ஒவ்வொரு நாளும் பயத்தால் சாகிறேன் -தமிழ் அகதியின் துாக்கமற்ற இரவுகள்

தூக்கமற்ற இரவுகள், பாதிப்படைந்த மனநிலை, நாடுகடத்தப்படுவோம் எனும் அச்சம் என அவுஸ்திரேலியாவில் கடந்த மூன்று ஆண்டுகளாக அச்சத்துடன் ஒரு தமிழ் அகதி ஒருவர்  விசா இன்றி வாழ்ந்து வருகிறார்.
அவுஸ்திரேலியாவில் தஞ்சக்கோரிக்கை மறுக்கப்பட்ட நிலையில்,  அந் நாட்டிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்படுவோமா என்ற அச்சத்திலேயே இருப்பதாக எஸ்பிஎஸ் தமிழ் ஊடகத்திடம் சிந்துஜன்(பெயர் மாற்றப்பட்டுள்ளது)  தெரிவித்திருக்கிறார்.
வாழ்வதற்கு பாதுகாப்பற்ற சூழல் இருந்ததாலேயே இலங்கையிலிருந்து வெளியேறியதாகக் கூறும்  அவர், 2006யில் இலங்கையிலிருந்து வெளியேறிய 2011 வரை மலேசியாவில் தங்கியிருந்ததாகக் கூறுகிறார்.
பின்னர், 2012ம் ஆண்டு இந்தோனேசியாவிலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவை அடைந்திருக்கிறார். ஆனால் இன்று வரை சிந்துஜனின் தஞ்சக்கோரிக்கை அவுஸ்திரேலியாவில் ஏற்றுக்கொள்ளப்படாததால் பாதுகாப்பற்ற நிலையில் அவர் வாழ்ந்து வருவதாக கூறுகின்றார்.