அவியுமா அமித் ஷாவின் பருப்பு– வேல் தர்மா

இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம், சதிஸ்கர், ஜார்கண்ட், கேரளா, மஹாராஸ்ட்ரா, ஒடிசா, தெலங்கானா, மேற்கு வங்கம் ஆகிய முக்கிய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) ஆட்சி நடக்கவில்லை.

இந்தியப் பொருளாதாரத்தை பாஜகவின் பிடியில் வைத்திருக்க மஹராஸ்ட்ரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அதன் ஆட்சி நடக்க வேண்டும். இந்த மூன்று மாநிலங்களும் இந்தியாவில் பொருளாதார அடிப்படையில் பெரிய மாநிலங்களாகும்.

தளபதி அமித் ஷா

குஜராத்தில் மூன்று தடவைகள் பாரதிய ஜனதாக் கட்சியை ஆட்சியில் அமரச் செய்து புகழ் பெற்ற நரேந்திர மோடியின் தளபதியாக விளங்கியவர் அமித் ஷா. மோடி இந்தியாவின் தலைமை அமைச்சராகிய போது, மாநில அரசியல்வாதியாக இருந்த அவர், 2014ஆம் ஆண்டு பாஜகவின் தேசியத் தலைவரானார். தற்போது மோடியின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகவும் இருக்கின்றார். மாணவப் பருவத்திலேயே மதவாத ஆர் எஸ் எஸ் அமைப்பில் இணைந்த அமித் ஷா, தனது 33ஆவது வயதில் குஜராத் சட்ட சபை உறுப்பினரானார். அதைத் தொடர்ந்து பாஜகவின் தேர்தல் கடமைகளில் முக்கிய பங்கு வகித்தார். அவரது ஆரம்ப கால அரசியல் செயற்பாடே காங்கிரசுக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்களைச் சந்தித்து அவர்களை பாஜக பக்கம் இழுத்து பாஜகவின் உறுப்பினராக்குவதே. அதை குஜராத் முழுவதும் வெற்றிகரமாக செயற்படுத்தியதால், குஜராத் மாநிலத்தில் 2001ஆம் ஆண்டு காங்கிரசுக் கட்சி ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு, பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது.

தேர்தலில் வெற்றி பெற்ற எதிர்க்கட்சியினரை பெரிய அளவில் கட்சி மாறச் செய்வதிலும் திறன் மிக்கவர் அமித் ஷா. இதற்காக அவர் பஞ்சதத்திரத்தில் கூறப்படும் சாம, பேத, தான, தண்டம் ஆகியவற்றை பயன்படுத்துவார் எனச் சொல்லப்படுகின்றது. இந்தியாவில் ஆட்சியில் இருக்கும் கட்சியில் இருப்பவர்கள் வருமான வரித்துறை, சிபிஐ என்னும் சட்ட அமுலாக்கத் துறை மற்றும் பல உளவுச் சேவைகளை தமது தேவைகளுக்காக பயன்படுத்துவார்கள் என்ற குற்றச்சாட்டும் பரவலாக உண்டு. ஒரு நடிகர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக இல்லாவிடில் அவரது வீட்டில் வருமான வரி திடீர் சோதனை, அவரது திரைப்படத்திற்கான தடை போன்றவை மேற்கொள்ளப்படுவதாகவும் நம்பப்படுகின்றது.

மேற்கு வங்காளம்

மேற்கு வங்கத்தில் 2016ஆம் ஆண்டு நடந்த சட்ட சபைக்கான தேர்தலில் 294 தொகுதிகளில் பாஜகவால் மூன்று தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற முடிந்தது. ஆனால் 2019ஆம் ஆண்டு நடந்த இந்திய நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் மேற்கு வங்கத்தின் 42 தொகுதிகளில் 18இல் பாஜக வெற்றி பெற திரிணாமுல் காங்கிரசுக் கட்சி 22 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மேற்கு வங்கத்தில் மம்தா பனர்ஜீ தலைமையிலான திரிணாமூல் காங்கிரசின் ஆட்சியை முடிவிற்கு கொண்டு வர அமித ஷா மாதம் இரண்டு தடவையும், பாஜகவின் செயற் தலைவர் ஜே பி நட்டா மாதம் மூன்று தடவையும் மேற்கு வங்கத்திற்கு பயணம் செய்வதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பாஜகவின் சதிகள் நிறைந்த தலையீட்டின் பின்னர் மேற்கு வங்க அரசியலில் இனவாதமும் மதவாதமும் அங்கு தீவிரமடைந்து வருகின்றது. திரிணாமூல் காங்கிரசில் உள்ள இந்து மதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசியல்வாதிகள் அக்கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைகின்றார்கள். அதேவேளை சோனியாவின் காங்கிரசுக் கட்சியில் உள்ள இஸ்லாமியத் தலைவர்கள் அதில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரசில் இணைகின்றார்கள். இந்த இரு வகையான தாவல்களில் 2021 ஏப்ரல் மாதம் நடக்க விருக்கும் மேற்கு வங்க சட்ட சபைக்கான தேர்தல் முடிவுகள் தங்கியிருக்கின்றன.

