காணி விடுவிப்பு விடயத்தில் அரசாங்கம் தமிழர்களை ஏமாற்றுவதாக கஜேந்திரகுமார் சாடல்

வலி வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவிக்கிறோம் என்று கூறி தமிழ் மக்களை அநுர அரசாஙகம் ஏமாற்றி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

வலி வடக்கு விடுவிக்கப்படாத தனியார் காணிகள் தொடர்பில் அமைச்சர் சந்திரசேகர் அண்மையில் தெரிவித்த கருத்து தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது ஜனாதிபதியாக இருக்கின்ற அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் வந்தபோது பாதுகாப்பு தரப்பினரிடம் இருக்கின்ற மக்களின் காணிகள் மக்களுக்கு வழங்கப்படும் என்று உறுதிமொழி வழங்கினார்.

உறுதிமொழி வழங்கி இரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் மக்களின் காணிகள் மக்களிடம் ஒப்படைக்கப்படாத நிலையில் ஏமாற்றப்பட்ட மக்கள் தையிட்டி, பலாலி, வசாவிளான், மயிலிட்டி என தொடர்ச்சியாக நான்கு இடங்களில் ஒவ்வொரு வாரமும் போராட்டங்களை நடாத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி தலைமையில் வலி வடக்கு காணி விடுவிப்பு தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்ட நிலையில் கடந்த செப்டெம்பர் மாத இறுதிக்குள் சாதகமான முடிவு கிடைக்கும் என்று அரசாங்கத்தின் அமைச்சரான இராமலிங்கம் சந்திரசேகர், கருத்து தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும் குறித்த காணி இதுவரையில் விடுவிக்கப்படவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தாம் அறிந்த வகையில் வலி வடக்கில் இன்னும் விடுவிக்கப்படாமல் சுமார் 2000 ஏக்கருக்கு மேற்பட்ட தனியார் காணிகள் உள்ள நிலையில் அவற்றில் சில ஏக்கர்களை மட்டும் விடுவித்து மக்களை ஏமாற்றும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று பலாலி தனியார் காணிகளில் சட்டவிரோதமாக கட்டப்பட்டு வருகின்ற பலாலி இராணுவ வைத்தியசாலையின் கட்டுமானங்களை நிறுத்துமாறு யாழ். மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்மானம் எடுத்திருந்தது.

ஆனால் தீர்மானத்தை மீறி அரசாங்கம் தனியார் காணிக்குள் இராணுவ வைத்தியசாலையின் கட்டுமானங்களை மிக துரிதமாக மேற்கொண்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் வாக்குகளை அபகரிப்பதற்காக தேர்தல் காலங்களில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் வலி வடக்கு மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

30 வருடங்களாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து 17 வருடங்களை கடக்கின்ற நிலையில் வலி வடக்கு மக்கள் தமது பூர்வீக நிலங்களுக்குள் செல்ல முடியாத துர்ப்பாக்கிய நிலையில் வாடகை வீடுகளில் வாழ்ந்து வருகிறார்கள்.

அந்த மக்களுடைய வளமான விவசாயக் காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு பாரிய இலாபங்களை ஈட்டி வருகிறது.

இராணுவத்தினரால் தமிழ் மக்களுடைய காணிகளில் விவசாய நடவடிக்கைகளில் பெறப்படும் வருமானம் திறைசேரிக்கு செல்கிறதா? அல்லது வலி வடக்கில் இராணுவ விரிவாக்களுக்கு பயன்படுத்தப்படுகிறதா? என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆகவே வலி வடக்கு தனியார் காணிகளை விரைவாக விடுவிப்பதோடு மக்களை ஏமாற்றுவதற்காக சில ஏக்கர்களை மட்டும் விடுவித்து ஏமாற்ற வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.