ஏமாற்று அரசியல் – பி.மாணிக்கவாசகம்

இழுபறிகளுக்கு மத்தியில் ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் முக்கியமானது. இந்தத் தேர்தல் பல விடயங்களில் வரலாற்று முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது.

கிட்டத்தட்ட 75 லட்சம் பேர் கொரோனா வைரஸ் என்ற நச்சு நுண்கிருமியின் தாக்கத்துக்கு உள்ளாகி நான்கு லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள மாபெரும் உலகளாவிய நோயிடருக்கு மத்தியில் இந்தத் தேர்தல் நடைபெறவுள்ளது. இலங்கையும் ஆட்கொல்லி கொரோனா வைரஸின் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கின்றது. நாட்டில் 11 பேர் இந்த வைரஸுக்குப் பலியாகியிருக்கின்றனர். சராசரியாக 2 தொடக்கம் 4, 5 பேர் வரையில் நாளாந்தம் நோய்த்தொற்றுக்கு ஆளாகி வரும் நிலையில் கிட்டத்தட்ட 1900 பேரை இந்த வைரஸ் பற்றிப்பிடித்திருக்கின்றது.

கொரோனா வைரஸின் பிடியில் இருந்து நாடு முழுமையாக விடுபடாத நிலைமையில் எந்த வேளையிலும் இரண்டாம் சுற்று நோய்த்தாக்கம் ஏற்படலாம் என்ற அச்சத்துக்கு மத்தியில் நாட்டு மக்கள் வாக்குச் சாவடிகளுக்குச் செல்ல இருக்கின்றார்கள்.

பொதுத் தேர்தலுக்காக நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட தருணத்தில் புகுந்த கொரோனா வைரஸ் நாட்டை முழுமையாகப் புரட்டிப் போட்டது. சகல நடவடிக்கைகளையும் ஸ்தம்பிதம் அடையச் செய்து இயல்பு நிலைமைகளுக்கு இடையூறு விளைவித்தது. தேர்தலை நடத்த முடியவில்லை. கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு ஜனாதிபதி இணங்கவில்லை. இறந்துவிட்ட நாடாளுமன்றத்திற்கு எவ்வாறு உயிர் கொடுக்க முடியாது என்று அரச தரப்பினர் தத்துவக் கேள்வி எழுப்பினர். அரசியலமைப்பு ரீதியான பிரச்சினைகள் இதனால் தலையெடுத்தன.

நீதித்துறை, நிறைவேற்றதிகாரம், சட்டவாக்கத்துறை என்ற மூன்று முக்கிய தூண்களையும் கொண்டிருக்க வேண்டிய ஜனநாயக ஆட்சியில் நாடாளுமன்றம் முடங்கிய நிலையில் நிiவேற்றதிகாரம் மட்டுமே கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான போராட்டத்தல் ஆட்சி நிர்வாகச் செயற்பாடுகளில் மேலோங்கி இருந்தது.

நாடாளுமன்றக் கலைப்பும் கொரோனா வைரஸின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தேர்தலை நடத்த மேற்கொள்ளப்பட்ட அரச தரப்பின் முயற்சியும் அடிப்படை உரிமை மீறலாக உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன. அந்த விடயங்கள் நீதிமன்றத்தினால் நிகராகரிக்கப்பட்டு விசாரணைகள் மறுக்கப்பட்டன.DSC03222 ஏமாற்று அரசியல் - பி.மாணிக்கவாசகம்

இதற்கிடையில் அரச நிர்வாகக் கட்டமைப்பின் முக்கிய துறைகளில் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டதுடன், இராணுவ மேலாதிக்கம் கொண்டதாக ஜனாதிபதியின் நேரடி கண்காணிப்பின் கீழ் செயற்படத்தக்க வகையில் கிழக்கு மாகாணத்தின் தொல்லியல் இடங்களைப் பராமரிப்பதற்கான செயலணியும், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி ஒழுக்கமுள்ள குடிமக்களை உருவாக்குவற்கான செயலணியும் ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்டன.

