எல்லாம் பறிபோய்விட்டது யாழ்ப்பாணம் மட்டும் மீதமாக இருக்கிறது – சிவகரன்

அம்பாறை பறிபோய்விட்டது. திருகோணமலை பறிபோய் கொண்டு இருக்கிறது மட்டக்களப்பு இரண்டு பக்கமும் பறிபோய்விட்டது. முல்லைத்தீவு பறிபோய்கொண்டு இருக்கிறது. வவுனியா பலபகுதிகள் பறிபோய் விட்டது. மன்னார் பறிபோய்விட்டது. இனி யாழ்ப்பாணம் மட்டும் மீதமாக இருக்கிறது என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தலைவர் வி.எஸ் சிவகரன் தெரிவித்ததுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தமிழரசுக் கட்சி மாநாட்டில் கூட எவரும் சமுகமளிக்கவில்லை. கட்சிகள், கூட்டங்கள் என்பதில் தமிழ் மக்கள் பங்களிக்கவில்லை. மக்கள் இன்றைய அரசியலையும், அரசியல் செயற்பாட்டாளர்களையும் நம்புவதில்லை. காரணம் அவர்கள் கொழும்போடு சோரம் போய்விட்டார்கள் என்ற எண்ணம் மக்களின் மனதில் ஊன்றி விட்டதே. இதை நான் நன்கு உணர்வேன். ஏனெனில் நான் சிவில் சமூகத்திலிருந்து அரசியலுக்கு சென்று மீண்டும் சிவில் சமூகத்திற்கு வந்ததால், இதை நன்கு உணர்வேன்.

எமது தமிழ் இனம், ஆயிரக்கணக்கானவர்களை இழந்து விட்டோம். பல இலட்சக் கணக்கானவர்கள் இன்று புலம் பெயர்ந்து சென்று விட்டனர். மீதமுள்ள மக்களிடையே பல கட்சிகளும், பிரச்சினைகளும் எழுந்து விட்டன.

அம்பாறை பறிபோய்விட்டது. திருகோணமலை பறிபோய் கொண்டு இருக்கிறது மட்டக்களப்பு இரண்டு பக்கமும் பறிபோய்விட்டது. முல்லைத்தீவு பறிபோய்கொண்டு இருக்கிறது. வவுனியா பலபகுதிகள் பறிபோய் விட்டது. மன்னார் பறிபோய்விட்டது. இனி யாழ்ப்பாணம் மட்டும் மீதமாக இருக்கிறது. யாழ்ப்பாணம் வரைக்கும் நுழையாத வரை தமிழ்த்தலைவர்கள் எவரும் இவற்றினை கண்டுகொள்ளமாட்டார்களா? தமிழ் தலைமைகளின் தமிழீழம் நல்லூரடியாக சுருங்கிவிட்டது.

திட்டமிட்ட வகையிலே அரச திணைக்களங்களின் உதவியுடன் அரசாங்கம் காணிகளை அபகரித்து வருகின்றது. எதற்காக போராட்டம் தொடங்கினோம். போராடி மடிந்தவர்களின் சித்தாந்தம் என்ன? இதை தற்போதுள்ள அரசியல்வாதிகள் உணர வேண்டும். அரசியல்வாதிகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் விதமாக பேசுகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளாக, புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் ஒரு தலைமையற்ற ஒரு வெறுமைக்குள் தமிழ் மக்கள் இருக்கிறார்கள். இந்த 10 ஆண்டுகளில் உள்ள தலைவர்கள் எவரும் தலைமை தாங்கக் கூடியவர்கள் அல்ல என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். எனவே தமிழ் அரசியல்வாதிகள் இவற்றை உணர்ந்து, இவர்களுக்கு தலைமை தாங்கக்கூடிய ஒருவரை கொண்டு வரவேண்டும்.

இப்போது எல்லோரும் வணிக அரசியலையே மேற்கொள்கின்றனர். எங்களை நாங்களே ஆள்கின்ற ஒரு கோட்பாடுடைய அரசியல் கட்சியை உருவாக்குங்கள். அப்போது தான் தமிழ் மக்களுக்காக போராடி உயிர்நீத்த போராளிகளின் நோக்கங்கள் நிறைவேறும். அவர்களுடைய ஆன்மா சாந்தியடையும்  என்றார்.