1983 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இடம்பெற்ற கறுப்பு ஜூலை இனப் படுகொலை இலங்கையின் வரலாற்றில் மிக ஆழமான காயத்தை ஏற்படுத்திய நிகழ்வாகும். இந்த இனப்படுகொலையால் வடக்கு, கிழக்கு தமிழர்கள் மட்டு மல்லாது, மலையகப் பெருந்தோட்டத் தமிழ் மக்களும் ஆழமான பாதிப்புகளை எதிர்கொண்டனர். தமிழர் என்ற ஒரே அடையாளத்திற்காக உயிர்கள் பறிக்கப்பட்டன. வீடுகள் எரிக்கப்பட்டன.
சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டன. ஆயிரக் கணக்கான குடும்பங்கள் அகதிகளாக்கப்பட்டனர். இன்று 43 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. ஆனால், மலையக மக்களின் உரிமைப் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதா? என்ற கேள்வி தொடர்கதையாக உள்ளது. கறுப்பு ஜூலை யின் வடிவம் மாறியிருக்கலாம். ஆனால் காணி உரிமை, வாழ்வாதார பாதுகாப்பு, தொழிலாளர் உரிமை மற்றும் நிர்வாக அழுத்தங்கள் போன்ற பிரச்சினைகள் இன்னும் தொடர்கின்றன என்ற குற்றச்சாட்டுகள் பல தரப்பினரால் முன்வைக்கப்படுகின்றன.
கறுப்பு ஜூலை பற்றி நினைவு கூரும் போது பெரும்பாலும் வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பில் நடந்த சம்பவங்களே பேசப்படுகின்றன. ஆனால், மலையகத் தமிழர்களும் அந்த வன்முறையில் பலியாகினர். கொழும்பு, கண்டி, கம்பஹா, இரத்தினபுரி மற்றும் பதுளை போன்ற பகுதிகளில் வேலைக்காக வாழ்ந்திருந்த மலையகத் தமிழர்கள் தாக்கப்பட்டனர். பலர் உயிரிழந்தனர். வீடுகள் எரிக்கப்பட்டன. பல குடும்பங்கள் பெருந்தோட்டங்களுக்கு மீண்டும் தப்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. சிலர் இந்தியாவிற்கும் அகதிகளாகச் சென்றனர்.
அந்த அனுபவம் மலையக மக்களின் மனதில் ஒரு கேள்வியை பதித்தது. “இந்த நாட்டில் நமக்கு உண்மையான பாதுகாப்பு இருக்கிறதா?” என்று எழுந்த அந்த கேள்வி இன்று வரை தொடர்கின்றது. இலங்கை சுதந்திரம் பெற்ற பிறகும் பெருந்தோட்ட நிர்வாக அமைப்பில் பல மாற்றங்கள் ஏற்பட்டாலும், பல தோட்டங்களில் தொழிலாளர்கள் இன்னும் முழுமையான சுதந்திரத்தையும் சம உரிமையையும் அனுப விக்கவில்லை என்று தொழிற்சங்கங்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டுகின்றன.
சம்பளம், ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம் பிக்கை நிதி, வீடமைப்பு, குடிநீர், காணி உரிமை, விவசாயம், கல்வி, சுகாதாரம் என பல விடயங்களில் தொழிலாளர்கள் தொடர்ந்தும் போராட வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த சகல பிரச்சனைகளிலும் மலையக மக்களின் மிகப்பெரிய கோரிக்கை ‘நிரந்தர காணி உரிமை’. பல தலைமுறைகளாக வாழும் வீடுகளுக்குக் கூட சட்டபூர்வமான உரிமைப் பத்திரம் இல்லை.