நிறைவேற்றதிகாரத்தைக் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையைக் கொண்ட இலங்கையின் ஜனநாயக ஆட்சி நிர்வாகம் இதனால் சர்வாதிகாரத்தைக் கொண்ட இராணுவ ஆட்சியாக மாறுகின்றது. மாற்றப்படுகின்றது என்ற குற்றச்சாட்டுக்களும் கண்டனக் குரல்களும் எழுந்துள்ளன.

கேள்விகள்

இத்தகைய அரசியல் ரீதியான குழப்ப நிலைமைகளின் பின்புலத்தில்தான் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி வரலாற்று ரீதியான முக்கியத்துவம் மிக்க பொதுத் தேர்தலை சந்திப்பதற்குத் நாடு தயாரகின்றது. நாட்டு மக்கள் தயார்ப்படுத்தப்படுகின்றார்கள்.

இந்த நிலையில் முப்பது வருடகால யுத்தத்pற்கு முகம் கொடுத்து, யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட 11 ஆண்டுகளின் பின்னரும், அதன் தாக்கத்தில் இருந்து இன்னும் விடுபடாத நிலையில் தமிழ்த்தரப்பினர் இந்தத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றார்கள். எப்படி இந்தத் தேர்தலைக் கையாளப் போகின்றார்கள் என்பது முக்கிய பிரச்சினையாகவும் முக்கிய கேள்வியாகவும் எழுந்திருக்கின்றது.

அரசியலுக்கு மக்களை அரசியல்வாதிகள் அணி திரட்ட வேண்டும். தீர்க்கமானதொரு கொள்கையின் கீழ் ஓர் அரசியல் கட்சி என்ற கட்டமைப்பிற்குள் அவர்களை ஒன்றிணையச் செய்ய வேண்டும். மக்களை அணிதிரட்டுவது என்பது சாதாரண காரியமல்ல. ஓர் அரசியல் கட்சி முன்னெடுக்கின்ற ஒரு கொள்கையும் அதனை நிறைவேற்றுவதற்கான வழித்தடங்கள், வழிமுறைகள் பற்றிய தெளிவான நோக்கையும் போக்கையும் கொண்டிருக்க வேண்டியது அவசியம். இது மக்களுடைய மனங்களை வெல்லக் கூடியதாக இருத்தல் வேண்டும். அந்தக் கட்சியின் மீதும், அதன் தலைவர்கள் மீதும் நம்பிக்கை வைத்து அவர்களின் பின்னால் செல்வதற்கு மக்களை அவர்கள் தயார்ப்படுத்தல் வேண்டும்.

புதிய அரசியல் கட்சிகளானால் புதிய கொள்கைகளையும் புதிய புதிய வழிமுறைகளையும் காட்டி மக்களை வழிப்படுத்தவும், அவர்களை அணிதிரட்டவும் முடியும். புதிதென்றால் பொதுவாகவே கவர்ச்சியும் இருக்குமல்லவா?

ஆனால் பழைய அரசியல் கட்சிகளும் பழைய அரசியல் தலைவர்கள், அரசியல்வாதிகள் என்போர் தமது கட்சியின் பழைய கொள்கைகளுக்குப் புதிய வடிவம் கொடுக்க வேண்டும். புதிய வழித்தடங்களையும், புதிய செயல்முறைகளையும் மக்களிடம் முன்வைக்க வேண்டும். அப்போதுதான் பழைய அரசியல் கட்சிகளும், அதன் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகளும் மக்கள் மனங்களை வெல்லக் கூடியதாக இருக்கும்.

மக்களை அணிதிரட்டல் என்பது அவர்களை அரசியல் ரீதியாக வழிப்படுத்துதல் அல்லது வசியப்படுத்தல் என்றுகூடச் சொல்லலாம். இதனால்தான் ஜனரஞ்சக அரசியல் என்றும், ஜனரஞ்சகத் தலைமை அல்லது தலைவர்கள் என்ற சொற்பதங்கள் அண்மைக்காலமாக தமிழ் அரசியல் வெளியில் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன.

