இலங்கையில் புர்கா உள்ளிட்ட ஆடைகளுக்குத் தடை

இஸ்லாமியப் பெண்கள் முகத்தை மூடும் வகையில் அணியும் புர்கா உள்ளிட்ட ஆடைகளுக்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

2019ம் ஆண்டு ஏப்ரல் 21ம் திகதி ஈஸ்டர்  நாள் அன்று, இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து, இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த பயங்கரவாதத் தாக்குதலில் 277 பேர் உயிரிழந்திருந்ததுடன், 500ற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.

தேசிய தௌஹித் ஜமாஆத் என்னும் அமைப்பே, இந்த தாக்குதலை நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை அடுத்து தற்காலிகமாக   இலங்கையில் புர்கா ஆடை, மதரசா பாடசாலைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்த பின்னணியில், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் மிக வேகமாக நடத்தப்பட்டு வருகின்ற நிலையிலேயே, புர்கா ஆடைக்கான தடை விதிக்கும் அமைச்சரவை பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளதாக, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இந்த ஆணைக்கு இனி நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கவேண்டும். விரைவில் இந்த ஆணை அமலுக்கு வரும்  என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், இலங்கையில் இயங்கும் மதரசா பாடசாலைகளையும் விரைவில் தடை செய்யவுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.