இலங்கை மனித உரிமை மீறல் குறித்து பிரித்தானியா கவலை

சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்டுவரும் இராணுவமயமாக்கல் தொடர்பாகவும் சிவில் சமூகம் துன்புறுத்தப்படுவது தொடர்பாகவும் ஐக்கிய இராச்சியம் தனது அக்கறையை வெளிப்படுத்தியிருக்கிறது.

ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் பொதுநலவாய நாடுகளுக்குரிய பணிமனைக்குரிய அமைச்சரான நைஜல் அடம்ஸ் (Nigel Adams) சிறீலங்கா அரசு சிவில் சமூகத்துக்குக் கொடுக்கும் தொல்லைகள் பற்றியும் சிவில் சமூகங்களுக்குரிய பணிகளை தொடர்ச்சியாக இராணுவமயப்படுத்தி வரும் அவர்களது செயற்பாடுகள் தொடர்பாகவும் தமது அரசின் அக்கறையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பிரித்தானியாவின் எதிர்க்கட்சியாக இருக்கின்ற தொழிற்கட்சியின் பாடசாலைகளுக்குரிய நிழல் அமைச்சராகப் பணியாற்றுகின்ற வெஸ் ஸ்ற்றீங் ( Wes Streeting) தொடுத்த கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது மேற்படி அமைச்சர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

‘சிறீலங்காவில் இராஜபக்ச அரசு, ஐநாவின் மனித உரிமைகள் ஆணையத்தில் சிறீலங்கா மேற்கொண்ட தீர்மானத்திலிருந்து விலகியிருக்கும் பின்னணியில், மேற்படி மனித உரிமைகள் ஆணையத்தில் நாங்கள் ஓர் புதிய தீர்மானத்தைக் கொண்டுவந்து வரலாற்று ரீதியாக சிறீலங்கா அரசுகள் மேற்கொண்ட போர்க்குற்றங்களுக்கான சட்ட நடவடிக்கை எடுக்கவும் அதற்கு முதல் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும், அதே நேரத்தில் சிறீலங்காவின் தற்போதைய அரசு மேற்கொண்டு வருகின்ற மனித உரிமை மீறல்களைத் தட்டிக்கேட்கவும் வேண்டிய தலைமைத்துவத்தை வழங்குமா? என்று வெளிநாட்டு விவகாரங்களுக்கான செயலரைக் கேட்கிறேன்.’ என்று பிரித்தானியாவின் எதிர்க்கட்சியாக இருக்கின்ற தொழிற்கட்சியின் பாடசாலைகளுக்குரிய நிழல் அமைச்சராகப் பணியாற்றுகின்ற வெஸ் ஸ்ற்றீங் ( Wes Streeting) கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்குப் பதிலாக   ஆடம்ஸ் பதில் அளிக்கையில்,’மதிப்புக்குரியவர் எழுப்பிய விடயம் தொடர்பாக கேள்வி எழுப்ப அவருக்கு உரிமை இருக்கிறது. அதே வேளையில் தமிழருக்கான அனைத்துக்கட்சிக் குழுவில் அவரும் அவரது சகாக்களும் மேற்கொண்டு வரும் பணிகளை நான் பாராட்டுகின்றேன்.

மிகவும் முக்கியமான இவ்விடயத்தை எப்படிச் சிறப்பான விதத்தில் முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக, நாங்கள் எங்கள் பன்னாட்டுப் பங்காளிகளுடனும் மனித உரிமைகள் ஆணையத்துடனும் மிகவும் நெருக்கமாகப் பணியாற்றுவோம். சிறீலங்கா விவகாரங்களுக்குப் பொறுப்பான விம்பிள்டனைச் சேர்ந்த அஹ்மட் பிரபு சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சரை நவம்பர் 5ம் திகதி சந்தித்த போது, சிவில் சமூகத்துக்கு அவர்கள் கொடுக்கும் தொல்லைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாடுகள் இராணுவயமாக்கப்பட்டு வருவது தொடர்பாகவும் இனனும் பல விடயங்கள் தொடர்பாகவும் கேள்வி எழுப்பினார்.

சிறீலங்காவின் அரசுடன் நாங்கள் மேற்கொண்டு வரும் கலந்துரையாடல்களிலும் ஐநாவின் மனித உரிமைகள் ஆணையத்துடன் கடந்த பெப்ரவரி, ஜூன், செப்ரெம்பர் ஆகிய மாதங்களில் நாங்கள் மேற்கொண்ட கலந்துரையாடல்களிலும் மனித உரிமைகள் ஆணையத்தின் செயற்பாடுகள் தொடர்பான எங்களது ஆதரவை நாங்கள் வெளிப்படுத்தியிருக்கிறோம்.’ என்றார்.