ஏற்கனவே மக்களுடைய அரசியல் தவைர்களாக அல்லது மக்கள் அணிதிரண்டிருந்த அரசியல் கட்சிகளையும், அந்தக் கட்சிகளின் தலைவர்கள், அரசியல்வாதிகளையும் எவ்வாறு இந்தத் தேர்தல் காலத்தில் ஜனரஞ்சகமிக்கவர்களாக மாற்றுவது? அத்தகைய கட்சிகளின் கொள்கைகளை எவ்வாறு ஜனரஞ்சகமாக்குவது?

இந்தக் கேள்விகளுக்கு விடை காணப்பட வேண்டியது அவசியம். விடை காண வேண்டியதும், அதனடிப்படையில் மக்கள் மத்தியில் ஜனரஞ்சகமிக்கவர்களாக தங்களை முன் நிலைப்படுத்துவது தமிழ் அரசியல் கட்சிகளினதும், அரசியல்தலைவர்கள், அரசியல்வாதிகளினதும் தலையாய கடமையாகும்.

எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுகின்ற நிலைமை

இதனை தேர்தல்கால அரசியல் உத்தியாகவும், வெற்றிகரமான அரசியலுக்குரிய அடிப்படைச் செயற்பாடாகவும் கொள்ளலாம். மக்களை அணி திரட்டுவதன் அவசியம் குறித்து அரசியல்வாதிகளுக்கு எடுத்துரைப்பது கொல்லன் தெருவில் ஊசி விற்ற கதையாகத்தான் முடியும். ஏனெனில் அவர்கள்தான் அரசியலில் ஊறித் திளைத்தவர்களாயிற்றே? அவர்களுக்கு இதுபற்றி எடுத்துரைப்பது என்பது அதிகப் பிரசங்கித்தனமுமாகும் அல்லவா?

ஆனாலும் யுத்தம் முடிவுக்கு வந்து பதினொரு ஆண்டுகள் கடந்து விட்டன. யுத்தத்தில் வெற்றி பெற்று அந்த யுத்த வெற்றியையே அரசிலுக்கான முதலீடாகக் கொண்டு அரை தசாப்தத்துக்கும் மேலாக மேலாதிக்க ஆட்சி நடத்தி, தேர்தல் தோல்வியடைந்து பின்வாங்கியவர்களே மீண்டும் உத்வேகத்துடன் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி இருக்கின்றார்கள். அந்த ஆட்சி முறைமையை முழு அளவிலான அரசியல் பலமாக மாற்றி அமைப்பதற்கான அரசியல் வியூகம் வகுத்துச் செயற்படத் தொடங்கி இருக்கின்றார்கள். அவர்களின் முக்கியச் செயற்பாடாக, அவர்களுடைய அரசியல் நிகழ்ச்சி நிரலின் முக்கிய அம்சமாக இந்தப் பொதுத் தேர்தலை அவர்கள் முறையான வியூகம் வகுத்து எதிர்கொள்ளத் தயாராகி இருக்கின்றார்கள்.

அவர்களுடைய இந்தத் தேர்தல் வியூகமும், தேர்தல்கால வியூகமும் தமிழ் மக்களை அரசியல் ரீதியாகப் பலவீனப்படுத்துவதை முக்கிய அம்சமாகக் கொண்டிருக்கின்றன. அதேவேளை, தமிழ் மக்களின் அரசியல் தலைமைகள் மக்களைக் கவரத்தக்க அல்லது ஜனரஞ்சகம் மிக்க நிலைமையில் இருக்கின்றார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

முக்கியமாக நல்லாட்சி அரசாங்கம் என அழைக்கப்பட்ட முன்னைய ஆட்சியில் அரசாங்கத்துடன் நல்ல உறவைக் கொண்டிருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் முன்னேற்றம் கொண்ருக்கவில்லை.ranil sampanthan ஏமாற்று அரசியல் - பி.மாணிக்கவாசகம்

சிக்கல்கள் மிகுந்ததாகத் தொற்றம் கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு, சிக்கல்கள் மிகுந்ததாக மாற்றியமைக்கப்பட்டுள்ள எரியும் பிரச்சினைகளில் தீர்வு காணப்பட்டிருக்க முடியும் என்று நம்பப்படுகின்ற பிரச்சினைகளுக்குக் கூட தமிழ்த்தேசிய கூட்டமைப்பினால் தீர்வு காண முடியவில்லை என்ற குறைபாடும், குற்றச்சாட்டும் இருக்கின்றன.

