கச்சத்தீவை மீட்க வேண்டும் – இந்திய நாடாளுமன்றில் தேனி எம்.பி ரவீந்திரநாத் கோரிக்கை

1194364 கச்சத்தீவை மீட்க வேண்டும் - இந்திய நாடாளுமன்றில் தேனி எம்.பி ரவீந்திரநாத் கோரிக்கை
இந்திய நாடாளுமன்ற மக்களவையில் இடைக்கால பட்ஜெட் விவாதத்தில் இன்று தேனி தொகுதி எம்பியான ஓ.பி.எஸ்.பி.ரவீந்திரநாத் உரையாற்றினார். அதில் அவர், கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தார்.

தனது உரையில் தேனி மக்களவை தொகுதி எம்பியான ஓ.பி.எஸ்.பி.ரவீந்திரநாத் பேசியது: “நமது சுதந்திர இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி மூன்று ஜனாதிபதிகளை தந்துள்ளது. டாக்டர்.அப்துல் கலாம், ராம்நாத் கோவிந்த் மற்றும் திரவுபதி முர்மு. இவர்களில் சமூகங்கள் முறையே சிறுபான்மை, தாழ்த்தப்பட்டவர் மற்றும் பழங்குடியினர் ஆவர். சுதந்திர இந்தியாவில் இத்தகைய சமூகத்தினருக்கு இப்படி ஒரு வாய்ப்பை இதுவரை எந்த அரசாங்கமும் தரவில்லை என்பதை நான் பதிவு செய்கிறேன்.

தமிழகத்தின் வரலாற்றை எடுத்துக் கொண்டால் இப்போது நமது ராமர் கோயில் அயோத்தியில் 500 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டப்பட்டுள்ளது. இதை சீரும் சிறப்புமாக இந்தியாவின் உடைய ஒவ்வொரு குடிமகனுடைய கனவை நிறைவேற்றி இருக்கிறார் பிரதமர் மோடி . ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு முன்பாக தமிழகத்துக்கு சென்ற பிரதமர், ஸ்ரீரங்கம் கோயில், தென்கோடியின் ராமேஸ்வரம் கோயிலில் வழிபட்டு வந்தார். 17-ம் நூற்றாண்டில், ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு சொந்தமாக அங்குள்ள கச்சத்தீவு இருந்தது.

மக்கள் வசிக்காத இந்த பகுதி, ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு சொந்தமாக இருந்தது. அந்த சேதுபதி மன்னர் வெளியிட்ட செப்பு பட்டையில் கச்சத்தீவையும் அதையும் தாண்டி இலங்கை தலைமன்னார் வரைக்கும் நமது ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு சொந்தம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 1822 -ம் ஆண்டில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி, ராமநாதபுரம் சமஸ்தானத்துடன் ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்படி கச்சத்தீவு உட்பட ராமநாதபுரம் சமாதானத்துக்குட்பட்ட நிலப்பரப்பை ஆங்கிலேயர்கள் பயன்படுத்திக் கொள்ள உரிமை வழங்கப்பட்டது.

ஆக, வரலாற்றை எடுத்துப் பார்த்தால் கச்சத்தீவு என்பது இந்தியாவின் ஒரு பகுதியாகவும், தமிழகத்தின் ஒரு பகுதியாகவும் இருந்தது. ஆனால் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அந்த கச்சத்தீவை இலங்கை பிரதமர் பண்டாரநாயக்காவிடம் தந்துவிட்டார். அதை இந்த நாடாளுமன்ற அவையில் விவாதிக்காமாலே, கச்சத்தீவைப் பரிசாக இலங்கைக்கு கொடுத்து விட்டார். இன்று, ஜம்மு-காஷ்மீரில் மக்கள் நன்றாக வாழ சட்டத்தை இயற்றுகிறோம். அதேசமயம், எதிர்க்கட்சியினரால் நாம் இழந்த அந்த கச்சத்தீவை மீட்டெடுக்க இதுவரையும் எவரும் போராடவில்லை என்பது வருத்தமான செயல். ஆனால் பிரதமருக்கு நான் ஒரு வேண்டுகோள் வைக்கின்றேன்.”