கல்வியில் சாதனைகளை படைப்பதன் மூலமே தமிழ் தேசியத்தினை வேரூன்றச் செய்ய முடியும் மட்டு.நகரான்

வடகிழக்கு மாகாணத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து நாங்கள் பல்வேறு தளங்களில் பேசி வருகின்றோம். ஆனால் அந்தத் தளங்கள் எந்தளவுக்கு தமிழ்த் தேசியத்தில் செல்வாக்குச் செலுத்துகின்றன என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.

குறிப்பாக தமிழர்களின் காணி, நிலம், பொருளாதாரத்திற்கு முன்னோடியாக கல்வி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இன்று உணரப்படுகின்றது. கல்வியில் சாதனைகளை படைப்பதன் மூலமே எதிர்காலத்தில் தமிழ்த் தேசியத்தினையும் வேரூன்றச் செய்ய முடியும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

ஆனால் இந்த நம்பிக்கை தமிழர் பகுதிகளில் எந்தளவுக்கு விதைக்கப்படுகின்றது என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகின்றது. இன்று வடகிழக்கின் பல்வேறு செயற்பாடுகள் பல வழிகளிலும் புலம்பெயர் தேசங்களிலேயே தங்கியுள்ளதை நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.

625.147.560.350.160.300.053.800.264.160.90 5 கல்வியில் சாதனைகளை படைப்பதன் மூலமே தமிழ் தேசியத்தினை வேரூன்றச் செய்ய முடியும் மட்டு.நகரான்

அந்த வகையில், கல்வி முக்கியத்துவம் பெறுகின்றது. தமிழர்களின் கல்வி நிலையினை நவீன வகையில் கட்டியெழுப்ப வேண்டியது மிகவும் அவசியமாகின்றது. நாங்கள் வடகிழக்கினை பாதுகாப்பதற்கு ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற அதேவேளை, தமிழர் தாயகப் பகுதிகளில் கல்வி நிலையினையும் கட்டியெழுப்ப வேண்டிய கட்டாயத்தில் இன்று நிற்கின்றோம்.

இன்று வடகிழக்கின் கல்வி நிலையானது, மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றது. கல்வி நிலையென்று நாங்கள் நோக்கும்போது, பாடசாலைக் கல்வியை மட்டும் நோக்காமல், அனைத்து வகையான கல்வியையும் இணைத்து நோக்க வேண்டியது மிகவும் கட்டாயமாகும்.

இலங்கையினைப் பொறுத்தவரையில், கல்வியில் மிகவும் தூரமாக நின்ற சமூகம்; இன்று எம்மை முந்திச்செல்லும் நிலையில் முன்னால் நின்ற நாங்கள்; மிகவும் பின்தங்கிய நிலையில் செல்வது என்பது வடகிழக்கு தமிழர் தேசத்திற்கு உகந்த விடயமாக கொள்ள முடியாது.

வடகிழக்கு தமிழர்களின் கல்வி நிலைமைகள் தொடர்பில் நாங்கள் அனைவரும் ஒன்றாக சிந்திக்கும் நிலையேற்பட வேண்டும். குறிப்பாக வடகிழக்கில் உள்ள அனைத்துத் தரப்பும், புலம்பெயர்ந்துள்ள அனைத்துத் தரப்பும் இணைந்து இதற்கான பாதையினை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது.

302 கல்வியில் சாதனைகளை படைப்பதன் மூலமே தமிழ் தேசியத்தினை வேரூன்றச் செய்ய முடியும் மட்டு.நகரான்

குறிப்பாக இன்று கல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக புலம்பெயர் தமிழர்களின் பங்கு கணிசமானதாக இருக்கின்றது. புலம்பெயர்ந்து சென்றுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களின் பிள்ளைகள், கல்வி நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுக்கின்றனர் என்பது குறித்தான கண்காணிப்பு என்பது இங்கு மிகவும் அவசியமாகின்றது.

இன்று வெளிநாட்டில் இருந்து வரும் பணம், மற்றும் ஆடம்பரங்கள் தமிழரின் கல்வியைத் தொலைத்தும், கலை கலாசாரத்தினை இழக்கும் நிலைக்கும் அவர்களை தள்ளியுள்ளது. புலம்பெயர்ந்த உறவுகள் அனுப்பும் பணமானது, இங்கு மாற்றங்களை ஏற்படுத்துபவையாக இருக்கவேண்டுமேயொழிய அழிக்கும் நடவடிக்கைகளாக இருக்கக் கூடாது. இது தொடர்பில் இங்கு அலசுவது பொருத்தமாக இல்லாவிட்டாலும், கல்வி நடவடிக்கையில் இதுவும் தாக்கம் செலுத்துகின்றது.

வடகிழக்கினைப் பொறுத்தவரையில், வடக்கில் ஓரளவு கல்வி நிலையானது மேம்பட்டாலும் கிழக்கினைப் பொறுத்தவரையில், தமிழர்களின் கல்வி நிலையானது இன்னும் வீழ்ச்சி நிலையிலேயே உள்ளது. குறிப்பாக தமிழர்களின் கல்வி நிலையென்பது மிகவும் கவலைக்குரியதாகயிருக்கின்றது.

