இலங்கையில் எரிபொருள் வியாபாரம் – வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வம்

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை தமக்கு சாதகமாக்கி பெருமளவு இலாபம் ஈட்டுவதற்கு 24 இற்கு மேற்பட்ட நிறுவனங்கள் ஆர்வம் காண்பித்து வருகின்றன.

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேற்ஸ், அமெரிக்கா, இந்தியா, ரஸ்யா, பிரித்தானியா, மலேசியா, நோர்வே மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளை சேர்ந்த பெருமளவான நிறுவனங்களே எரிபொருள் வியாபாரம் தொடர்பான தமது திட்டங்களை இலங்கை அரசிடம் சமர்ப்பித்துள்ளதாக எரிபொருள் அமைச்சர் காஞ்சனா விஜயசேகரா தெரிவித்துள்ளார்.

இந்த நிறுவனங்களின் திட்டங்களை ஆய்வு செய்து எதிர்வரும் 6 வாரங்களில் தீர்மானம் மேற்கொள்ளப்படும், எரிபொருட்களை இறக்குமதி செய்து, விநியோகம் செய்வது, சந்தைப்படுத்துவது போன்ற துறைகளில் இந்த நிறுவனங்கள் பணியாற்றும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பெற்றோலிய பொருட்களின் விலையை இலங்கை அரசு உயர்த்த வேண்டும் என கடந்த வாரம் இடம்பெற்ற பேச்சுக்களின் போது அனைத்துலக நாணயநிதியம் நிபந்தனையை முன்வைத்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.