காணாமலாக்கப்பட்டோர் விவகாரம்- யாழ்,கிளிநொச்சி,மன்னார்,வவுனியாவில் போராட்டம்

இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும் இன்று  கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால், கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க அலுவலகம் முன்பாக போராட்டம் இடம்பெற்றது.

 இதன்போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த உறவுகள், தமது பிள்ளைகளின் நிலை தொடர்பில் சர்வதேசம் தான் தீர்வை பெற்று தர வேண்டும் என  கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேநேரம் மன்னாரிலும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

2 3 காணாமலாக்கப்பட்டோர் விவகாரம்- யாழ்,கிளிநொச்சி,மன்னார்,வவுனியாவில் போராட்டம்

 இதில் காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளை கண்டுபிடித்து தரக்கோரியும் காணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் சர்வதேச விசாரனை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட மன்னார் மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க இணைப்பாளர் மனுவல் உதயச்சந்திரா, “நாங்கள் தொலைத்தது விலை மதிக்க முடியாத எமது உறவுகளை. அவர்களை தொலைத்துவிட்டு இன்று அவர்களை நாங்கள் தேடிக்கொண்டு வீதிகளில் நிற்கின்றோம்.

எனவே சர்வதேச விசாரனை வேண்டும் என்றே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாங்கள் கேட்கின்றோம்” என்றார்.

அதே நேரம் வவுனியாவில் நடைபெற்ற போராட்டத்தில், காணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் சர்வதேச நீதியைப் பெற்றுத்தருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அத்தோடு, மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஜெனீவா கூட்டத்தொடரில் காணாமலாக்கப்பட்டோரின் விடயத்தில் கரிசனை கொள்ளப்படவேண்டும் என்றும்  கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில்,காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தாருங்கள் எனக் கோரி காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

இந்த போராட்டம், நல்லூர் கந்தன் ஆலய பின் பக்க வீதியில் அமைந்துள்ள நல்லை ஆதினம் முன்பாக  நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் போர் நடைபெற்ற காலங்களில் நுாற்றுக்கணக்கான தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர். அதைத் தொடர்ந்து இறுதிப் போரின் பின் பெற்றோரினால் இராணுவத்திடம் அவர்களது பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் கையளிக்கப்பட்டனர். அத்தோடு பலர் கைது செய்யப்பட்டனர்.

protest 1 7 scaled காணாமலாக்கப்பட்டோர் விவகாரம்- யாழ்,கிளிநொச்சி,மன்னார்,வவுனியாவில் போராட்டம்

ஆனால், அவ்வாறு கையளிக்கப்பட்ட,கைது செய்யப்பட்டு,கடத்தப்பட்டவர்கள் தொடர்பில் இது வரையில் எந்த தகவலும் அவர்களது உறவினர்களிடம் தெரியப் படுத்தப் படவில்லை.

இந்நிலையில், போர் முடிவுற்ற பின் காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் தமது உறவுகளை கையளிக்குமாறு இலங்கை அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து தமது போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால் அவர்களது கோரிக்கைகளுக்கான ஓர் சரியான பதிலை இலங்கை அரசு இதுவரையில் வழங்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.