நல்லாட்சி அரசாங்கம் சர்வதேச அரங்குகளில் சிக்கல்களை எதிர்கொண்ட போதெல்லாம், அரசாங்கத்தைப பாதுகாப்பதற்காகவே தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் முற்பட்டிருந்தனர். செயற்பட்டிருந்தனர். நிபந்தனையற்ற ஆதரவை வழங்கிய போதிலும், கிடைத்தற்கரிய சந்தர்ப்பமாகக் கிடைத்த தருணங்களில் அரசுக்கு அழுத்தம் கொடுத்து பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தவறிவிட்டனர் என்ற அதிருப்தியும் அரசியல் ரீதியான குறைபாட்டையும் மக்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் மீது கொண்டிருக்கின்றார்கள்.

இதனால்இந்தத் தேர்தல் காலத்தில் தமிழ் மக்களின் அரசியல் ஏமாற்ற அரசியலாகியிருக்கின்றது. ஏமாற்றங்களே அரசியலாகி இருக்கின்றது. இந்;த நிலைமைகளுக்கு எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதைப் போன்று தமிழ் மக்களின் அரசியல்; நிலைப்பாட்டிற்கும், அவர்களின் அரசியல் எதிர்பார்ப்புகளுக்கும் பாதகமான அரசியல் செயற்பாடுகளையே அரச தரப்பினர் முன்னெடுத்திருக்கின்றனர்.

பொதுஜன பெரமுனவின் இலக்கு

யுத்தத்திற்குப் பின்னரான தமிழ் அரசியலில் ஏமாற்றங்களையே எதிர்கொண்டுள்ள மக்களுக்கு நம்பிக்கையூட்டி மாற்று அரசியல் தலைமையை வழங்கியிருக்க வேண்டிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற சக்திகளும் தமது முயற்சிகளில் வெற்றி பெறவில்லை. ஒரு மாற்றுத் தலைமையை உருவாக்குவதற்காக ஒன்றிணைந்து மேற்கொள்ளப்பட்ட அந்த சக்திகளின் முயற்சிகளும் மக்கள் மத்தியில் போதிய அளவில் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை.

தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள ஏமாற்றங்கள் மிகுந்துள்ள அரசியலில் அவர்களின் நம்பிக்கையை வென்றெடுத்து வழிநடத்தக் கூடிய அரசியல் தலைமையை இந்த மாற்று சக்திகளினால் உருவாக்க முடியவில்லை.

இத்தகைய ஒரு பின்புலத்தில்தான் தமிழ்த்தரப்பு இந்தத் தேர்தலை எதிர்கொண்டிருக்கின்றது. இந்தத் தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல. வெறுமனே ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து உருவாக்கிய நல்லாட்சி அரசாங்கத்தைத் தோற்கடிக்கின்ற தேர்தல் அல்ல. மாற்று அரசாங்கத்தை உருவாக்குவதே இந்தத் தேர்தலின் அடிப்படை இலக்காக அமைந்திருக்கலாம்.

ஆனால் உண்மையில் அந்த இலக்கையும் கடந்து வரப்போகின்ற ஒரு தசாப்த கால நாட்டின் அரசியல் தலைவிதியை நிர்ணயிக்கின்ற ஒரு தேர்தலாகவும் அமைந்திருக்கின்றது. சாதாரண நோக்கில் இந்தத் தேர்தல் பொதுஜன பெரமுனவுக்கும், ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையிலான ஓர் அதிகாரப் போட்டியாகவோ அல்லது பொதுஜன பெரமுனவுக்கும் ஐக்கிய மக்கள் சக்தி என்ற சஜித் பிரேமதாசாவின் தலைமையிலான கூட்டணிக்கும் இடையிலான ஆட்சி அதிகாரப் போட்டிக்கான ஒரு தேர்தல் அல்ல.

