கிழக்கில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

கிழக்கு மாகாணத்தின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 257ஆக அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.

அக்கரைப்பற்று பிரதேசத்தில் 32பேரும் அட்டாளைச்சேனையில் 06பேரும் ஆலையடிவேப்பு பகுதியில் ஒருவரும் வாழைச்சேனை பகுதியில் 04பேரும் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர்  கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

அக்கரைப்பற்று பொதுச்சந்தையுடனும் பேலிகொட மீன்சந்தையுடனும் தொடர்புபட்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புகொண்டவர்களே அதிகளவில் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதுவரையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 138பேர்கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 92பேரும் அம்பாறை சுகாதார பிரிவில் 11பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 16பேரும் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

அக்கரைப்பற்று பொதுச்சந்தையுடன் தொடர்புபட்ட 109பேர் இதுவரையில் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் அக்கரைப்பற்று பொதுச்சந்தையுடன் தொடர்புபட்டவர்கள் தொடர்பான தகவல்களை பொதுச்சுகாதார பிரிவினருக்கு வழங்குமாறும் கொழும்பு உட்பட பிற இடங்களில் இருந்து வருகைதருவோர் தொடர்பிலும் பொதுமக்கள் விழிப்பாக இருந்து சுகாதார மற்றும் பாதுகாப்பு துறையினருக்கு தகவல்களை வழங்கவேண்டும்” என்றார்.