இலங்கை மாணவரை பயங்கரவாத குற்றச்சாட்டில் சிக்கவைத்தவர் சிறையில் அடைப்பு!

இலங்கையிலிருந்து சிட்னிக்கு சென்று மேற்படிப்பில் ஈடுபட்டிருந்த மாணவனை வேண்டுமென்றே – போலிக்குற்றச்சாட்டுக்களை புனைந்து – பொலிஸில் சிக்கவைத்த அஸ்லான் கௌஜாவுக்கு (அவுஸ்திரேலிய கிரிக்கெட் நட்சத்திரம் உஸ்மான் கௌஜாவின் சகோதரர்) நியூசவுத்வேல்ஸ் நீதிமன்றம் நான்கரை வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.
இரண்டரை வருடங்களில் பரோலில் விடுதலையாவதற்கான வாய்ப்புள்ளதாகவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அவர் ஏற்கனவே சிறையில் கழித்துள்ள காலத்தை கணக்கிட்டால், அஸ்லான் கௌஜா அடுத்த ஆண்டு ஜுன் மாதம் பரோலில் வெளியே வர தகுதிபெறுவார் என தெரிவிக்கப்படுகிறது.
UNSW-இல் மேற்படிப்பை தொடர்ந்துகொண்டிருந்த மாணவனை, காதல் விவகாரத்தினால் – பொறாமை கொண்டு – அஸ்லான் கௌஜா, குறிப்பிட்ட மாணவர் முன்னாள் பிரதமர் மல்கம் டேர்ன்புல்லை கொலை செய்யத்திட்டமிட்டார் என்றும் Opera House-ற்கு குண்டுவைக்க திட்டமிட்டார் என்றும் குற்றச்சாட்டுக்களை புனைந்து, பொலிஸில் மாட்டிவிட்டதாக கூறப்படுகின்றது.