ஐந்து தமிழ்க் கட்சிகளின் இறுதி முடிவு எடுக்கும் கலந்துரையாடல்

யாழ். மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் தொடர் முயற்சியால் கொள்கையில் ஒன்றாக பயணிக்கும் ஐந்து தமிழ் கட்சிகளின் கூட்டம் 30.10.2019 புதன்கிழமை மாலை 4.00 மணிக்கு யாழ். பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள “ப்ரைட் இன்“ விடுதியில் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இக்கலந்துரையாடலில் கட்சிப் பிரமுகர்கள் கலந்துரையாடிக் கொண்டிருக்கின்றார்கள். தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் கொள்கை பரப்புரை செயலாளர் க.அருந்தவபாலன் 4.00 மணிக்கு வருகை தந்தார். ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் EPRLF கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், அவரோடு சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.

ரெலோ சார்பாக சிறிகாந்தா மாலை 4.10இற்கு வருகை தந்தார். முன்னாள் வடமாகாணசபை அவைத் தலைவரும் தமிழரசுக் கட்சி உறுப்பினருமான சிவஞானம் மாலை 4.15 மணிக்கு சமுகமளித்தார். புளொட் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் மாலை 4.30இற்கு வருகை தந்தார். கட்சியின் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா மாலை 4.50 இற்கு சமுகம் தந்தார். சம நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் வருகை தந்தார்கள். ஒரே நிலைப்பாட்டில் கட்சிகள் முடிவெடுக்குமா என்ற ஆவலுடன் தமிழ் மக்கள் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.