உண்மையில் இது சிங்கள பௌத்த தேசியத்திற்கும் தமிழ்;த்தேசியத்திற்கும் இடையிலான ஒரு பலப்பரீட்சையைத் தளமாகக் கொண்ட தேர்தல் என்றே கூற வேண்டும். ஏனெனில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான பொதுஜன பெரமுன இந்தத் தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டதாக வெற்றி அடைய வேண்டும் என்ற இலக்கைக் கொண்டிருக்கின்றது.

தென்னிலங்கைக் கட்சிகளைத் தோற்கடிப்பது மட்டுமல்லாமல் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன தலைமையில் ஐக்கிய தேசிய கட்சிக்கு பெற்றிருந்த மூன்றிலிரண்டு பெரும்பான்மையையும்விட அதிக பெரும்பான்மை பலத்தைப் பெற்றது போன்ற ஒரு தேர்தல் வெற்றியையே பொதுஜன பெரமுன இலக்காகக் கொண்டிருக்கின்றது.

புத்தெழுச்சியும் புதுவேகமும்

இந்த வெற்றி இலக்கை எட்டுவதற்கு பொதுஜன பெரமுனவின் ஊடாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷவும் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷவும்இனவாத வழிமுறையிலான அரசியல் உத்தியையே தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த இனவாத அரசியல் உத்தியே நல்லாட்சி அரசாங்கக் காலத்து உள்ளுராட்சித் தேர்தலிலும் அதனையடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் பொதுஜன பெரமுனவுக்கு அமோக வெற்றியை ஈட்டித்தந்தது என்பதை மறந்துவிட முடியாது. அந்த அரசியல் நிலைமையை சாதாரண விடயமாக நோக்கிப் புறந்தள்ளிவிடவும் முடியாது.

சிங்கள பௌத்த தேசியமே யுத்த மோதல்களின்போதும், அதற்குப் பின்னரான காலத்திலும் இலங்கை அரசியலில் ஆளுமையுடன் அரசோச்சியது. ஆனால் சிங்கள மக்கள் மத்தியில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள பொதுஜன பெரமுன என்ற இனவாதப் போக்கிலான அரசியல் சக்தியானது சிங்கள பௌத்த தேசியத்திற்குப் புத்தெழுச்சியையும் புது வேகத்தையும் அளித்திருக்கின்றது.

இதற்கு முன்ன தென்பகுதி அரசியலில் சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றிருந்த அரசியல் போக்கில் இருந்து சற்று வேறுபட்டது. தனித்துவமானது. தீர்க்கமான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது.

பொதுஜன பெரமுனவுக்கு முந்திய சிங்கள பௌத்த தேசியம் என்பது பன்மைத்தன்மையை சிறிய அளவில் கடைப்பிடித்திருந்தது. ஆனால் பொதுஜன பெரமுனவின் தலைமையிலான சிங்கள பௌத்த தேசியம் என்பது முற்று முழுதாக சிங்கள மக்களுக்கானது. சிங்கள மக்களால் ஆனது. அதுவும் முற்று முழுதாக பௌத்தத்தையும் பௌத்த மக்களையும் முதன்மைப்படுத்தியது. முழுமையாகக் கொண்டு இயங்குவது. இதன் அடிப்படையில்தான் கோத்தாபாய ராஜபக்ஷ பெரும்பான்மையான பௌத்த சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாகத் தெரிவாகினார்.