கேரளா

கேரளாவின் சட்டசபைக்கான தேர்தல் 2021 ஜூன் மாதம் நடக்கவிருக்கின்றது. 2016ஆம் ஆண்டு நடந்த கேரள சட்ட சபைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி 14% வாக்குகளைப் பெற்றிருந்த போதும், 140 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டும் அது வெற்றி பெற்றது. 2019ஆம் ஆண்டு நடந்த இந்தியப் பாராளுமன்றத்திற்கான தேர்தலில் பாஜக கூட்டணி அமைத்து இருபது தொகுதிகளிலும் போட்டியிட்ட போதும், ஒரு தொகுதியிலும் வெற்றிபெறவில்லை. அதன் பின்பு பாஜக கேரளாவில் அதிக கவனம் செலுத்தி வருகின்றது. என்றாலும் 2021 ஜூனில் நடக்கவிருக்கும் தேர்தலில் சில தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற வாய்ப்புண்டு.

தமிழ்நாடு

2021 மே மாதம் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்ட சபைத் தேர்தலில் பாஜக ஆட்சியைக் கைப்பற்ற முடியாது என்றாலும், கணிசமான தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என பாஜக உறுதியாக நிற்கின்றது. அதற்காக பல திரையுலகப் பிரபலங்களை தமது கட்சியில் இணைக்க திட்டமிட்டுள்ளது. அண்ணா திமுகவுடன் கூட்டணி அமைப்பதும், அறுபது தொகுதிகளில் போட்டியிடுவதும் அதன் முதல் இலக்கு. பின்னர் மாற்றுக் கட்சிகளின் சட்ட மன்ற உறுப்பினர்களில் 20விழுக்காட்டுக்கு அதிகமான உறுப்பினர்களை பாஜகவிற்கு தாவச் செய்து கட்சியைப் வலிமையக்குவதும், ஆட்சியைப் பிடிப்பதும் பாஜகவின் அடுத்த இலக்கு. அதை மனதில் கொண்டு அமித் ஷா 2020 நவம்பர் 21ஆம் திகதி தமிழ்நாடு சென்றுள்ளார். அண்ணா திமுக இருபது தொகுதிகளுக்கு அதிகமான தொகுதிகளை பாஜகவிற்கு கொடுக்க தயாரில்லை. அண்ணா திமுகவின் உயர் மட்டத்தில் இருப்பவர்கள் தாம் சேர்த்து வைத்துள்ள சொத்துக்களுக்கு எதிராக வருமான வரித்துறை பாயாமல் இருக்க சில விட்டுக் கொடுப்புக்களைச் செய்ய தயாராக இருக்கின்றார்கள். ஆனால் அண்ணா திமுகவின் இடைநிலைத் தலைவர்களும் தொண்டர்களும் 2019ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டும் தாம் வெற்றி பெற்றதற்கு பாஜகவுடன் அண்ணா திமுக அமைத்த கூட்டணிதான் காரணம் என நம்புகின்றார்கள்.

அமித் ஷாவின் தமிழ்நாட்டு வியூகம்

பாஜகவின் முதலாவது திட்டம் திமுகவை தேர்தலில் வெற்றியடையாமல் செய்ய வேண்டும். இரண்டாவது அண்ணா திமுகவை அடுத்துக் கெடுக்க வேண்டும். 2021 தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தலில் பாஜகவால் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பது அமித் ஷாவிற்கு தெரியும். திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட கருணாநிதியின் மூத்த மகனான முக அழகிரியை இரண்டாவது மகன் மு க ஸ்டாலினிற்கு எதிராக திருப்பவும் அமித் ஷா முயல்கின்றார். திமுகவின் தேர்தல் வெற்றிகளுக்கு காரணமாக இருக்கும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வேலைகளை இல்லாமற் செய்ய வேண்டும். திமுகவில் இருந்து சிலரை கட்சி தாவச் செய்ய வேண்டும். இவற்றின் மூலம் திமுகவை வெற்றியடையாமல் தடுக்க வேண்டும். 2026ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்னர் நடக்க விருக்கும் தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தலில் கழகங்களில் இருந்து முக்கிய தலைவர்களைப் பிரித்து பாஜகவுடன் இணைத்தும் பாட்டாளி மக்கள் கட்சி போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும் போட்டியிட்டு தமிழ்நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றுவது அமித் ஷாவின் வியூகத்தில் முக்கிய இடம் பெறும் என்பதில் ஐயமில்லை.

குஜராத்தில் கட்சித் தொண்டனாக இருந்து ஊர் ஊராகச் சென்று பாஜக அரசை அமைத்தது போல் தமிழ்நாட்டில் செய்ய உள்துறை அமைச்சர் அமித ஷாவிற்கு நேரமில்லை. இந்தியா முழுவதும் மட்டுமல்ல கஷ்மீர் எல்லைகளிலும் அவரது கவனம் சிதறிக் கிடக்கின்றது. தமிழ்நாட்டுக்கு மாதம் இரண்டு தடவை பயணம் செய்யவும் வாய்ப்பில்லை. எஸ் வி சேகர், எச் ராஜா,வை ஜீ மகேந்திரனின் மகள் போன்றவர்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டை பாஜக கைப்பற்றும் வாய்ப்பு இல்லை.