இலங்கையில் குப்பைகொட்டும் இங்கிலாந்து; வறிய நாடுகளை குப்பை மேடாக்கும் மேற்குலகு

கழிவுப்பொருட்களை வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தற்பொழுது பலம்பொருந்திய நாடுகளின் நாகரீகமாக மாறியுள்ளது.அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து போன்ற நாடுகளின் கழிவுகள் கானா, நைஜீரியா, இந்தோனசியா, மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றமை இதற்கு சான்றுகளாகும்.

கழிவுப்பொருட்களின் ஏற்றுமதியில் ஐரோப்பிய நாடுகள் முன்னிலை பெற்றாலும் கழிவு ஏற்றுமதி செய்யும் தனி இராச்சியமாக திகழ்வது அமெரிக்கா என BBC தகவல் வௌியிட்டுள்ளது.

பிரித்தானியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மெத்தைகள் அடங்கிய 65 கொள்கலன்களை சுங்கத்தின் நுகர்வோர் பாதுகாப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

இவை கழிவுப்பொருட்களாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக சுங்க ஊடகப்பேச்சாளர் சுனில் ஜயரத்ன கூறினார்.இவற்றில் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பொருட்கள் காணப்படலாம் எனவும் சுங்கப் பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளார்.சில கொள்கலன்கள் எதிர்வரும் திங்கட்கிழமை திறக்கப்பட்டு சோதனைக்குட்படுத்தப்படவுள்ளது.தனியார் நிறுவனமொன்றே நாட்டிற்கு இந்த மெத்தைகளை இறக்குமதி செய்துள்ளது.

இதுவரையில் இவ்வாறான மெத்தைகள் அடங்கிய 100 கொள்கலன்கள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல் பதிவாகியுள்ளது.

இலங்கை கைச்சாத்திட உத்தேசித்துள்ள சிங்கப்பூர் – இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை மூலமாக கழிவுகள் கொட்டப்படும் நாடுகளில் ஒன்றாக இலங்கையையும் மாறுவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக புத்திஜீவிகள் தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

மலேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் இதன் விபரீதத்தை புரிந்துகொண்டு அதற்கு எதிராக தங்களது கொள்கைகளை மாற்றிக்கொண்டாலும் இலங்கை இது தொடர்பில் புத்திசாலித்தனமாக செயற்பட்டுள்ளதாகத்
தெரியவில்லை.

அது மாத்திரமன்றி இந்நாட்டில் கழிவுகளைக் கொட்டுவதற்கு நேர்த்தியான முறைமை இல்லாத நிலையில் கண்டி, மாத்தறை கரதியான உள்ளிட்ட பகுதிகளில் குப்பை மலைகள் பல உள்ள நிலையில், வௌிநாட்டு குப்பைகளை இறக்குமதி செய்வதற்கு
அனுமதி கொடுத்தது யார்?

இடையிடையே புத்தளம் மற்றும் அதனை சூழவுள்ள கடல் எல்லைகளில் இந்தியாவின் மருத்துவக்கழிவுகள் கரையொதுங்கியமையும் இதற்கு ஒப்பான செயற்படாகும்.