உறுதியான நடவடிக்கை எடுக்க ஐ.நா.வுக்கு துணிச்சல் இல்லை – முன்னாள் உதவி செயலாளர் நாயகம்

 

பொறுப்பக்கூறல் விவகாரத்தில் உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கான துணிச்சல் ஐநாவிடம் இல்லை என முன்னாள் ஐநா அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இதனால். ஐநாவை நம்பியிருக்ககூடாது எனவும் அவர் எச்சரித்துள்ளார். ஐ.நா. குழு ஒன்றின் முன்னாள் உதவி செயலாளர் நாயகம் சார்ல்ஸ் பீட்ரே இதனை குறிப்பிட்டிருக்கின்றார்.

உலகத் தமிழர் பேரவை, மனிதஉரிமைகள் மற்றும் சர்வதேச நீதிக்கான நிலையம், இலங்கையில் நீதி மற்றும் சமாதானத்துக்கான பரப்புரை. கனேடிய தமிழ் காங்கிரஸ் ஆகிய இணைந்து முன்னெடுத்த இணையவழி கருத்தரங்கில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு இந்நிகழ்வு இடம்பெற்றது.

இலங்கை விவகாரத்தில் உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கான துணிச்சல் ஐநாவிற்கு இல்லை என அவர் தனது உரையில் தெரிவித்ததுடன். இலங்கை விவகாரத்தை கையாள்வதற்கான அமைப்பு முறை தன்னிடம் இல்லை என ஐநா தெரிவிக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.

“கொழும்பிலும் ஏனைய பகுதிகளிலும் சரியான விடயங்களை செய்ய விரும்பும் அதிகாரிகள் உள்ளனர். எனினும் ஐநாவிற்கு நடவடிக்கை எடுப்பதற்கான துணிச்சல் இல்லை. இலங்கை மக்கள் ஐநாவை நம்பியிருக்ககூடாது” எனவும் தெரிவித்துள்ளார்.

“ஐநாவை நம்பியிருந்தால் இலங்கை மக்கள் ஏமாற்றமடைவார்கள். இலங்கை மக்கள் தங்கள் உறுதிப்பாட்டில் நிலையாகயிருந்தால் ஐநா செயற்பாட்டால் எதிர்பாராத வெற்றிகள் கிடைக்கலாம்” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் போர் இடம்பெற்ற போதும் அதன் பின்னரும் ஐ.நா. எவ்வாறு செயற்பட்டது என்பதை அராய்வதற்காக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த குழுவின் தலைவராக சார்ல்ஸ் பீட்டர் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.