எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் சிலரின் பிரஜாவுரிமையைப் பறிப்பதற்குத் திட்டம் – கரு ஜெயசூரிய

அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய அடுத்த தேர்தலுக்கு முன்னர் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளில் பிரபலமானவர்களின் பிரஜா உரிமையை இல்லாமல் செய்து ஏகாதிபத்தியத்துக்கான வழி அமைப்பதே அரசாங்கத்தின் திட்டமாகும்.

அத்துடன் முறைப்பாட்டாளர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டி ருப்பதானது, பிரபல்யமாக பேசப்படும் கெகில்லே மன்னரது ஆட்சியில்கூட பதிவானதில்லை என முன்னாள் சபாநாயகரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரை தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:

“கடந்த வாரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை சமூக மயப்படுத்தப்பட்டிருக்கும் அறிவிப்புக்களுக்கமைய, அந்த அறிக்கையானது நீதிமன்றத்துக்கு செய்யும் அவமானமாகும் என்பதே அதிகமான சட்டத்துறை சார்ந்த நிபுணர்களின் நிலைப்பாடாகும். ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மூலம் இந்த நாட்டில் முன்னணி அரசியல்வாதிகள் உட்பட கடமைகளை நேர்மையாக மேற்கொண்ட சில அரச அதிகாரிகளை அழித்துவிடும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதை எம்மால் தெளிவாகக் காணக்கூடியதாக இருக்கின்றது.

மேலும் இந்த ஆணைக்குழு வழங்கியிருக்கும் பரிந்துரைகள் மக்கள் மத்தியில் நகைச்சுவையாகி இருக்கின்றன. அதில் சில பரிந்துரைகளில், நீதிமன்றங்களில் தற்போது விசாரிக்கப்பட்டுவரும் பல வழக்குகளின் குற்றவாhளிகளை விடுவித்து விடுதலை செய்வதற்கு பரிந்துரை செய்து, முறைப்பாட்டாளர்களுக்குத் தண்டனை வழங்குவதற்கும் பிரேரித்திருக்கின்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.