உலகை முடக்கும் அடுத்த தாக்குதலுக்கு தயாராகும் ஹதீஸ் அமைப்பு – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

இரண்டு மாதங்களாக தொடரும் அமெரிக்க மற்றும் பிரித்தானியா நாடுகளின் வான் தாக்குதல்களுக்கு பின்னரும் ஏமனின் ஹதீஸ் அமைப்பினரின் தாக்குதல் வலிமை குறையவில்லை என்பதை அண்மைய தாக்குதல்கள் எடுத்துக்காட்டியுள்ளது.

பிரித்தானியாவின் றுபிமார் என்ற சரக்கு கப்பலை மூழ்கடித்ததுடன் அமெரிக்காவின் 33 மில்லியன் டொலர்கள் பெறுமதியான எம்கியூ-9 என்ற ஆளில்லாத நவீன தாக்குதல் மற்றும் உளவு விமானத்தையும் சுட்டுவீழ்த்தியுள்ளனர்.

cable redsea உலகை முடக்கும் அடுத்த தாக்குதலுக்கு தயாராகும் ஹதீஸ் அமைப்பு - வேல்ஸ் இல் இருந்து அருஸ்காசா பகுதி மீது இஸ்ரேலின் தாக்குதல்கள் ஆரம்பமாகிய பின்னர் வீழ்ந்த இரண்டாவது எம்.கியூ-9 விமானம் இதுவாகும். கடந்த சில வாரங்களாக அமெரிக்க மற்றும் பிரித்தானியாவின் பல கப்பல்களையும் அவர்கள் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். இந்த தாக்குதல்கள் தொடர்கின்றபோதும், ஹதீஸ் அமைப்பினர் தற்போது தமது தாக்குதல் உத்தியை வேறு பக்கம் திருப்பியுள்ளனர்.

பாப் எல் மன்டீப் நீரிணையில் கடலுக்கு அடியில் செல்லும் தொலைதொடர்பு வயர்களை தாக்கி அழிக்கும் நடவடிக்கைகளை அவர்கள் ஆரம்பித்துள்ளனர். பாராசீக வளைகுடா, மத்தியதரைக் கடல், செங்கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் கடலுக்கு அடியால் செல்லும் தொலைதொடர்பு வயர்கள் தொடர்பான வரைபடத்தை கடந்த டிசம்பர் மாதம் தமது ரெலிகிராம் சனலில் ஹதீஸ் அமைப்பினர் வெளியிட்டிருந்தனர். அந்த வரைபடத்துடன் அவர்கள் ஒரு தகவலையும் வெளியிட்டிருந்தனர். அதாவது உலகின் பல பாகங்களுக்கும் செல்லும் தொலைதொடர்பு வயர்களை கட்டுப்படுத்தும் புள்ளியில் தமது நாடு உள்ளது எனவே அதனை தாக்கிஅழிக்கும் சக்தி தம்மிடம் உள்ளது என்பது தான் அந்த செய்தி.

கடந்த ஒக்டோபர் மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து ஹதீஸ் அமைப்பினர் 100 இற்கு மேற்பட்ட ஏவுகணை மற்றும் ஆளில்லாத தாக்குதல் விமானங்களின் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். அதனால் பல வர்த்தக கப்பல்கள் சேதடைந்ததுடன், கலக்ஸி லீடர் என்ற கப்பலையும் கடத்திச் சென்றுள்ளனர். அண்மையில் இடம்பெற்ற தாக்குதலில் பிரித்தானியாவின் றுபிமார் என்ற கப்பல் கடலில் மூழ்கியுள்ளது. ஏடன் வளைகுடாவை செங்கடலுடன் இணைக்கும் பப் எல் மண்டீப் என்ற நீரிணைப் பகுதியில் தான் அதிக தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

230314 MQ 9 Reaper ew 108p 6c375e உலகை முடக்கும் அடுத்த தாக்குதலுக்கு தயாராகும் ஹதீஸ் அமைப்பு - வேல்ஸ் இல் இருந்து அருஸ்இந்த தாக்குதல்களை தொடர்ந்து பல கப்பல் நிறுவனங்கள் அந்த பகுதி ஊடான போக்குவரத்தை நிறுத்தியுள்ளன. அதில் மார்ஸ்க் என்ற மிகப்பெரும் கப்பல் நிறுவனமும் அடங்கும். அந்த கப்பல்கள் தற்போது ஆபிரிக்காவை சுற்றியே செல்கின்றன. அதனால் கப்பல் கட்டணம் மற்றும் காப்புறுதிக் கட்டணம் என்பன மிக மிக அதிகம். அது உலகளாவிய ரீதியில் பொருட்களின் விலைகளை கடுமையாக அதிகரித்துள்ளது. அமெரிக்கா தலைமையிலான சில நாடுகள் கூட்டணியை அமைத்து இந்த தாக்குதல்களை நிறுத்த முற்பட்டாலும் அது அதிக பலனைக் கொடுக்கவில்லை.

