கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் – 5ஆவது நாளாக போராட்டம் முன்னெடுப்பு

7 1 கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் - 5ஆவது நாளாக போராட்டம் முன்னெடுப்புகல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்கு முறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் ஐந்தாவது நாளாக இன்று கவனவீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

அந்தப் பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை பொது மக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்று கூடி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக 5 ஆவது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5 ஆம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதாதையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்கு முறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிர்வாக அடக்கு முறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது எனவும் அரசு இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தனது அமைதிப் போராட்டம் தொடரும் என்றும் மக்கள் தெரிவித்தனர்.

இதேவேளை இன்று வெள்ளிக் கிழமை மாலை மெழுகுவர்த்தி ஏற்றி போராட்டத்தை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அனைவரையும் இன்று மாலை 6 மணிக்குப் பிரதேச செயலகத்துக்கு முன்பாக திரண்டு ஒற்றுமையை வெளிப்படுத்தி அமைதியான முறையில் எமது போராட்டத்தை முன்னெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.