ஒற்றுமையே எமது பலம் என்ற சிந்தனையுடன் இணைந்து பணியாற்றுவோம்

உயிரிழந்த உறவுகளுக்கு செலுத்தும் அஞ்சலி நிகழ்வுடன், நின்றுவிடாது, அடுத்த வருட மே மாதத்திற்கு முன்னர் நாம் என்ன பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்பதை திட்டமிட்டு ஒவ்வொரு தமிழ் மக்களும் ஒற்றுமையாக பணியாற்றுவோமாக இருந்தால் எமது விடுதலைக்கான காலம் வெகு தொலைவில் இல்லை என அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையம் இன்று (18) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதன் முழு வடிவம் வருமாறு:

ICETR logo ஒற்றுமையே எமது பலம் என்ற சிந்தனையுடன் இணைந்து பணியாற்றுவோம்

18.05.2020

சிறீலங்கா அரசின் தொடர் தமிழ் இனஅழிப்பின் உச்சக்கட்டமாக விளங்கிய முள்ளிவாய்க்கால் பேரழிவின் பதினோராவது ஆண்டு நினைவு நாளை உலகம் எங்கும் வாழும் தமிழ் மக்கள் வலிகளுடன் நினைவுகூரும் நாளாக மே மாதம் 18 ஆம் நாள் அமைந்துள்ளது.

1948 ஆம் ஆண்டு சிறீலங்கா சுதந்திரம் அடைந்ததில் இருந்து தமிழ் இனம் தொடர் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்புக்களை சந்தித்து வருகின்றது. கல்வி புறக்கணிப்பு, காணி அபகரிப்பு, மொழிப்புறக்கணிப்பு, தொழில்புறக்கணிப்பு, ஆயுத அடக்குமுறைகள், படைத்துறை அடக்குமுறைகள், அரசியல் புறக்கணிப்பு, பண்பாட்டு  அழிப்பு என கடந்த 72 வருடங்களாக தமிழ் இனம் தொடர் இனஅழிப்புக்கு உட்பட்டு நிற்கின்றது.

பிராந்திய மற்றும் உலக வல்லரசுகளின் துணையுடன், சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட முழுஅளவிலான ஒரு இனஅழிப்பு போராகவே முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நிகழ்ந்து முடிந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையும் தமிழ் மக்களை காப்பாற்ற முன்வரவில்லை.

ஒரு இனஅழிப்பு அரசின் கைகளில் பலியாடுகள் போல தமிழ் மக்களை ஒப்படைத்துவிட்டு உலகம் தனது கண்களை மூடிக்கொண்டது. ஐக்கிய நாடுகள் சபையின் தகவல்களில் படி இறுதிப் போரில் 70 ஆயிரம் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இறுதிப்போரிலும், சிறீலங்காவில் கடந்த 30 வருடங்களுக்கு மேல் நடந்த ஆயுதப்போரிலும் சிறீலங்கா அரசுகள் மேற்கொண்ட இனப்படுகொலை, மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் போன்றவற்றில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியையும், தமிழ் இனம் தன்னை காத்துக்கொள்ளவும், பிரித்தானியாவின் ஆட்சிக்காலத்தில் இழக்கப்பட்ட தனது இறைமையை மீட்டு எடுப்பதன் மூலம் தனது அரசியல் உரிமைகளை வென்றெடுக்கவும் அனைத்துலக சமூகத்திடம் ஜனநாயக வழிகளில் போராடி வருகின்றது.

ஆரம்பத்தில் சிறீலங்கா அரசிடம் உரிமைகளை கேட்டு மேற்கொள்ளப்பட்ட ஜனநாயகப் போரட்டம், பின்னர், சிறீலங்கா அரசின் ஆயுத அடக்குமுறைகளுக்கு எதிரான ஆயுதப்பேராட்டமாக பரிணமித்தது. அது தற்போது மீண்டும் அனைத்துலக சமூகத்திடம் நீதியையும், தமிழ் இனம் தனது இறைமையையும் வேண்டும் ஜனநாயகப் போராட்டமாக மாறியுள்ளது.

அதாவது போராட்ட வடிவங்கள் மாற்றம் பெற்றபோதும், இலக்கும், இலட்சியமும் ஒன்றுதான். அது எமது மக்களின் விடுதலை மற்றும் சுயாட்சி அரசியல் அதிகாரம்.

2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆரம்பித்த இந்த போரில் நாம் பல உன்னதமான முன்னநகர்வுகளை மேற்கொண்டபோதும் எமக்குள் காணப்பட்ட ஒற்றுமையின்மை எமது நகர்வுகளில் ஒரு தேக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

எமது உயிர்த்தியாகங்கள் வீண்போகக்கூடாது என்றால் எமக்கு ஆதாரங்களுடன் கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தை நாம் தவறவிடுதலாகாது. சிறீலங்கா அரசு என்பது எமது எதிரி அது எமது ஒற்றுமையை குலைத்து எம்மக்களின் விடுதலை வேட்கையை இல்லாது செய்யவே தனது வளங்கள் அனைத்தையும் பயன்படுத்தும்.

ஆனால் நாம் அதன் வலையில் வீழ்ந்துவிடாமல் எமக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை சரியான வழிகளில் நகர்த்தி மக்களை ஒருங்கிணைத்து எமது விடுதலையை வென்றெடுக்க வேண்டும். அது தான் எமது விடுதலைப்போரில் உயிர்துறந்த மக்களுக்கும் போராளிகளுக்கும் நாம் செய்யும் தூய்மையான வணக்கமாகும்.

மே மாதம் இடம்பெறும் அஞ்சலி நிகழ்வுடன், நின்றுவிடாது, அடுத்த வருட மே மாதத்திற்கு முன்னர் நாம் என்ன பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்பதை திட்டமிட்டு ஒவ்வொரு தமிழ் மக்களும் ஒற்றுமையாக பணியாற்றுவோமாக இருந்தால் எமது விடுதலைக்கான காலம் வெகு தொலைவில் இல்லை.

எனவே ஒற்றுமையே எமது பலம் என்ற சிந்தனையுடன் நாம் இணைந்து பணியாற்றி எமது விடுதலையை வென்றெடுப்போம் என இந்த நாளில் உறுதி கொள்வோமாக.

அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையம்.