தமிழ்த் தேசியப் பரப்பில் இருந்து ஓரங்கப்பட்ட – துரோகியென முத்திரைக்குத்தப்பட்ட தரப்புடன், அதிகாரத்துக்காக கூட்டு சேர்வது சாக்கடை அரசியலாகும் என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
அப்படியான அரசியலை முன்னெடுக்கும் தரப்பின் முகத்திரை தற்போது கிழிந்துவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ். சாவக்கச்சேரியில் இன்று (14) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
நாடு தழுவிய ரீதியில் உள்ளூராட்சி சபைகளில் அமைக்கப்பட்டு வருகின்றது. வடக்கிலும் இதற்குரிய நடவடிக்கை இடம்பெறுகின்றது. தெற்கில் கடைபிடித்த அணுகுமுறையை நாம் வடகிழக்கில் கடைபிடிக்கவில்லை. இங்கு நடுநிலை வகித்தோம் என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
‘நாம் வாக்கெடுப்பில் பங்கேற்றிருந்தால் இங்குள்ள தமிழ்க் கட்சிகளின் கனவு சிதைக்கப்படும். மனக்கோட்டை, மண்கோட்டையாக மாறிவிடும் என்பதை சொல்லி வைக்க விரும்புகின்றோம்’.
‘இங்கு யார் ஆட்சி செய்தாலும் அந்த ஆட்சிக்கு நாம் உதவியாக இருப்போம்’.
உள்ளூராட்சி சபைகள் ஊடாக மக்களுக்கு கிடைக்கப்பெறும் சேவைகள் சரியாக சென்றடைய வேண்டும். அதற்காக எமது உறுப்பினர்கள் தீவிரமாக செயற்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். ‘மக்களை ஏமாற்றும் அரசியலை நாம் முன்னெடுக்கவில்லை. சாக்கடை அரசியல் செய்யவும் தயாரில்லை. அவ்வாறு செய்ய நினைத்திருந்தால் யாழ். மாநகரில் இன்று வேறொரு நபரே மேயராக வந்திருக்கக்கூடும்’
‘கடந்த காலங்கள் முழுவதும் தமிழ்த் தேசியப் பரப்பில் இருந்து ஓரங்கட்டப்பட்ட – துரோகிகள் என முத்திரை குத்தப்பட்ட – ராஜபக்சக்களின் அடிவருடி எனக் கூறப்பட்டவர்களுடன் கூட்டு சேரும் நிலைமை காணப்படுகின்றது.
இதனை மக்களும் இன்று புரிந்துகொண்டுள்ளனர்’ என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.மக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக அல்ல, தமது காவாலித்தனமான அரசியலை தக்கவைத்துக்கொள்வதற்காகவே இவர்கள் இவ்வாறு ஆட்சியமைக்கின்றனர்.
கடந்த காலங்களில் ஒருவரையொருவர் எப்படி விமர்சித்துக்கொண்டனர். ஆனால் வெட்கம் இல்லாமல் – அதிகாரத்துக்காக – கொள்கை துறந்து கூட்டு சேர்கின்றனர் என்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் விமர்சித்துள்ளார்.