த அதிகாரப் போட்டியினால் அது தடுக்கப்பட்டது. அமையவிருந்த புதிய அரசியலமைப்பு இல்லாமல் ஆக்கப்பட்டது.

2019ஆம் ஆண்டு ஆரம்பம் தொடங்கி மீண்டும் இராஜபக்ச சகோதரர்களின் ஆட்சி நடைபெற்று வருகின்றது. அவர்களின் நீண்டகால திட்டமாக எமது பிரதேசத்தை குறிப்பாக கிழக்கு மாகாணத்தை கபளீகரம் செய்வதற்கு முயற்சி செய்துகொண்டு இருக்கின்றார்கள்.

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களிலிருந்து ஏற்கனவே மாகாணசபைக்கும் நாடாளுமன்றத்திற்கும் பிரதிநிதிகள் செல்லக்கூடியளவிற்கு இந்த நாடு சுதந்திரமடைந்த காலத்திலிருந்து குடியேற்றங்களை செய்து பெரும்பான்மை இனப்பரம்பலை அங்கு அதிகரித்திருக்கின்றார்கள்.

இறுதியாக 74வீதம் தமிழர்கள் வாழும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் இனப்பரம்பலை குறைப்பதற்காக மிகவும் சாதுரியமாக தங்களது காரியங்களை எல்லைப்புறங்களில் அரங்கேற்றி வருகின்றார்கள்.

பொலன்னறுவை எல்லையிலிருந்து மயிலத்தமடு, மாதவனை, கார்மலை, மேய்ச்சல்கல், வெட்டிப்போட்ட சேனை, கெவிலியாமடு என அம்பாறை வரை எமக்கான மேய்ச்சற்தரைகளை அம்பாறை, பொலன்னறுவை மாவட்டங்களிலிருந்து வருகை தந்த சிங்கள பெரும்பான்மையினருக்கு சேனைப் பயிர்ச்செய்கைக்கும் மரமுந்திரிகை செய்கைக்கும் என இரண்டு ஏக்கர், மூன்று ஏக்கர் என காணிகளை பகிர்ந்தளித்து எதிர்காலத்திலே குடியேற்றுவதற்கான திட்டங்களை தீட்டிக்கொண்டிருக்கின்றனர்.

1993ஆம் ஆண்டு கல்முனை வடக்கு பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டது. 40ஆயிரம் தமிழர்கள் இந்த பிரதேச செயலகத்தில் வாழ்கின்றனர். 29கிராம சேவகர் பிரிவுகள் அங்கிருக்கின்றன. 28வருடங்களாக நடைபெற்று வருகின்ற பிரதேச செயலகத்திலே இன்றிருக்கின்ற பிரதேச செயலாளர் உட்பட ஒன்பது பிரதேச செயலாளர்கள் கடமையாற்றியிருக்கின்றார்கள்.

பிரதேச செயலாளர் உட்பட 135 உத்தியோகத்தர்கள் கடமை புரிந்து வருகின்றனர். பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் தொடர்ச்சியாக அந்த பிரதேச செயலகத்தில் நடைபெற்றுவருகின்றன.

ஆனால் அந்தப் பிரதேச செயலகம் இன்று உபபிரதேச செயலகமாக தரமிறக்கப்பட்டிருப்பதாக கடிதம் மூலம் அம்பாறை மாவட்ட செயலகத்திற்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த கல்முனையை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் அவர்களின் அழுத்தம் காரணமாக அந்தப் பிரதேச செயலகம் தரமிறக்கப்பட்டிருக்கின்றது.

கல்முனையில் வாழும் முஸ்லிம் இனத்திற்கு அவர் ஏதாவது செய்ய வேண்டுமானால் இன்னுமொரு இனத்திற்கு கிடைக்கும் வரப்பிரசாதத்தை அழித்து கொடுக்குமளவிற்கு அவர் இருக்கின்றார்.

கடந்த தேர்தலில் அவர் வென்றது எதிர்க்கட்சியிலாகும். எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வெளியிலிருந்து 20ஆவது திருத்தச் சட்டம் நாடாளு மன்றத்திற்கு வரும்போது அரசாங்கத்திற்காக கைகளை உயர்த்தி இன்று தமிழர்களுக்கு எதிராக அந்தப் பிரதேச செயலகத்தை தரமிறக்கம் செய்கின்றார் என்றால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அரசுடனே இருந்து அரசகட்சியுடனே சேர்ந்து தேர்தலில் போட்டியிட்ட மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசிற்கு தேவையில்லையா? இதனை அவர்கள் அரசிடம் கேட்க வேண்டும்.

