ஓட்டமாவடியில் ஜனாசாக்களை அடக்கம் செய்ய காணி அடையாளம்

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கான அனுமதி மற்றும், வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு வழங்கியுள்ள நிலையில், சடலங்களை அடக்கம் செய்வதற்குப் பொருத்தமான இடத்தினை அடையாளம் காணும் பணிகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

இந்நிலையில், நேற்றைய தினம் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில், காகித நகர் கிராம சேவகர் பிரிவிலுள்ள மஜ்மா நகரில் பொருத்தமான காணி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்கு நேற்று விஜயம் செய்த மட்டக்களப்பு மாவட்ட கொரோனா செயலணி பொறுப்பதிகாரி பிரிகேடியர் பிரதீப் கமகே தலைமையிலான குழுவினர் குறித்த காணியை பார்வையிட்டதுடன், சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அனுமதியைப் பெறுவதற்கான நடவடிக்கைகளையும் முன்னேடுத்தனர்.

இதன்போது ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வி.தவராஜா உள்ளிட்ட பலர் குறித்த இடத்திற்குச் சென்று பார்வையிட்டனர்.

See the source image

இது தொடர்பில் குறித்த பிரதேசத்திற்கு வியஜம் செய்த காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் முன்னாள் செயலாளர் ஏ.எல்ஃ சபீல் கருத்து வெளியிடுகையில், “பிரிகேடியர் பிரதீப் கமகேவுடன் இணைந்து நாம் குறித்த காணியைப் பார்வையிட்டோம்.  அவ்விடத்தில் ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கு தேவையான சகல உதவிகளையும் வழங்குவதாக ஓட்டமாவடி பள்ளிவாசல் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இவ்விடத்தில் மக்கள் நடமாட்டமில்லை. இக் காணியிலிருந்து 20 கி.மீ தொலைவிலேயே மக்கள் வசிக்கின்றனர்.

இப் பகுதியில் மொத்தமாக 10 ஏக்கர் காணி உள்ளது. இதில் 2 ஏக்கர் காணியை அடையாளப்படுத்தி அதனுள்ளேயே  அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்பகுதியில் இராணுவ காவலரண்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் ஜனாசாக்களின் உறவினர்கள் இருவரும் சுகாதார ஊழியர்களும் மாத்திரமே அடக்கம் செய்யும் இடத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவர்.

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலுள்ள வைத்தியசாலைகளில் மாத்திரம் இது வரை 10 ஜனாசாக்கள் அடக்கத்திற்காக காத்திருக்கின்றன.

கல்முனை வைத்தியசாலையில் 4 ஜனாசாக்களும் காத்தான்குடி வைத்தியசாலையில் 2 ஜனாசாக்களும் அதே போல் வேறு சில வைத்திய சாலைகளிலும் ஜனாசாக்கள் வைக்கப்பட்டுள்ளன.

இதில் முதல் கட்டமாக இன்று குறித்த இடத்தில் ஜனாசாக்களை அடக்கம் செய்யலாம் என்று  எதிர்பார்க்கப்படுகின்றது.” என்றார்.