‘காணிகள் பகிர்ந்தளிப்பு சுதாகரிக்காவிடின் நிலம் பறிபோகும்’ -பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை

இளம் தொழில் முனைவோருக்குக் காணிகள் பகிர்ந்தளிக்க முன்னெடுக்கப்படும் திட்டம் குறித்து  அறிக்கை வெளியிட்டுள்ள பொ. ஐங்கரநேசன், “தமிழ்த் தரப்புகள் சுதாகரிக்காவிடின் நிலம் பறிபோகும் அபாயம் ஏற்படும்“ என  எச்சரித்துள்ளார்.

இது குறித்து தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

“இளம் தொழில்முனைவோர்களுக்கு ஒரு இலட்சம் காணித் துண்டுகளைப் பகிர்ந்தளிக்கும் திட்டம் ஒன்றைக் காணி முகாமைத்துவ அலுவல்கள் இராஜாங்க அமைச்சு முன்னெடுத்துள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் குறைவாகவே கிடைக்கப் பெற்ற நிலையில் விண்ணப்ப முடிவுத் திகதி நொவம்பர் 15ஆம் திகதி எனக் காலநீடிப்புச் செய்யப்பட்டுள்ளது. இதே போன்று, மகாவலி அதிகார சபையும் கைத்தொழில் முதலீட்டுச் செயற்திட்டத்துக்கு மகாவலிக் காணிகளை நீண்டகாலக் குத்தகைக்கு வழங்குவதெனத் தீர்மானித்து டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்பாக விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு அறிவித்துள்ளது.

இவற்றுக்கு எல்லாம் சிகரம் வைத்ததுபோல ஜனாதிபதியும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் தவிர்ந்த ஏனைய வனப்பிரதேசங்கள் அபிவிருத்திக்கு உட்படுத்தப் படவுள்ளன என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இவை நாடு அபிவிருத்திப் பாய்ச்சல் ஒன்றுக்குத் தயாராகின்றது என்பது போலத் தோற்றம் காட்டினாலும் சிங்களக் குடியேற்றம் ஒன்றுக்கான முன்னேற்பாடாகவே இவற்றைக் கருத வேண்டியுள்ளது. தமிழ்த்தரப்பு சுதாகரிக்காதுவிடின் எஞ்சியுள்ள நிலமும் பறிபோகும் அபாயம் உள்ளது.

இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள தொழில் முனைவோருக்கு காணித் துண்டுகள் வழங்கும் செயற்திட்டம் கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளத்தக்கதும் வரவேற்கத்தக்கதுமான ஒரு நிலச் சீர்திருத்தச் செயற்பாடு ஆகும். ஆனால், நடைமுறையில் கடந்த காலங்களில் அரசாங்கங்கள் மேற்கொண்ட காணிப் பங்கீடுகள் யாவும் அபிவிருத்தி என்ற பெயரில் இடம்பெற்ற சிங்களக் குடியேற்றத்திட்டங்களே ஆகும்.

கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற கல்லோயாத் திட்டம், அல்லை கந்தளாய்த் திட்டம், மகாவலி அபிவிருத்தித் திட்டங்கள் ஊடாக அரசாங்கம் அங்கு சிங்களக் குடியேற்றங்களை நிறுவி தமிழ் – சிங்கள மக்களின் இன விகிதாசாரத்தையே மாற்றி அமைத்துள்ளது.

வடக்குக்கு மகாவலியிலிருந்து ஒரு துளி நீர் தன்னும் இதுவரை கிடைக்காத நிலையிலும் மகாவலி அதிகாரசபை முல்லைத் தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் உள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான பெருந்தொகை வயற் காணிகளை மணலாற்றில் வலிந்து குடியேற்றியிருக்கும் சிங்கள மக்களுக்கு வழங்கியுள்ளது.

வடக்கில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட காணிகளில் ஒரு பகுதி விடுவிக்கப்பட்டாலும், அரசாங்கம் சூழல் பாதுகாப்பு என்ற பெயரில் பச்சை யுத்தம் ஒன்றைத் தொடுத்துப் பாரியளவு நிலப்பரப்பைப் பறித்து வைத்துள்ளது.

காடுபேண் கட்டளைச் சட்டத்தின் கீழ் கிளிநொச்சி, முல்லைத் தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் 5 இலட்சம் ஏக்கர்கள் புதிய ஒதுக்குக் காடுகளாகவும், மன்னார் மாவட்டத்தில் ஒரு இலட்சம் ஏக்கர்கள் புதிய பேணற் காடுகளாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

வன உயிரிகள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் நாகர் கோவில், நெடுந்தீவு சரணாலயங்களும் மன்னார் மாவட்டத்தில் மடு வீதி சரணாலயங்களும் சுற்றயற் பிரதேசங்கள் உள்வாங்கப்பட்டு ஏறத்தாழ இரண்டே முக்கால் இலட்சம் ஏக்கர்கள் அளவில் தேசியப் பூங்காக்களாக விஸ்தரிக்கப்பட்டுள்ளன.

இவை யாவற்றினுள்ளும் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த குடியிருப்புப் பகுதிகளும் வயற்காணிகளும்; அடங்கியுள்ளன.  மகாவலி அதிகார சபை, வனவளத் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களம் போன்றவற்றால் அரசாங்கம் பறித்த தங்கள் பூர்வீக நிலங்களை மீளத்தருமாறு கோரிப் பொதுமக்கள் போராட்டங்களை நிகழ்த்திவரும் நிலையிலேயே அரசாங்கம் தொழில் முயற்சியின் பெயரால் காணிகளைப் பகிர்ந்தளிக்கும் திட்டத்தை முன்மொழிந்துள்ளது.

இத்திட்டத்தில் தமிழ் மக்கள் தங்களை இணைத்துக் கொள்ளாவிடின் அரசாங்கம் மறைமுகமாக முன்னெடுக்கவிருக்கும் நிகழ்ச்சி நிரலை வெளிப்படையாகவே முன்னெடுக்கும் நிலை தோன்றிவிடும். இதனைக் கருத்திற் கொண்டு, எங்களது நிலம் பறிபோகாதிருக்க அரசாங்கம் அறிவித்துள்ள காணித்துண்டங்களுக்கு எம்மவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

இவ் விண்ணப்பங்களின் பரிசீலனையின்போது தமிழ் மக்கள் கடந்த காலங்களைப் போன்று பேரினவாதத்தின் இனமூழ்கடிப்புக்கு ஆளாகாது இருப்பதை தமிழ்மக்களின் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் எப்பாடுபட்டாயினும் உறுதி செய்தாக வேண்டும்” என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.