இலங்கையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 94 ஆயிரத்து 336 ஆக உயர்ந்துள்ளது என்றும் இதன் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 593 ஆக உயர்ந்துள்ளது என்றும்  அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் தென் ஆபிரிக்காவில் இனங்காணப்பட்ட திரிபடைந்த கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை மற்றும் நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் நிறுவனத்தின் பணிப்பாளர் மருத்துவர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் ஜுலை மாதம் 06ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது என சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி  தெரிவித்துள்ளார்.

இதன்போது 9 இலட்சத்து 24 ஆயிரத்து 687 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், 3 இலட்சத்து 56 ஆயிரத்து 730 தடுப்பூசிகள் மாத்திரமே களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.