எதியோப்பிய அரசிற்கு எதிராகத் திரும்பிய இராணுவ வீரர்கள்550 பேர் பலி

கிழக்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ள எதியோப்பியாவில், நாட்டின் பிரதமராக அபே அகமது பதவி வகித்து வருகின்றார். இவர் 2018இல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவராவார்.

எதியோப்பியாவில் டிக்ரே என்ற மாகாணத்தில் சூடான், எரித்திரியா ஆகிய நாடுகளின் எல்லையோரம் அமைந்துள்ளது. இப்பகுதி தன்னாட்சி பெற்ற மாகாணம் ஆகும். இந்த மாகாணத்தில் டிக்ரேயன்ஸ் எனப்படும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இந்தப் பிரிவினர் 2018ஆம் ஆண்டுவரை எதியோப்பிய அரசில் முக்கிய அங்கம் வகித்து வந்தனர். மேலும் அந்த மாகாணத்தை சேர்ந்தவர்கள் பலரும் எதியோப்பிய இராணுவத்தில் பெரும் பங்காற்றி வந்தனர்.

டிக்ரே மாகாணத்தைச் சேர்ந்த 2 இலட்சத்து 50ஆயிரம் பேர் எதியோப்பிய இராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். அத்துடன் சிலர் எதியோப்பிய இராணுவத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளனர்.

இந்த மாகாணத்தை எதியோப்பியாவிலிருந்து பிரித்து தனி நாடாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு டிக்ரே கிளர்ச்சியாளர்கள் குழுவும் செயற்பட்டு வருகின்றது.

இதேவேளை 2018இல் அபே அகமது பிரதமராக பதவியேற்றது தொடக்கம் டிக்ரேயன்ஸ் எதியோப்பிய ஆட்சி அதிகாரத்தில் இருந்து ஒதுக்கப்பட்டனர். இதனால் மத்திய அரசிற்கும் டிக்ரே மாகாணத்தில் உள்ளவர்களுக்கும் இடையே மோதல்கள் நிலவி வந்தன. இதன் உச்சமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் டிக்ரே மாகாணத்தில் இருந்த டிக்ரேயன்ஸ் சமூகத்தின் இராணுவப் பிரிவினர் எதியோப்பியாவின் மத்திய அரசிற்கு எதிரான நடவடிக்கையில் இறங்கினர். டிக்ரே மாகாணத்தில் உள்ள இராணுவ நிலைகளையும், ஆயுதக் கிடங்குகளையும் டிக்ரேயன்ஸ் கைப்பற்றினர். இதற்கு எதியோப்பிய இராணுவத்தின் உயர் பொறுப்புக்களில் இருந்த டிக்ரேயன்ஸ் சமூகத்தினரும் உதவி செய்தனர். இதனால் டிக்ரே மாகாணம் எதியோப்பிய மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து பிரிந்தது. அத்துடன் டிக்ரேயன்ஸ் எதியோப்பிய அரசிற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

இந்த நிலைமையை சமாளிக்க நாட்டின் ஏனைய பகுதிகளில் பாதுகாப்புப் பணிகளில் இருந்த இராணுவத்தினரை டிக்ரே மாகாணத்திற்கு பிரதமர் அபே அகமது களமிறக்கினார். அங்கு டிக்ரேயன்ஸ் சமூகத்தைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்களும், இராணுவத்தினரும் இணைந்து மத்திய படையினருக்கு எதிராக மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த மோதலில் டிக்ரேயன்ஸ் சமூக இராணுவ கிளர்ச்சியாளர்கள் 550பேர் உயிரிழந்துள்ளதாக எதியோப்பிய இராணுவம் தெரிவித்துள்ளது. இரு தரப்பிற்குமிடையே மோதல் அதிகரித்து வருவதால் பலி எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.