இதன் விளைவாக, வீட்டை விரிவுபடுத்த முடியவில்லை. வங்கிக் கடன் பெற முடியவில்லை. நிர்வாகத்
தின் அனுமதியின்றி நிலத்தைப் பயன்படுத்த முடியவில்லை. தலைமுறைகளுக்கு சொத்துரிமை மாற்றுவதிலும் சிக் கல்கள் உள்ளன. குறிப்பாக தங்களுக்கான மலசலகூடத்தை அமைப்பதற்கு கூட தோட்ட நிர்வாகத்தின் அனுமதியை பெற வேண்டிய நிலை இன்றும் காணப் படுகின்றது. அவ்வாறு அனுமதி பெறாமல் அமைக் கப்படும் சகல நிர்மாணங்களும் தோட்ட நிர்வாகத்தால் அகற்றப்படும்.
அத்துடன் தோட்ட முகாமையாளர் உள்ளிட்ட அதி காரிகளால் தொழிலாளர்களும் அவர்கள் சார்ந்தவர்களும் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இன்று வரை மலையக பகுதிகளில் பதிவாகி வருகின்றன. உதாரணமாக, பதுளை மாவட்டத்தின் ஹாலிஎல -உனுகொல்ல தோட் டத்தில், இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டதாக குற்றஞ் சாட்டப்படும் சம்பவம் தொடர்பில் பரபரப்பு நிலவி வருகிறது. குறித்த தோட்டத்தைச் சேர்ந்த இளைஞர், கடந்த வாரம் முகாமையாளர் அலுவலகத்தில் முகாமையாளரால் தாக் கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுயதொழில் ஒன்றைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தில் கையொப்பம் பெறுவதற்காக அந்த அலுவ லகத்துக்குச் சென்றபோதே இந்த தாக்குதல் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.இந்த சம்பவத்தைக் கண்டித்து தோட்டப் பொதுமக்கள், இளைஞர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் தொடர் கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனை யடுத்து, மலையக மக்கள் முன்னணியின் பிரதி பொதுச் செயலாளர் ரகுராஜ் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்று பாதிக்கப்பட்ட தரப்பினருடன் கலந்து ரையாடியுள்ளனர்.
இளைஞர் தாக்கப்பட்டமை தொடர்பில், முகாமை யாளருக்கு எதிராக காவல்துறையிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அதற்கான முதற்கட்ட விசார ணைகள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவமும் மேற்கூறிய அதே கேள்வியை மீண்டும் எழுப்புகிறது. அதேபோன்று இரத்தினபுரி மாவட்டம் கஹ வத்தை பகுதியில் அமைந்துள்ள நீலகாமம் தோட்டத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட வீடு அடித்து நொறுக்கப்பட்டு, அங்கு வசித்தவர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்கள் தேசியக் கவனத்தைப் பெற்றன.
கடந்த ஏப்ரல் மாத இறுதியில் கறுப்பு ஆடை அணிந்த கும்பலொன்று நீலகாமம் தோட்டப் பகுதியில் கட்டப்பட்ட வீட்டை உடைத்து, அங்கிருந்தவர்களை தாக்கி யது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சிலரை கஹவத்தை காவல்துறையினர் கைது செய்தனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் முன்னாள் இராணுவத்தினர் உள்ளதாகவும், தோட்டங்களில் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களை அகற்றிவிட்டு தொழிலாளர் களையே காவலாளிகளாக நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்தன.
மேலும், மலையக மக்களுக்கு எதிரான இந்த வன்முறைகளைக் கண்டித்து கொழும்பு மற்றும் தோட்டப் பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. இந்த விவகாரம் தேசிய அரசியல் மட்டத்திலும் பேசப்பட்டது. இந்தச் சம்பவம் வெறும் வீட்டுப் பிரச்சினை அல்ல. ஒரு குடும்பத்தின் உணவுப் பாதுகாப்பு, வருமானம், எதிர்காலம் ஆகியவற்றோடு நேரடியாக தொடர்புடையது. அதேநேரம், “இந்த நாட்டில் நமக்கு உண்மையான பாதுகாப்பு இருக்கிறதா?” என்ற கேள்வியும் மீண்டும் எழுதுகிறது.
