கறுப்பு ஜூலை இனப்படுகொலை இடம்பெற்று 43 ஆண்டுகள்!

தமிழர்களுக்கு எதிரான கருப்பு ஜூலை இனப்படுகொலை இடம்பெற்று இன்றுடன் 43 ஆண்டுகளாகின்றன.

கறுப்பு ஜூலை என்பது தமிழ் மக்களுக்கு எதிராக 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கட்டவிழ்த்து விடப்பட்ட மிகக் கொடூரமான, திட்டமிட்ட இனப்படுகொலை மற்றும் வன்முறை சம்பவங்களை குறிக்கிறது.

இலங்கையின் 30 ஆண்டுகால உள்நாட்டுப் போருக்கு இந்த வன்முறையே பிரதான திருப்புமுனையாக அமைந்தது.

குறிப்பாக அரசாங்கத்திடம் இருந்த வாக்காளர் பட்டியல்களைப் பயன்படுத்தி, தமிழர்களின் வீடுகளும் வணிக நிறுவனங்களும் திட்டமிட்டு அடையாளம் காணப்பட்டுத் தாக்கப்பட்டன.

வன்முறைகளின் போது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக கொழும்பு வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குட்டிமணி, ஜெகன், தங்கத்துரை உள்ளிட்ட 53 தமிழ் அரசியல் கைதிகள் சிங்களக் கைதிகளால் மிகக் கொடூரமாகக் அடித்துக் கொல்லப்பட்டனர்

கறுப்பு ஜூலை சம்பவங்கள் இலங்கைத் தமிழர்களின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார வாழ்வை அடியோடு மாற்றிப்போட்டது.

கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கை அரசியல் மற்றும் சமூகக் கட்டமைப்பில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், 1983 ஜூலையில் சிந்தப்பட்ட தமிழர்களின் இரத்தமும், எரிக்கப்பட்ட சாம்பலின் சாட்சியங்களும் இன்றும் தமிழ் நெஞ்சங்களில் ஆறாத வடுவாகவே நீடிக்கின்றன.

இந்த பின்னணியில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களால் பாராளுமன்றத்தில் 43வது கறுப்பு ஜூலை நாள் நினைவு கூரப்பட்டது.

இதேவேளை, “கறுப்பு ஜூலை இனக்கலவரம் அரங்கேறி இத்தனை ஆண்டுகளைக் கடந்தும் இதுவரையில் 1983ல் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளின் நினைவாக ஒரு முறையான நினைவுச்சின்னம் அமைக்கப்படாமல் இருப்பது பெரும் வரலாற்றுத் தவறு” என்று  தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈழத்தமிழ் மக்களின் வரலாற்றுப் பேரவலத்தில் ஒன்றான கறுப்பு ஜூலை நினைவு நாளான இன்று (23) ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.

‘இது இறந்த காலத்தை நினைத்து அழுவதற்கானது அல்ல இது ஆக்கிரமிப்புக்கு எதிரான எதிர்காலப் போராட்டத்தின் ஒரு வடிவமும் ஆகும்” என்று அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், “கறுப்பு ஜூலை வேதனை எங்கள் மனங்களில் இன்றும் இருக்கின்றன” என்று புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் (23) விஜயம் செய்த அமைச்சர், மருதனார்மடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

“இந்த அரசாங்கத்தின் நோக்கம், வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதே. அதற்காக நாங்கள் எதையும் செய்யத் தயாராக இருக்கிறோம்”.

“வடபகுதி மக்கள் எம்மீது அன்பு காட்டியுள்ளனர்”.

“எனவே, வடக்கு மக்களின் எதிர்பார்ப்பு அரசாங்கத்தால் நிறைவேற்றப்படும் என்பதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம்” என்று புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.