இலங்கை தாதாக்கள் தமிழகத்தில் பதுங்கலா?- அகதி முகாம்களில் தீவிர விசாரணை

இலங்கை நபர்களை கண்காணிக்கும் கியூ பிரிவு போலீஸார், இலங்கையைச்  சேர்ந்த நிழல் உலக தாதாக்கள் தமிழகத்தில் பதுங்கி இருப்பதாக இன்டர்போல் போலீஸார் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, தமிழகத்தில் வசிக்கும் இலங்கை நபர்களிடம் கியூ பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே நேரம் அகதிகள் முகாம்களிலும் விசாரணை, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வந்தவர்களின் விவரங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
அதில், விசா காலம் முடிந்தும், திரும்பி செல்லாமல் இருக்கும் நபர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை 13 பேர் விசா காலம் முடிந்தும் சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது.  அவர்கள் தற்போது தமிழகத்தில்தான் இருக்கிறார்களா? அல்லது வேறு பகுதிகளுக்கு இடம்மாறி விட்டார்களா? என்று விசாரணை நடக்கிறது.
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் முறையான ஆவணங்கள் இல்லாமலும், அரசின் அனுமதி இல்லாமலும் யாரும் தங்கி இருக்கிறார்களா?, முகாம்களில் அனுமதிக்கப்பட்ட நபர்களை விடவும் கூடுதலாக யாரும் தங்கி இருக்கிறார்களா? என்பது குறித்தும் கியூ பிரிவு போலீஸார் மற்றும் அந்தந்த பகுதி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.