கனடாவில் ‘இனவழிப்பு நினைவுத்தூபி’ – பிரம்டன் மாநகரசபை தீர்மானம் – கந்த பூபதி

கடந்த வாரம் பிரம்டன் மாநகரசபை நிறைவேற்றிய தீர்மானமொன்று ஈழத்தேசியத்தை நேசிக்கும் தமிழர்களுக்கு தித்திப்பாக இருந்திருக்கக் கூடும்.

2009ஆம் ஆண்டு ஆண்டு மே மாதம் இலங்கை அரச படைகளால் இனப்படுகொலை செய்யப்பட்ட இலட்சத்துக்கு மேற்பட்ட பொதுமக்களை நினைவுகூரும் வகையில் நிலையான நினைவுத்தூபி ஒன்றை தமிழர்களுக்கு அமைத்துக் கொடுப்பது என்ற தீர்மானமே அது.

இந்த செய்தி, கனடாத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் பலருக்கும் ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்திருக்கும்.

தமிழர்கள் கொல்லப்பட்ட பொதுமக்களின் நினைவாக ஒரேயொரு நினைவுத் தூபியை பல்கலைக்கழக வளாகத்துக்குள் நிர்மாணித்திருந்தார்கள். அதைவிட வேறு நினைவுத்தூபிகள் எங்கும் பெரியளவில் கட்டப்படவில்லை. கடந்த பல ஆண்டுகளாக பல்கலைக்கழக மாணவர்களுடன் பொதுமக்களும் இங்குகூடி வணக்கம் செலுத்துவது வழக்கம்.

இலங்கை அரசின் ஏவலில்,  அன்று இரவு நேரத்தில் காவல்துறையின் உதவியுடன், முன்னறிவித்தலின்றி இத்தூபி அடித்துடைக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது. இந்த அடாவடித்தனம் உலகெங்கிலும் வாழும் தமிழர்களைத் திரண்டெழச் செய்தது.

இறந்தோரின் நினைவாகத் தமிழர்கள் கூடிக் கூட்டு வணக்கம் செய்வது நெடுங்கால பண்பாட்டு மரபு. இந்த பண்பாட்டு மரபு மாவீரர் நாளின் போதும் மறுக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக மே மாதத்தில் தமிழர்கள் கூடி வணக்கம் செலுத்தும் இடமான இந்த நினைவுத் தூபியும் அப்புறப்படுத்தப்பட்டது. இது தமிழர்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதையும் தமிழர்கள் மீதான பண்பாட்டு அழிப்பையும் வெளிப்படுத்தியது.

இச்செயல் இனவழிப்பின் ஓர் வடிவம் என்பதை வாழிட நாடுகளின் அரச அலகுகளுக்குத் தமிழர் தெரியப்படுத்தினர்.

பிரம்டன் மாநகரத்தின் மேயரான திரு பற்றிக் பிரவுண், தமிழர்களின் துயர வரலாற்றைத் துல்லியமாக அறிந்த அரசியலாளர். பல்வேறு சூழ்நிலைகளிலும் தமிழருக்காகக் குரல் கொடுத்து வருபவர்.

தமிழர்கள், கொல்லப்பட்ட உறவுகளின் நினைவுகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ளும் கூட்டு நிகழ்வுக்கான உரிமையை இலங்கை அரசு மீண்டுமொருமுறை மறுத்திருப்பதை பற்றிக் பிரவுண் நன்குணர்ந்திருந்த நிலையிலே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

இரு வாரங்களுக்கு முன் பிரம்டன் மாநகரசபை உறுப்பினர் திரு. மார்ட்டின் அவர்கள் இந்த தீர்மானத்தை முன்மொழியும்வரை தமிழர்கள் உட்பட, பலரும் இதை அறிந்திருக்கவில்லை. இதை அவர் முன்மொழிந்தபோது அனைவரும் பெரு மகிழ்வோடு, அதை வரவேற்று ஏற்றுக் கொண்டார்கள். மாநகரசபை நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்றும் தமிழ் அன்பர்களின் முயற்சிகளும் இச்செயற்பாட்டுப் பின்னால் இருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை.

தமிழர் தலைமுறை தலைமுறையாக வாழ்கின்ற மண்ணில், கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் அடிப்படை உரிமைகளும் மறுக்கப்படும் நிலையில், தமிழர் குடியேறி வாழும் நாடொன்றின் அரச நிர்வாக அலகு, தமிழர்களுக்காக ஒரு நிலத்தை ஒதுக்கி, அதில் நினைவுத் தூபியைக் கட்ட முன்வந்திருப்பது போற்றுதற்குரியதாகும்.

இச்செயல், தமிழர்கள் தாம் வாழும் நாடுகளில் பெற்றுவரும் வலுநிலையை உணர்த்துவதோடு, உரிமைகளை மறுக்கும் இலங்கை அரசுக்கும் ஒரு செய்தியைக் கூறியிருக்கின்றது.

இத்தீர்மானத்தை நிறைவேற்றி, உலகம் உச்சரிக்கத் தயங்கும் இனப்படுகொலை என்ற சொல்லை உள்ளடக்கி, இனப்படுகொலைத் தூபி என்ற பெயரையும் ஏற்றுக் கொண்டிருக்கும் பிரம்டன் மாநகரசபையும் அதன் மேயர் திரு பற்றிக் பிரவுண் அவர்களும் என்றென்னும் தமிழர்களின் நன்றிக்கு உரியவர்கள்.