அதே சிங்கள பௌத்த தேசிய உணர்வின் அடிப்படையில் இந்த நாட்டின் கிட்டத்தட்ட 75 வீத பெரும்பான்மையைக் கொண்ட சிங்கள மக்களின் திரட்சியான வாக்களிப்பையே பொதுஜன பெரமுன தனது தேர்தல் வெற்றிக்கு இலக்காகக் கொண்டிருக்கின்றது. அதற்கு அவசியமான பிரசார நடவடிக்கைகள் ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த தருணத்தில் இருந்தே சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக்ஷக்கள் திட்டமிட்ட வகையில் முன்னெடுத்து வந்துள்ளனர்.

ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் தனக்குக் கிடைத்த முதல் சந்தர்ப்பத்திலேயே முன்னைய அரசாங்கத்தின் நாலரை ஆண்டு கால ஆட்சி முற்றுப் பெற்ற மறுநாளே நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கான அறிவித்தலை ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ வெளியிட்டிருந்தார்.

ஒன்றிணைவது அவசியம்

பௌத்த மகாநாயக்கர்களுடன் இறுக்கமான அரசியல் உறவை ஏற்படுத்தி அவர்களுடைய வழிகாட்டலை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி நடத்துகின்ற போக்கில் சிங்கள மக்களின் பௌத்த மத உணர்வையும் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ தனது அரசியல் இலக்குக்கு அணி சேர்த்துக் கொண்டார்.98320590 353470422292044 875784642433646592 n ஏமாற்று அரசியல் - பி.மாணிக்கவாசகம்

இத்தகைய ஒரு பின்புலத்தில்தான் தமிழ்த்தரப்பினர் இந்தத் தேர்தலைக் கையாள வேண்டி இருக்கின்றது. இந்தத் தேர்தலுக்கு முகம் கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றது. சிங்கள பௌத்த தேசியம் என்ற இறுக்கமான அரசியல் திரட்சியுடன் செயற்பட்டு வருகின்ற ஆட்சி அதிகாரம் கொண்ட பொதுஜன பெரமுன விரித்துள்ள தேர்தல் அரசியல் வியூகத்தில் பல்வேறு பிரிவுகளாகவும், பல்வேறு கட்சிகளாகவும் பிரிந்து செயற்படுகின்ற தமிழர் தரப்பு தனது அரசியல் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியிருக்கின்றது.

எனவே, தமிழ்த்தரப்பு என்ற திரட்சியானதோர் அரசியல் சக்தியாகப் பரிணமிப்பதற்குப் பதிலாக உதிரிகளாக, நாடாளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றுவதற்கான தங்களுக்கிடையிலான தேர்தல் போட்டியில் இறங்கியிருப்பதையே காண முடிகின்றது.

தேர்தலுக்குப் பின்னரான காலத்தில் சக்தி மிக்க சிங்கள பௌத்த தேசியப் போக்கைக் கொண்ட ஆட்சி அதிகார சக்தியை உதிரிகளாகவே எதிர்கொள்கின்ற நிலைமைக்கே தமிழ்த்தரப்பை இட்டுச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை.

தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் தமிழ்த்தரப்பு அரசியல் ரீதியாக தங்களுக்கிடையிலான பேதங்களையும் அரசியல் தன்முனைப்புக்களையும் கைவிட்டு ஒன்றிணைவதற்குக் காலம் கடந்துவிடவில்லை என்றே கூற வேண்டும். தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யபட்டுவிட்டன. அவற்றில் மாற்றங்களைச் செய்ய முடியாது. ஆனால் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக நாடாளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றுவதற்காக கட்சிகளாகவும், கூட்டணிகளாகவும் சுயேச்சைகளாகவும் களமிறங்கியுள்ள அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு குடையின் கீழ் இயங்குவதற்கான வழித்தடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அத்தகைய ஒற்றுமையின் ஊடாகத்தான் இந்தத் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளைத் தமிழ்த்தரப்புக்கு உரியவைகளாக திரட்ட முடியும். தமிழ்த்தரப்பும் பல்வேறு கட்சிகளாக இருந்தாலும் தமிழ் மக்களின் திரள் நிலை அரசியல் சக்தியாக உருவாக முடியும்.