உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு மைத்திரியே பொறுப்புக் கூறவேண்டும் – ருவான்

உயிர்த்த ஞாயிறுதினத் தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பொறுப்புக் கூறவேண்டியவர். இந்தத் தாக்குதல் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவுக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றிருந்தால் அதனை நாட்டின் தலைவர் அறியாதிருப்பதற்கான வாய்ப்பில்லை. எனவே, அவரே பொறுப்புக்கூற வேண்டியவர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் அடிப்படைவாத கருத்துக்களைப் பரப்பி வரும் அமைப்புக்களை தடை செய்ய வேண்டும் என்ற கருத்தை தாம் வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரி விக்கையில் கூறியதாவது;

“உயிர்த்த ஞாயிறுதினக்குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரிகளாக நௌபர் மௌலவி மற்றும் ஹஜ்ஜூல் அக்பர் ஆகியோரின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இது தொடர்பில் மேலும் ஆராய்ந்துபார்க்க வேண்டும். பயங்கரவாதி சஹ்ரான் மற்றும் நௌபர் மௌலவி ஆகிய இருவருக்கும் இடையில் தலைமைத்துவம் தொடர்பில் குழப்பநிலைமை ஏற்பட்டிருந்தது. அதனால் அதிலொரு சிக்கல் தன்மைவுள்ளது.இந்நிலையில் மௌலவி பிரதான சூத்திரதாரி என்றால் அதற்கான ஆதாரங்களும்வெளியிடப்பட வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறுதினக் குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக இல்லாவிட்டாலும் அவரே பொறுப்புக் கூறவேண்டியவர். நாட்டில் தாக்குதல் ஒன்று இடம்பெற வாய்ப்புள்ளதாக அரச புலனாய்வுத் துறையினர் அறிந்துக் கொண்டிருந்தால், அதனை நாட்டின் தலைவருக்குத் தெரியப்படுத்தாமல் இருப்பதற்கான வாய்ப்பில்லை. இதேவேளை, நாட்டின் ஜனாதிபதி இன்னொரு நாட்டுக்குச் செல்வதாகத் தீர்மானித்தால் நாட்டை வழிநடத்தும் பொறுப்பை இன்னொருவருக்கு ஒப்படைத்துச் செல்லவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.