இலங்கையின் மலையகத் தமிழ் மக்களின் நீண்டகால அபிலாஷைகளான சொந்தக் காணி உரிமை, பாதுகாப் பான வீடமைப்பு, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியவை மீண்டும் நாட்டின் முதன்மை அரசியல் உரையாடலாக உருவெடுத்துள்ளன. அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடனும், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியுடனும் மலையக அரசியல் தலைவர்கள் நடத்திய தொடர் உயர்மட்டச் சந்திப்புகள், இந்த சமூகத்தின் அவசரத் தேவைகளையும் அவர்கள் எதிர்கொள்ளும் நிர்வாகச் சவால்களையும் மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளன.
ஜனாதிபதி செயலகத்தில் ஒருமித்த வலியுறுத்தல்
பொது விடயங்களில் ஒன்றிணைந்து செயல்படும் நோக் கில் கூட்டிணைந்த தமிழ் முற்போக்கு கூட்டணி (TPA), இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC), இலங்கைத் தமிழரசுக் கட்சி (ITAK), ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA), அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) மற்றும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) ஆகிய ஆறு முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசினர். இச்சந்திப்பின் போது தமிழ் முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகளால் ஒருமனதாக மூன்று பிரதான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இதன்படி, அனைத்து இனங்களின் சமத்துவத்தை யும் அதிகாரப் பகிர்வையும் உறுதிப்படுத்தும் புதிய அரசியல மைப்பை உருவாக்குதல். மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்துதல். வடக்கு-கிழக்கு மற்றும் மலையக மக்களுக்கு நீண்டகாலமாக நிலவி வரும் காணி உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு வழங்குதல் ஆகிய மூன்று விடயங்களை பிரதானமாகக் கொண்டு அவர்கள் தங்களது கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைத்திருந்தனர். இக்கலந்துரையாடலின் போது மலையகப் பிராந்தியம் மற்றும் பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகள் குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள் மிக விரிவாக விடயங்களை முன் வைத்ததுடன் மலையக பெருந்தோட்ட மக்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் உடனடி தேவைகள் குறித்தும் அவர்கள் எடுத்துரைத்திருந்தனர்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் இந்த சந்திப்பில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் மற்றும் அந்த கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான துணைத் தலைவர் பரத் அருள்சாமி ஆகியோர், அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் “அட்டன் பிரகடனத்திலும்” வாக்குறு
தியளிக்கப்பட்டவாறு மலையக மக்களுக்கு 10 பேர்ச் காணிகளை வழங்கும் திட்டத்தை துரிதகதியில் நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். பெருந்தோட்டக் கம்பனிகளின் தன்னிச்சையான நடவடிக் கைகளும், சில அரச நிறுவனங்களின் பொறுப்பற்ற அணுகுமுறைகளும் மக்களைக் கடுமையாகப் பாதித்து வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.
மாகாண சபைகள் வடக்கு மற்றும் கிழக்கிற்கு மட்டுமல்லாது, நாட்டின் பல மாவட்டங்களில் சிதறி வாழும் மலையக தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை உறுதிப்படுத்தவும், அவர்களின் அபிவிருத்தி மற்றும் உட் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தவும் இன்றியமையாத நிர்வாகக் கட்டமைப்பாகும் என்ற விடயத்தையும் இராதாகிருஷ்ணன் எடுத்துரைத்தார். நல்லாட்சி அரசாங்கத் தின் காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களை சுட்டிக்காட்டிய பரத் அருள்சாமி, ‘தித்வா’ பேரழிவாலும், அண்மைய அடைமழையாலும் பாதிக்கப்பட்ட வட்ட வளை, நாவலப்பிட்டி, அக்கரப்பத்தனை போன்ற பகுதிகளில் வாழும் குடும்பங்களின் அவல நிலையை விவரித்தார்.
காணி உரிமையற்ற சமூகங்கள் இயற்கை அனர்த்தங்களுக்கு எவ்வளவு மோசமாக உள்ளாகின்றன என்பதற்கு இதுவே சான்றாகும் எனக்கூறி, அவர்களுக்கான நிரந்தர வீடமைப்பை அவசர முன்னுரிமையாகக் கருத வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அதேநேரம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், இந்திய உதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் வீட்டுத் திட்டங்களின் கீழ் வீடுகள் கிடைத்தபோதிலும், குடிநீர் மற்றும் மின்சாரக் கட்டணங்களைச் செலுத்துவது உள்ளிட்ட வசதிகளைப் பெற்றுக்கொள்வதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை மக்கள் எதிர்கொள்வதாகச் சுட்டிக்காட்டினார்.
தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களினது கோரிக்கைகளை கவனமாகக் கேட்டறிந்த ஜனாதிபதி, அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் குறித்து விளக்கமளித்தார். குறிப்பாக மக்களின் காணிகள் மக்களுக்கே சொந்தமாக வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். பெருந்தோட்டக் கம்பனிகளுடன் செய்யப்பட்டுள்ள குத்தகை ஒப்பந்தங்கள் 2042 ஆம் ஆண்டிற்கு முன்னர் புதுப்பிக்கப்பட வேண்டும் என்பதால், வெகுவிரைவில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய ஒப்பந்தங்களில் மலையக மக்களுக்கு நிலத்திற்கான சட்டபூர்வ உரிமையை வழங்கும் சரத்துகள் கட்டாயமாக உள்வாங் கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
அண்மைய காலங்களில் மக்கள் வசிக்காத மலையகப் பகுதிகளில் கூட நில வெடிப்புகள் பதிவாகி யுள்ளதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நிலத்தன்மையின் பாதுகாப்பை உறுதி செய்ய ‘மத்திய மலைநாட்டு அபிவிருத்தி அல்லது பாதுகாப்பு அதிகாரசபை’ ஸ்தாபிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். நிலத்தன்மையின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே நிரந்தர வீடமைப்புத் திட் டங்கள் அமுல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டி முடிக்கப்படும் வரை தற்காலிக குடியிருப்புகளும், வாடகை வீட்டுக் கொடுப்பனவுகளும் வழங்கப்படும்.
மேலும், மக்களுக்கு பொருளாதார நிவாரணம் வழங்கும் புதிய திட்டங்கள் உருவாக்கப்படும் என்றும், 2027 வரவு செலவுத் திட்டத்தில் இதற்கான நிதி ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்படும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியுடனான பேச்சுவார்த்தை
ஜனாதிபதியுடனான சந்திப்பு இவ்வாறிருக்க இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியை, கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் (India House) மலையக அரசியல் தலைவர்கள் தனியாகச் சந்தித்தனர். இந்த சந்திப்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்தின் போது அறிவிக்கப்பட்ட முன்முயற்சிகள் மற்றும் ‘தித்வா’ புயல் பாதிப்புகளுக்காக இந்தியா வழங்கிய 450 மில்லியன் அமெரிக்க டொலர் மீள்கட்டமைப்பு நிதியுதவியின் தற்போதைய முன்னேற்றம் குறித்து ஆராயப்பட்டது.
அத்துடன் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மலையகக் குடும்
பங்களுக்கு இந்திய அரசின் வீட்டுத் திட்டத்தை அரசாங்கம் தாமதமின்றி முழுமையாக நடைமுறைப்படுத்த வழிவகை செய்ய வேண்டும் என்று இந்திய வெளியுறவுச் செய லாளரிடம் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்தார். இதேவேளை, அரசாங்கம் உருவாக்கத் திட்டமிட்டுள்ள ‘மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபை’ என்ற புதிய நிலைப்பாடு காரணமாக, மக்களுக்கு காணி உரிமை கிடைப்பதில் புதிய சிக்கல்களோ தாமதங்களோ ஏற்பட்டு விடக் கூடாது என்ற கவலையை தமிழ் முற்போக்கு கூட்டணி யின் தலைவர் மனோ கணேசன் இந்திய செயலாளரிடம் சுட்டிக்காட்டினார்.
மலையக மக்களின் மீள்குடியேற்றமும் காணி உரிமையும் மேலும் தாமதிக்க முடியாத சமூக நீதி சார்ந்த பிரச்சினைகளாகும். நிர்வாக நடைமுறைகளையும் புதிய அதிகாரசபைகளையும் காரணம் காட்டி இச்செயல் முறையைத் தாமதப்படுத்தக் கூடாது என்பதும், அரசாங் கத்திடம் சட்டப்பூர்வ அதிகாரம் இருக்கும் நிலையில் தேவைப்படுவது வலுவான ‘அரசியல் மனஉறுதி’ மட்டுமே என்பதும் மலையகத் தலைமைகளின் தெளி வான நிலைப்பாடாகும் என்ற விடயமும் இந்த இரு சந்திப்புகளின் போதும் எடுத்துரைக்கப்பட்டது.
பல்வேறு உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் வாக்குறுதிகளுக்கு மத்தியில், இந்த நகர்வுகள் வெறும் காகித அளவிலான அறிவிப்புகளாக நின்றுவிடாமல், பல தலைமுறைகளாக நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் மலையக மக்களின் வாழ்வில் உண்மையான உரிமையையும் பாதுகாப்பையும் பெற்றுத் தருமா என்பதை காலமே தீர்மானிக்கும்.