அண்மையில் பல்கலைக்கழக விரிவுரையாளரிடம் உரையாடியபோது, கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் கல்வி நிலை தொடர்பில் மிகவும் கவலையான விடயங்களைத் தெரிவித்தார். இன்னும் 10வருடங்களில் கிழக்கு மாகாணத்தின் உயர் பதவிகளில் மாற்று இனங்களைச் சேர்ந்தவர்கள் அமரும் வாய்ப்பிருக்கின்றது. இது எதிர்கால தமிழர்களின் இருப்புக்கு ஆபத்தானது என்ற கருத்தினை முன்வைத்தார்.

இன்று தமிழ் இளைஞர், யுவதிகள் உயர் கல்வியில் அக்கறையற்ற நிலையிலேயே இருக்கின்றனர். பல்கலைக்கழகத்தினைப் பூர்த்தி செய்த பின்னர், ஒரு அரசாங்க வேலையினைப் பெற்றுக்கொண்டு, தமது செயற்பாடுகளை மட்டுப்படுத்திக் கொள்ளும் நிலையே இருக்கின்றது. அதுமட்டுமன்றி, உயர்கல்வியுடன் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்திக் கொள்பவர்கள், தொழிற்கல்வியை நாடாது, தமது காலத்தினைக் கழிக்கும் நிலை தமிழர் பகுதிகளில் அதிகளவில் காணப்படுகின்றது.

இன்று தமிழர் பகுதிகளில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரிகள், உயர் தேசிய தொழில்நுட்பக் கல்விக் கல்லூரிகள், ஆசிரிய கல்வியியல் கல்லூரிகள், தொழிற்பயிற்சிக் கல்லூரிகள் ஆகியவற்றில் தமிழ் இளைஞர்கள், யுவதிகளைவிட ஏனைய இனத்தவர்கள் வாய்ப்புகளை அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

இதேபோன்று பாடசாலைக் கல்வியிலும் தமிழ் மாணவர்கள் தங்களது இலக்கினை அடைய முடியாமல் இருப்பது கவலைக்குரியது. குறிப்பாக உயர்தரப் பரீட்சையில் பெறப்படும் சித்திவீதம் இன்னும் அடிமட்ட நிலையிலேயே இருந்து வருகின்றது. இன்னும் தமிழர்களின் போராட்டங்கள் இடம்பெற்ற பகுதிகளில் கல்வி நடவடிக்கைகளை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் சரியான முறையில் திட்டமிட்டு முன்னெடுக்கப்படாமையே அதற்குக் காரணமாக அமைகின்றது.

அரசும், அரச அதிகாரிகளும் அனைத்துப் பகுதிகளையும் ஒரே கண்ணோட்டத்துடன் பார்த்து முன்னெடுக்கும் செயற்பாடுகளே இதற்கு காரணமாக அமைகின்றது. சில பகுதிகளில் பொது அமைப்புகளும், தமிழர் நலன்கொண்ட அதிகாரிகளும் முன்னெடுக்கும் செயற்றிட்டங்கள் வெற்றியளிக்கின்ற போதிலும், பல பகுதிகள் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றன.

உண்மையில் வடகிழக்கில் தமிழர்களின் கல்வி நடவடிக்கையினை கட்டியெழுப்பும் வகையில் இரண்டு மாகாணங்களிலும் உள்ள கல்வியியலாளர்களை ஒருங்கிணைத்து ஆய்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இந்த ஆய்வுகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும். எமது கல்வி நிலையினை உயர் நிலைக்கு கொண்டு செல்வதற்கான வளங்கள் காணப்படுகின்றன. ஆனால் தமிழர்கள் மத்தியில் உள்ள மனோநிலையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். எதிர்கால சமூகம் கல்வியின் மூலமே தமிழர்களின் இருப்பினை பாதுகாக்க முடியும் என்கின்ற உண்மை, எதிர்கால சமூகத்திற்கு ஊட்டப்பட வேண்டும்.

அதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து காலம் தாழ்த்தாது நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதற்கான வழிகளையும், உதவிகளையும் வழங்குவதற்கு பலர் தயார் நிலையில் இருக்கின்றனர். ஆனால் ‘பூனைக்கு யார் மணி கட்டுவது’ என்ற நிலைப்பாடே காணப்படுகின்றது.

தமிழர் தாயகத்தினை நாங்கள் மீளக் கட்டியெழுப்ப வேண்டுமானால், கல்வி என்பது அசைக்க முடியாத சொத்தாக காணப்படுகின்றது. இதனை உரியை முறையில் பாதுகாத்து, எதிர்கால சந்ததியை முன்கொண்டுசெல்ல தவறுவோமேயானால், எதிர்காலத்தில் நாங்கள் மேற்கொண்ட அனைத்துப் போராட்டங்களும் வீணான போராட்டங்களாகவே முடியும் நிலையுருவாகலாம். இதனை உணர்ந்து மணியை கட்ட அனைவரும் ஒன்றிணைந்து முன்வர வேண்டும். பாதிக்கப்பட்ட சமூகத்தில் இருந்து ஆய்வுகளை ஆரம்பிப்பதன் மூலம், எதிர்காலம் எமது மண்ணைப் பாதுகாக்கும் என்பது வரலாற்று உண்மையாகும்.