உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து மைத்திரிக்கு முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது; ராஜித

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பொறுப்பிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தப்பவே முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு, ராஜித சேனாரத்னவிடம் மீண்டும் நேற்று விசாரணையை நடத்தியுள்ளது. இந்த ஆணைக்குழு முன்பாக ராஜித நேற்றுக் காலை 9.30 மணியளவில் ஆஜராகினார். தொடர்ச்சியாக விசாரணைகள் நடத்தப்பட்ட நிலையில், பிற்பகல் ஒரு மணியளவில் ஆணைக்குழுவிலிருந்து அவர் வெளியேறினார்.

இதன் பின் அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்-

“முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்தத் தாக்குதல்கள் தொடர்பில் முன் அறிவிப்புகள் கிடைத்திருப்பதை என்னால் உறுதிசெய்ய முடியும். அதேபோல் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இந்தப் பொறுப்பிலிருந்து நழுவமுடியாது” என்றார்.