இலங்கையில் 82 ஆயிரத்தைக் கடந்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை-400க்கும் மேற்பட்டோர் பலி

இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 82 ஆயிரத்து 650 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை 464 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சிறைச்சாலைகளில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 855 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை வெலிக்கடை சிறைச்சாலையில் 909 பேருக்கும் மஹசீன் சிறைச்சாலையில் 878 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் மஹர சிறைச்சாலையில் 827 பேருக்கும் கொழும்பு ரிமாண்ட் சிறைச்சாலையில் 450 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் ,இது வரையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 78 ஆயிரத்து 593 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளர்களைப் பார்வையிட இன்றிலிருந்து ஒருவருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

யாழ்போதனா வைத்தியசாலையில் அண்மையில் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக வைத்தியசாலையில் சில பிரிவுகள் மூடப்பட்ட தோடு தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.

எனினும் தற்போது அந்த நிலைமை மிகவும் விரைவாக முன்னெடுக்கப்பட்டு எதிர்வரும் 5 ஆம் திகதியிலிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வழமையான செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதோடு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களைப் பார்வையிட ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என தெரிவித்துள்ளார்.