ஐந்து பேரை சுட்டுக் கொன்ற பிரதான நபர் முன்னாள் கடற்படை வீரர் – மனைவி, தந்தை கைது

பெலியத்தவில் அபே ஜன பல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட 5 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படும் கடற் படை வீரரின் மனைவி மற்றும் தந்தையை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

பெலியத்த துப்பாக்கிச் சூட்டின் பிரதான துப்பாக்கிதாரி முன்னாள் கடற்படை வீரர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு உதவியதற்காக கடற்படையில் பணியாற்றிய பிரதான துப்பாக்கிதாரியின் 39 வயது மனைவி மற்றும் அவரது 72 வயது தந்தை ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் 21 கிராம் 350 மில்லிகிராம் ஹெரோயினுடன் பல்லேவெல பிரதேசத்தில் பதகம என்ற இடத்தில் தலைமறைவாக இருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், பெலியத்த துப்பாக்கிச் சூட்டுக்கு வந்திருந்த பிரதான துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும், மேலும் இரு துப்பாக்கிதாரிகளும் சம்பவத்தின் பின்னர் துபாய்க்கு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இவர்களது விமான டிக்கெட்டுகளை துபாயில் உள்ள ‘நிபுன’ என்ற திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபட்ட மற்றொரு நபர் ஏற்பாடு செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.

பாதாள உலக தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான கொஸ்கொட சுஜீயின் கூட்டாளியான டுபாயில் தலைமறைவாக உள்ள ஹர்ஷ என்ற ஹரேந்திர குணதிலக்கவே துப்பாக்கிதாரிகளுக்கு அறிவுறுத்தியதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.