இலங்கையில் மீண்டும் கடத்தல் ஆரம்பம்

இலங்கையில் மீண்டும் வெள்ளை வான் கடத்தல் ஆரம்பமாகியுள்ளது. தென்னிலங்கையைச் சேர்ந்த நுகர்வோர் உரிமை செயற்பாட்டாளரும் சமூக ஆர்வலருமான அசேலா சம்பத் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை (25) வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்தப்பட்டார்.

எனினும் அவரின் மகள் இது தொடர்பில் சமூகவலைத்தளங்களில் தகவல்களைப் பதிவு செய்து நடவடிக்கையில் இறங்கியதால் தாமே கைது செய்துள்ளதாக மறுநாள் (26) இலங்கை அரசு ஒப்புக் கொண்டிருந்ததுடன், அவரைப் பிணையிலும் விடுதலை செய்துள்ளது.

கோவிட் தடுப்பு மருந்து தொடர்பில் அவர் தவறான தகவல்களைப் பரப்பியதால் கைது செய்யப்பட்டதாக இலங்கை அரசு தெரிவித்துள்ள போதும், நேற்றைய தினம் நினைவுகூரப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் துன்புறுத்தல்களுக்கு உட்பட்டவர்களுக்கு ஆதரவான நாளை முன்னிட்டு இலங்கை அரசின் துன்புறுத்தல்களுக்கு உட்பட்டவர்களுக்கு ஆதரவாக பேரணி ஒன்றை மேற்கொள்ள அவர் முயற்சி செய்திருந்தார் எனவும், அதனை அறிந்து கொண்ட இலங்கை அரசு அவரை கடத்தியதாகவும் தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம், பல ஆண்டுகளாக சிறைகளில் வாடும் கைதிகளை விடுவிக்கக் கோரி வெலிக்டை சிறைச்சாலைக்கு அண்மையாக நேற்று (26) ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டிருந்தது.