இறுதி போரில் 5,000 – 6,000  தமிழர்கள் தவறுதலாக உயிரிழந்திருக்கலாம் – ஃபொன்சேகா  தெரிவிப்பு

இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, 40,000 தமிழர்கள் கொலை செய்யப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை நாடாளுமன்றத்தில் முன்னாள் இராணுவ தளபதியும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் ஃபொன்சேகா மறுத்துள்ளார்.

இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஐ.நா தனது அறிக்கையில் தெரிவித்துள்ள நிலையில்,  சுமார் 5,000 – 6,000 பேர் வரை தவறுதலாக உயிரிழந்திருக்கலாம் என்று சரத் ஃபொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில்  நேற்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில், சரத் பொன்சேகா மேலும் கூறியுள்ளதாவது, “இராணுவத்தில் புதிய நுட்ப பயற்சிகளை அளித்தமையே யுத்த வெற்றிக்கு காரணமாகும்.

நான் தனிப்பட்ட முடிவுகளையும் பிரயத்தனங்களையும் மேற்கொண்டதனாலேயே, பயங்கரவாத்தை தோற்கடிக்க முடிந்தது.

யுத்தத்தை குறிப்பிட்ட காலத்தில் முடிவுக்கு கொண்டுவருவதாக நான் உறுதியளித்தேன். அதனை முடிவுக்கு கொண்டுவந்தேன். திட்டமிட்ட செயற்பாடுகளே அதற்குக் காரணமாகும்.

மேலும், இறுதி யுத்தத்தின்போது 45,000 பொதுமக்கள் கொலை செய்யப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை மறுக்கின்றேன். சுமார் 5,000 – 6,000 பேர் வரை தவறுதலாக உயிரிழந்திருக்கலாம்.

ஆனாலும், 270,000 பேரை பாதுகாக்க முடிந்தது.பயங்கரவாதத்தில் ஈடுபட்ட 12,000 பேருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் புனரவாழ்வு வழங்கப்பட்டவர்கள், மீளவும் பயங்கரவாதத்தில் ஈடுபடாதிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறுதி கட்ட யுத்தம் நடந்த காலத்தில் 35 ஆயிரம் விடுதலைப்புலி உறுப்பினர்கள் இருந்தனர். அவர்களில் 23,000 பேரை   இராணுவம் கொன்றது” என்றார்.

மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் இருவர், கிளைமோர் குண்டொன்றுடன் கைது செய்யப்பட்டதாக சபையில் சுட்டிக்காட்டிய சரத் ஃபொன்சேகா , விடுதலைப் புலிகளின் நிழல்கள் இன்றும் செயல்பட்டு வருவதாக தெரிவித்திருந்தார்.

இலங்கையில் யுத்தம் இல்லாத போதிலும், இராணுவ கட்டமைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும் என சரத் ஃபொன்சேகா,

“ஒரு நாட்டின் இராணுவ கட்டமைப்பு மிக வலுவாக இருக்குமேயானால், அது அந்நாட்டிற்கு கம்பீரமான ஒன்று.

யுத்தம் முடிவடைந்த பின்னர், இராணுவம் மறுசீரமைக்கப் படவில்லை. 1955ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட யுத்த தாங்கிகளையே இராணுவம் இன்றும் பயன்படுத்தி வருகின்றது.

நான் இராணுவ தளபதியாக இருந்த காலத்தில் 80 யுத்த தாங்கிகள் இருந்தது. யுத்தத்தினால் அவற்றில் 50 தாங்கிகள் சேதமடைந்துள்ளது. தற்போது 30 யுத்த தாங்கிகள் மாத்திரமே எஞ்சியுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இலங்கையில் மாத்திரமன்றி, உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நடந்த ஜே.வி.பி கலவரத்தையும், தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புப்படுத்தி பேசுவது தவறானது. தமிழீழ விடுதலைப் புலிகள் நாட்டை பிளவுப்படுத்தி, தனிநாட்டை கோரியே யுத்தம் செய்தனர். ஜே.வி.பி நாட்டை பிளவுப்படுத்துவதற்கான போராட்டத்தை செய்யவில்லை,” என்றார்.