எந்த ஆட்சியாளர் காலத்திலும் சிறுபான்மையினர் சுமுகமாக வாழ்ந்த வரலாறு இல்லை -ஹாபீஸ் நஸீர் அகமட்

“இருக்கின்ற சூழலில் யதார்த்தங்களை புரிந்துகொள்ளாமல் மலையில் மோதிக்கொண்டு மண்டையினை உடைப்பது எனது சாணக்கியம் அல்ல” என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின்  மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபீஸ் நஸீர் அகமட் தெரிவித்துள்ளார்.

அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“நாங்கள் இருபதுக்கு வாக்களித்ததன் பின்பு இந்த அரசாங்கம் இதே அமைச்சரவை அங்கு இது பேசப்பட்டு அதற்கான உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. அது எவ்வாறு சீரழிக்கப்பட்டது என்பதைப் பற்றி நான் இங்கு பேச விரும்பவில்லை.

அரசாங்கம் ஒரு கட்டத்திலே இதற்கு முன்பு இதனை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்பதிலே அமைச்சரவையிலே தெளிவான முடிவை கொடுத்திருந்தது. நாங்கள் பேச்சுவார்த்தையிலே எல்லோருடனும் ஈடுபட்டிருந்த காரணத்தினால் முக்கியமாக இந்த நாட்டினுடைய தலைவர்கள் இதனை செய்ய வேண்டும் என்பதிலே உறுதியாக இருந்தார்கள். அதன் பின்பு வந்த நிலைப்பாடுகளில் இதுவும் ஒரு அங்கமாகின்றது.

எத்தனையோ பேர் வீதியில் இறங்கி போராடியதிலிருந்து ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு செல்லப்பட்டது வரை பல விடயங்கள் நடைபெற்றிருந்தாலும் நாங்கள் இந்த நாட்டிலே சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து எங்களுடைய தமிழ் சகோதரர்கள் பல போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள். இன்னும் எந்தவித பதிலும் கிடைக்காத பல கேள்விகள் எங்களுக்குள் இருக்கின்றது. இதுதான் இந்த நாட்டினுடைய யதார்த்தம்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தில் பேசப்பட்டு வருகின்ற பல விடயங்களுக்குக்கூட இன்னும் தீர்வில்லாமல் இருக்கின்ற இந்த வேலையில்தான் உங்களுடைய இந்தக் கேள்வியை நானும் பார்க்கின்றேன். நாங்கள் ஒரு விடயத்தில் நம்பிக்கை வைத்திருந்தோம். நாங்கள் 20இற்கு ஆதரவளித்தது என்ற விடயத்தை இரண்டு விடயங்களாக நான் பார்க்கின்றேன். ஜனாஸா விடயம் ஒரு நிபந்தனையாக நாங்கள் கூறிய விடயமே தவிர ஜனாஸா விடயத்திற்கும் 20ற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இதனை விடயம் தெரிந்த அரசியல் ஞானம் உள்ளவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஓட்டமாவடியில் ஜனாஸாவை இன்று அடக்கம் செய்கின்றோமானால் அது நேற்று எடுத்த தீர்மானமல்ல. அடக்கம் செய்வதற்கான அறிக்கைகள் அனைத்தையும் அரசாங்கத்தின் அனுசரணையோடு ஏற்கனவே செய்து வைத்திருந்தோம். அரசாங்கத்தின் அனுசரணை இருந்திருக்காவிட்டால் அவர்கள் ஏற்கனவே அதனை நிராகரித்திருக்க முடியும்.

ஜனாஸாவை எரிக்கின்ற விடயம் எந்தவொரு முஸ்லிமும் மனதால்கூட நினைத்துப் பார்த்திருக்காத விடயமாகும். நாட்டின் அரசியல் சூழ்நிலையினை அறிந்து காய்நகர்த்தவேண்டிய பொறுப்பு அரசியல் தலைமைகளுக்கு இருக்கின்றது.

நாட்டில் இன்று இருக்கின்ற பேரினவாதத்திற்குள் பேரினவாதம், இனவாதத்திற்குள் இனவாதம் உள்ளது.இன்று பல்வேறு கோணங்களில் இருக்கின்ற விடயங்களை சிறுபான்மை சமூகம் கவனத்தில்கொண்டுதான் காய்நகர்த்தவேண்டிய தேவையிருக்கின்றது.

நாங்கள் பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை சந்தித்தபோது இராஜதந்திரமாக காய்நகர்த்துவது தொடர்பிலும் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது.இவ்வாறு இருக்கின்ற சூழலில் யதார்த்தங்களை புரிந்துகொள்ளாமல் மலையில் மோதிக்கொண்டு மண்டையினை உடைப்பது எனது சாணக்கியம் அல்ல.மலையினை தோண்டி வெளிவருவதே எனது செயற்பாடாகும்.

கடந்த 72வருடங்களாக மாறிமாறி ஆட்சிக்குவந்த அரசுகளுக்குள்ளும் சிறுபான்மை சமூகம் ஒவ்வொரு பிரச்சினையை எதிர்கொண்டே வந்துள்ளது.ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் காலப்பகுதியில்தான் இந்த நாட்டில் பாரிய கலவரம் வெடித்தது.பிரேமதாசவின் காலத்தில்தான் மிகப்பெரும் இனச்சுத்திகரிப்பாக வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். எந்த ஆட்சியாளர் காலத்திலும் சிறுபான்மை சமூகம் சுமுகமாக வாழ்ந்த வரலாறு இந்த நாட்டில் இல்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.