காசாவில் இஸ்ரேல் போரை நிறுத்தும்வரையில் தாக்குதல்கள் தொடரும் என ஹதீஸ் அமைப்பு தெரிவித்துவருகின்றது. காசா மீதான இஸ்ரேலின் போர் மத்தியகிழக்கில் புதிய பதற்றத்தை தோற்றுவித்துள்ளது.

ஆனால் தற்போது தோன்றியுள்ள புதிய நெருக்கடி என்பது கடலுக்கு அடியால் செல்லும் தொலைதொடர்பு வயர்களின் பாதுகாப்பு தொடர்பானது. லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லாக்களும், ஈராக்கில் உள்ள எதிர்ப்பு படையினரும் தாமும் கடலுக்கு அடியால் செல்லும் வயர்களை தாக்கப்போவதாக தெரிவித்துள்ளனர்.

இது இந்த போரை வேறு ஒரு பரிணாமத்துக்குள் இட்டுச்செல்லவுள்ளது. மத்தியகிழக்கில் உள்ள நாடுகளும் உலகில் உள்ள நாடுகளும் கடலடி வயர்களின் தொலைதொடர்பு பொறிமுறையால் பல நன்மைகளை பெற்றுவருகின்றனர். இந்த 21 ஆவது நூற்றாண்டில் தகவல் பரிமாற்றத்தில் இந்த வயர்கள் மிக முக்கிய பங்கை வகிக்கின்றன. 95 விகிதமான மிக முக்கிய தகவல்கள் இந்த வயர்களின் மூலம் தான் பகிரப்படுகின்றன. தினமும் 10 றில்லியன் டொலர்கள் பெறுமதியான பணப்பரிமாற்றமும் இந்த வயர்களினால் தான் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த வயர்கள் பகுதியாக சேதமடைந்தாலே பல நாடுகளின் இணையத்தளங்கள் முடங்கிப்போகும் நிலை ஏற்படலாம். அதனால் முழு நாடுகளிலும் மிகப்பெரும் பொருளாதார தடங்கல்கள் ஏற்படும். அதிலும் முக்கியமாக அமெரிக்காவின் கூட்டணி நாடுகளான வளைகுடா நாடுகளின் பொருளாதாரம் முற்றாக சீரழியலாம்.

இந்த வயர்களின் சேதம் படைத்துறை மற்றும் அரசுகளின் தொடர்பாடல்களையும் இடைநிறுத்தலாம். வயர்கள் ரெறாபைற் அளவுடைய உணர்திறன்மிக்க படைத்துறை தகவல்களை கடத்தவல்லவை. தற்போது இடம்பெறும் படைநடவடிக்கைக்கான தகவல்களும் இந்த வயர்கள் மூலமாகத்தான் செல்கின்றன. எதிர்காலத்தில் செயற்கைநுண்ணறிவு வளர்ச்சிகாணும்போது மேலும் அதிக தகவல்பரிமாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவைகள் ஏற்படலாம்.

MCS United Redsea உலகை முடக்கும் அடுத்த தாக்குதலுக்கு தயாராகும் ஹதீஸ் அமைப்பு - வேல்ஸ் இல் இருந்து அருஸ்இந்த வயர்கள் செல்லும் மிக முக்கிய புள்ளியில் ஏமன் அமர்ந்துள்ளது. உலகின் தொடர்பாடல்களுக்கான வலையமைப்புக்களில் மூன்றில் ஒரு பகுதி செல்லும் இடத்தில் ஏமான் நாடு உள்ளது. இது உலகின் சக்திவாய்ந்த நாடுகளான சீனா மற்றும் அமெரிக்காவுக்கு மிக அச்சுறுத்தலான விடையமாகும். வயர்கள் மூலமான வலையமைப்பை கட்டுப்படுத்துவதில் இந்த இரு நாடுகளுக்கும் ஏற்கனவே கடும் போட்டி நிலவுகின்றது.