கறுப்பு ஜூலையின் பாடம்
ஒரு சமூகத்தின் உரிமைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் போது, அது ஒரு கட்டத்தில் பெரிய சமூக நெருக்கடியாக மாறும் என்ற மிகப்பெரிய பாடத்தை கறுப்பு ஜூலை கற்றுக் கொடுத்துள்ளது. மக்களின் குரலைக் கேட்கா மல், அவர்களின் காணிகளைப் பாதுகாக்காமல், வாழ்வா தாரத்தை உறுதிப்படுத்தாமல், சமூக நீதி ஏற்படாது. அதே போன்று தோட்ட முகாமையாளர்கள் உற்பத்தியை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல், தொழிலாளர் உரிமை, மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகியவற்றையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பை உணர வேண்டும்.
கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால், அவை உரை யாடலால் தீர்க்கப்பட வேண்டும். அச்சுறுத்தல், வன்முறை, பயிர் அழிப்பு அல்லது குடியிருப்பு சேதப்படுத்தல் போன்ற செயல்கள் எந்தச் சூழலிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. அவ்வாறான குற்றச்சாட்டுகள் எழும்போது, அவை சுயாதீனமாகவும் சட்டத்தின் அடிப்படையிலும் விசாரிக்கப்பட வேண்டும். அதேநேரம் மலையக மக்களுக்கு நிரந்தர காணி உரிமையை வழங்குதல், பெருந்தோட்ட வீடுகளுக்கு உறுதி பத்திரம் வழங்குதல், விவசாய நிலங்களை சட்ட ரீதியாக பாதுகாத்தல், தொழிலாளர்–நிர்வாக பிரச்சினைகளுக்கான சுயாதீன தீர்வு முறைமையை உருவாக்குதல், பெருந்தோட்டங்களில் மனித உரிமை கண்காணிப்பு முறைமையை வலுப்படுத்துதல் மற்றும் இளைஞர்களுக்கான கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் போன்ற விடயங்களில் அரசும் கவனம் செலுத்த வேண்டும்.
கறுப்பு ஜூலை என்பது கடந்த காலத்தின் ஒரு நினைவு மட்டுமல்லாது எதிர்காலத்திற்கான எச்சரிக்கையு மாகும். 1983 ஆம் ஆண்டு தமிழர் என்ற காரணத்திற்காக உயிர்களும் உடைமைகளும் இழக்கப்பட்டன. இன்று மலையக மக்களின் போராட்டம் காணி உரிமை, வாழ் வாதாரம் மற்றும் மனித கண்ணியத்தைப் பாதுகாப்பதற் கானதாக மாறியுள்ளது. பதுளை மாவட்டத்தின் ஹாலிஎல – உனுகொல்ல தோட்ட சம்பவமும், இரத்தினபுரி நீலகாமம் சம்பவமும், பெருந்தோட்ட மக்களின் உரிமைகள் இன்னும் தீர்க்கப்பட வேண்டிய கேள்விகளாக இருப்பதை நினைவூட்டுகின்றன.
மலையக மக்கள் இந்த நாட்டின் பொருளா தாரத்தை நூற்றாண்டுகளாக தங்கள் உழைப்பால் கட்டி யெழுப்பியவர்கள். அவர்களுக்கு நிரந்தர காணி உரிமை, பாதுகாப்பான வாழ்க்கை, மனித உரிமை மற்றும் சட்டத்தின் முன் சமத்துவம் என்பன வழங்கப்படுவது ஒரு சலுகை அல்ல. இலங்கை அரசின் அரசியலமைப்புச் சார்ந்த பொறுப்பும், ஜனநாயகத்தின் அடிப்படை கடமையுமாகும். கறுப்பு ஜூலையின் காயங்கள் மீண்டும் எந்த வடிவிலும் மலையக மக்களினதும் தமிழ் மக்களினதும் வாழ்வில் மீள நிகழாதவாறு எதிர்காலத்தை உருவாக்குவதே இன்று அரசுக்கும், பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும், சமூகத் திற்கும் முன் நிற்கும் மிகப் பெரிய பொறுப்பாகும்.