சிறீலங்கா பொதுஜன பெரமுன மூலமாக தெரிவு செய்யப்பட்ட தம்பி வியாழேந்திரன் அவர்களும், என்னைப்போல போராட்டத்தில் இணைந்திருந்து இன்று பாராளுமன்ற உறுப்பினராக வந்திருக்கின்ற தம்பி சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களும் இந்த அரசாங்கத்துடன் இணைந்து வேலை செய்கின்றனர். உங்களை நான் குற்றம் சாட்டவில்லை. நாடாளுமன்றத்திலே இருக்கக்கூடிய விரல்விட்டு எண்ணக்கூடிய சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் நானும் ஒருவன். அந்தவகையில் இந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் நான் கூறும் அறிவுரை அவர்கள்  அரசாங்கத்திடம் இது பற்றி கேட்க வேண்டும்.

எதிர்க்கட்சியிலே இருந்து 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு கைகளை உயர்த்தி உங்களுக்கு ஆதரவளித்த ஹரிஸ் உங்களுக்குத் தேவையா, அல்லது உங்களுடனே இருந்து அமைச்சுப் பதவியையும் அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவியையும் பெற்றிருக்கின்ற நாங்கள் உங்களுக்குத் தேவையா என்பதை நீங்கள் அரசாங்கத்திடம் கேட்க வேண்டும்.

தமிழர்களுக்கு எதிராக நடக்கின்ற அநியாயங்களை தட்டிக் கேட்க வேண்டும். எங்களுக்கு அபிவிருத்தி வேண்டும். கடந்த 30வருடத்திற்கும் மேலான யுத்தத்தில் பாதிக்கப்பட்ட இனம் நாங்கள். எங்களுக்கு அபிவிருத்தி வேண்டும். அபிவிருத்தி என்பது வெறும் கொங்கிறீட் வீதிகளை அமைப்பதோ ஆடு,மாடுகளை கொடுப்பதோ, அல்லது சிறிய தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதோ அல்ல. எமது மண் பறிபோவதை தடுக்க வேண்டும்.

கடந்த காலங்களிலே கே.டபிள்யு.தேவநாயகம் இந்த தொகுதியை பிரதிநிதித்துவப் படுத்தியவர். அவர் ஐக்கிய தேசியக் கட்சி அரசிலே இருந்தபோது குடும்பிமலைப் பிரதேசத்தில் விகாரையொன்றை அமைப்பதற்கு ஒரு பிக்கு வந்தபோது தனது ஆதரவாளர்களை அங்கு கூட்டிச்சென்று அவர்களை அடித்து விரட்டினார். அதேபோல் இன்று இந்த அரசிலே இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றீர்கள்.

ஈரளக்குளம் பிரதேசத்தில் 400ஏக்கரில் ஒரு பௌத்த மத்தியஸ்தானம் அமைக்கவிருப்பதாக அறிகின்றோம். இதற்கு எதிராக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாகிய நாங்கள் குரல் கொடுக்கின்றோம். எங்களுக்கு உதவியாக எங்களுடன் இணைந்து இங்கு மேற்கொள்ளப்படும் குடியேற்றங்களை தடுப்பதற்காக குரல்கொடுக்க வேண்டும். அபிவிருத்தியையும் செய்ய வேண்டும், எமது மக்களுக்கு எதிராக நடக்கும் அநியாயங்களையும் நீங்கள் தட்டிக்கேட்க வேண்டும் என்பதே எனது பணிவான வேண்டுகோளாகும்.

பௌத்த விகாரைகள் பௌத்தர்கள் வாழும் இடத்திலே அமைய வேண்டும். பௌத்த தொல்பொருள் சம்பந்தமான விடயங்கள் எங்கும் இருக்கலாம். அதற்காக உங்களுக்கு 100ஏக்கர், 200ஏக்கர், 400ஏக்கர் நிலம் தேவையில்லை.

பொலன்னறுவையிலும் அநுராதபுரத்திலும் இந்து மன்னர்கள் ஆண்ட காலங்களில் அவர்களால் விட்டுச்செல்லப்பட்ட எச்சங்கள் இப்போதும் இருக்கின்றன. அந்தப் பிரதேசங்களிலே நீங்கள் 50ஏக்கரையோ 100ஏக்கரையோ ஒதுக்கி இந்து மதஸ்தானங்கள் அமைப்பதற்கு நீங்கள் தயாரில்லை. ஏனென்றால் நீங்கள் தமிழினத்தை அடக்கி ஒடுக்கி வாழ்வதற்காக, பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளை பெறுவதற்காக ஆட்சி செய்கின்றீர்கள்.

நீங்கள் இப்படித்தான் செய்வீர்கள். ஆனால்; நாங்கள் ஒன்றாக இருக்க வேண்டும். தமிழ் மக்கள் ஒன்றாக இருக்காவிட்டால் இன்று புத்தளம், சிலாபம், உடப்பு இருப்பதுபோல எதிர்காலத்தில் எமது சந்ததியினர் தமிழ் பெயருடன் இருப்பார்கள், ஆனால் தமிழ் பேச முடியாத சிங்கள மொழிமூலம் படித்த சிங்கள கலாசாரத்தில் வாழக்கூடிய நிலைமைக்கு இந்த நாடு கொண்டுவந்துவிடும்” என்றார்.