இந்த வயர்களை இலகுவில் தாக்கமுடியுமா என்ற கேள்விகளும் உள்ளன. அதாவது பாதுகாப்பு காரணங்களுக்காக கடலுக்கு அடியில் மிக ஆளமான பகுதியிலேயே வயர்கள் புதைக்கப்படுகின்றன. ஹதீஸ் அமைப்பினர் இதுவரைகாலமும் ஏமன் அரசுடனும் அதற்கு ஆதரவான அமெரிக்கா, சவுதிஆரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுடன் தரைவழியிலான மோதல்களில் தான் ஈடுபட்டுவந்துள்ளனர்.

ஆழ்கடலில் சென்று தாக்குதல் நடத்தும் பொறிமுறை இதுவரையில் அவர்களிடம் இல்லை. அதாவது மிக நவீன கடற்படையும் அவர்களிடம் இல்லை. எனினும் கடலின் மேற்பரப்பால் செல்லும் கப்பல்களை தாக்கும் ஏவுகணைகள் மற்றும் அதிவேகத் தாக்குதல் படகுகள் அவர்களிடம் உண்டு.

ஆனால் வயர்களை அழிப்பதற்கு நீர்மூழ்கிக் கப்பல்கள் தேவை. பப் எல் மண்டீப் பகுதி நீரிணையின் சராசரி ஆழம் 200 மீற்றர்கள் ஆகும், சில இடங்களில் அது 300 மீற்றர் வரையிலும் செல்லும். எனினும் சில வயர்களை அவர்களிடம் உள்ள தொழில்நுட்பத்தால் எட்டமுடியும். ஆழம்குறைந்த கடற்பகுதியில் உள்ள வயர்களை அழிக்க முடியும். ஏடன் வளைகுடாவில் சில பகுதிகளில் 100 மீற்றர் ஆழத்திலும் வயர்கள் செல்கின்றன.

2013 ஆம் ஆண்டு அலக்சாட்டிரா துறைமுகப்பகுதியில் எகிப்துக்கும் – ஐரோப்பாவுக்கும் இடையில் கடலுக்கடியால் செல்லும் வயர்களை அழிக்க முயன்ற மூவரை எகிப்தியப் படையினர் கைதுசெய்திருந்தனர். இவ்வாறான நடவடிக்கைகளுக்கு பயிற்சிகளோ அல்லது உயர் தொழில்நுட்ப கருவிகளோ தேவையில்லை. தற்போது சுழியோடகளுக்கான பயிற்சிகளை ஹதீஸ் அமைப்பினர் தமது படையினருக்கு வழங்கி வருகின்றனர். அவர்களின் மூலம் கடல் கண்ணிவெடிகளை கொண்டு இந்த வயர்களை தகர்க்கமுடியும்.

இத்தகைய இலக்குகள் மென்மையான இலக்குகள். கடலுக்கடியால் செல்லும் வயர்களை பாதுகாப்பது என்பதும் நாடுகளால் இயலாத காரியம். அதேசமயம் சவுதிஅரேபியாவுக்கும் டிபோதி பகுதிக்கும் இடையிலான நான்கு வயர்களை ஹதீஸ் அமைப்பினர் சேதப்படுத்தியுள்ளதாக பிரித்தானியாவின் ஸ்கை மற்றும் இஸ்ரேலின் ஜெருசலம் போஸ்ட் ஆகிய ஊடகங்கள் கடந்த 26 ஆம் நாள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலுக்கு ஈரான் உதவிகளை வழங்கியதாகவும், தாக்குதலில் எகிப்தின் ஊடாக கிழக்கு ஆசியாவை ஐரோப்பாவுடன் இணைக்கும் ஏ.ஏ.ஈ-1, பாகிஸ்தான் மற்றும் கட்டார் ஊடாக சீனாவை மேற்குடன் இணைக்கும் ஈ.ஐ.ஜி, இந்தியாவை ஐரோப்பாவுடன் இணைக்கும் ரி.ஜி.என் மற்றும் ஐரோப்பா, ஆபிரிக்கா, இந்தியாவை இணைக்கும் சீகொம் (இது இந்தியாவின் டாடா நிறுவனத்துக்கும் சொந்தமானது) ஆகிய நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் அதிகம் பாதிக்கப்பட்டது இந்தியா எனவும் இஸ்ரேலிய தகவல்கள் தெரிவித்துள்ளன. திருத்தப் பணிகளுக்கு எட்டு வாரங்கள் எடுக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலை தொடர்ந்தால் உலகம் மிகப்பெரும் பொருளாதார வீழச்சியை காணும் என்பதை வல்லரசுகள் நன்கு உணரும் எனவே தற்போது அதற்கான மாற்றுவழியை தேடவேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.