‘ஒரு நாடு, ஒரு சட்டம் என்றவர்கள் இப்போது இரு சட்டங்களுக்கு இணங்கியுள்ளனர்’ – ரணில் விக்கிரமசிங்க

கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், வட பகுதியை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தபோது கொண்டிருந்த அதிகாரத்தைவிட அதிகளவு அதிகாரத்தை கொழும்பு துறைமுக நகரம் கொண்டிருக்கும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கின்றார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் இதனைத் தெரிவித்திருக்கும் ரணில் விக்கிரமசிங்க, ஒரு நாடு ஒரு சட்டம் எனப் பேசிய அதே ஆட்கள் இப்போது ஒரு நாடு இரண்டு சட்டங்கள் என்பதற்கு இணங்கிவந்திருப்பதையிட்டு தான் ஆச்சரியமடைவதாகவும் குறிப்பிட்டிக்கின்றார்.

கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் கொழும்பு துறைமுக நகரம் சீனாவின் காலனியாகிவிடும் எனக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் நிலையிலேயே ரணில் விக்கிரமசிங்க இந்தக் கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார்.

“இந்தப் பகுதி சினாவின் காலனியாகிவிடும் எனக்கூறப்படுவதையிட்டு நான் அறிந்திருக்கின்றேன். ஆனால், போர்க் காலத்தில் பிரபாகரன் கைப்பற்றிவைத்திருந்த பகுதிகளில் அவரிடம் காணப்பட்ட அதிகாரத்தைவிட அதிகளவு அதிகாரங்களைக் கொண்டதாக இந்த துறைமுக அதிகார சபை விளங்கும்” எனவும் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்திருக்கின்றார்.

“ஒரு நாடு ஒரு சட்டம் எனக் கூறிவந்தவர்களே, ஒரே நாட்டில் இரண்டு சட்டங்களைக் கொண்டிப்பது ஆச்சரியமாக இருக்கின்றது” எனவும் அவர் தெரிவித்தார்.

“கொழும்புத் துறைமுகத்தை சட்டவிரோதமன முறையில் கண்காணிப்பதற்கு கொழும்பு துறைமுக நகர் பயன்படுத்தப்படலாம் என்ற கவலையை பல நாடுகள் 2015 முதல் 2019 வரையிலான காலப்பகுதியில் தான் பிரதமராக இருந்தபோது தெரிவித்திருந்தன” எனக்குறிப்பிட்ட ரணில் விக்கிரமசிங்க, கொழும்பு துறைமுக நகரிலிருந்து வெளியாட்கள்  துறைமுகத்தை கண்காணிப்பதை அப்போதைய தமது அரசு விரும்பவில்லை” எனவும் சுட்டிக்காட்டினர்.

இது தொடர்பில் சீனாவுக்கு தமது அரசாங்கம் கரிசனையை வெளியிட்டதுடன், அதற்கான தீர்வு ஒன்றை நோக்கியும் செயற்பட்டது எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.