ஏமன் போரில் இதுவரை 1இலட்சம் பேர் பலியாகியுள்ளனர்

ஏனில் நடக்கும் உள்நாட்டுப் போர் காரணமாக சுமார் 1 இலட்சம் பேர் பலியாகி இருப்பதாக சமீபத்திய தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகின்றது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சௌதி அரேபியா செயற்படுகின்றது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவளிக்கின்றது.

சௌதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகின்றது. ஈரானோ கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றது. ஏமன் அரசுடன் இணைந்து சௌதி நடத்தும் மனிதாபிமானமற்ற தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை முன்னரே கண்டித்திருந்தது.

ஏமனில் நடைபெறும் போர் காரணமாக ஆயிரக் கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இலட்சக் கணக்கான மக்கள் பசிக் கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

போர் நடைபெறும் பகுதிகளில் உள்ள இழப்புகள் குறித்த தரவுகளை சேகரிக்கும் அமைப்பு ஒன்று ஏமனில் நடக்கும் உள்நாட்டுப் போர் காரணமாக ஏற்பட்ட இழப்பு குறித்த தரவுகளை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது, “ஏமனில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகின்றது. ஏமனில் உள்நாட்டுப் போர் காரணமாக கடந்த 5 ஆண்டுகளில் இதுவரை 1 இலட்சம் பேர் வரை பலியாகி உள்ளனர். இதில் 12,000 பேர் பொது மக்கள். இவர்கள் நேரடித் தாக்குதலில் பலியாகி உள்ளனர். சுமார் 20,000பேர் 2019ஆம் ஆண்டு கொல்லப்பட்டனர். 2018ஆம் ஆண்டிற்குப் பின்னர் மோசமாக போர் பாதிப்புகள் நடந்த ஆண்டாக 2019 பதிவாகி உள்ளது“ என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஏமனின் கடற்கரை நகரமான ஏடனிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுவதாக ஐக்கிய அமீரகம் வியாழக்கிழமை தெரிவித்தது.