இலங்கைத் தேர்தலும் தமிழ்த்தேசியமும் – முனைவர் விஜய் அசோகன்

2019இல் நடந்து முடிந்த ஸ்ரீ லங்கா ஜனாதிபதி தேர்தலின் வாக்குப்பதிவு வரைப்படத்தை காணும்பொழுது தமிழீழ வரைபடம் இலங்கைத் தீவில் தனித்துத் தென்பட்டத்தை அனைவரும் உணர்ந்திருப்போம்!

2005இல் தேர்தல் புறக்கணிப்பிற்கு பெரும் ஆதரவு இருந்த வன்னி, யாழ் பகுதிகளையும் உள்ளடக்கி, மீதமுள்ள தமிழர் தேசப் பகுதிகளில் மற்றும் சிங்களப்பகுதிகளில் ரணிலுக்கும் மகிந்தவிற்கும் விழுந்த வாக்குச் சதவிகிதத்தைக் கணக்கிட்டாலும் சரி, தொடர்ந்தும், 2010, 2015, 2019 எனத் அனைத்துத் தேர்தல்களிலும் தமிழர் பகுதி ஒருபுறமும் சிங்கள மக்கள் நேர் எதிரான வாக்கையுமே செலுத்தி வந்துள்ளார்கள். தமிழர் தேசத்தின் ஓட்டுகள் தேச வரைபடத்தைக் காட்டுகிறது என்பதே இத்தேர்தல்களில் நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.

ஜனநாயகத்தை நம்புவதாக, ஏற்பதாக நடிப்பவர்கள் கூட ஏன் தமிழர் தேசமும் சிங்களத் தேசமும் எல்லாத் தேர்தல்களிலும் நேரெதிராக நிற்கிறது என்றுக்கூட சிந்திக்கத் தயங்குகிறார்கள். எல்லாத் தேர்தல்களிலும் தமிழர் தேசம் சொல்லும் செய்தியினை முழுமையாக புரிந்துக்கொண்டால் மட்டுமே அரசியல் தீர்விற்கான முதல் படியினை எட்ட முடியும்.

தமிழீழ மக்களினையும் தமிழர் தேசம், இறையாண்மையை சிதைக்க முன்னின்றவர்களில் முதன்மையானவர்களான மகிந்த குடும்பத்தினை 2005, 2010, 2015 மற்றும் 2019இல் முற்றிலுமாக தமிழர் தேசம் நிராகரித்துள்ள பொழுதும், தமிழர் வாக்குகள் ஏதுமின்றி சிங்கள வாக்கு மட்டுமே பெற்று தமிழர் தேசத்தினை ‘ஜனநாயகம்’ என்ற பெயரில் சூறையாட முடியும், தமிழர்களின் இறையாண்மையை பறிக்க முடியும், இனவழிப்பு நடத்திட முடியும்!

இங்குதான் 2005 தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களது தேர்தல் புறக்கணிப்பு சித்தாந்தத்தைப் புரிந்துக்கொள்ளலாம்.

முதலில், பேச்சுவார்த்தைகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் நிறுவ முயன்றதே, தமிழீழத்தின் தேச அடையாளத்தையும் அதன் இறையாண்மையையும். அரசியல் தீர்விற்கான மற்றும் தமிழின அழிப்பின் நீதிக்கோரலுக்கான பேச்சுவார்த்தைகள் முற்றுப் பெறாமல் சிங்களத் தேசத்தின் தலைவருக்கான தேர்தலில் தமிழர் தேசம் எங்கனம் பங்குக்கொள்ள முடியும்! அப்படியே, பங்குப்பெறினும் தமிழர்களின் வாக்குகள் அவசியமற்ற சிங்களத் தேர்தல் எத்தகைய ஜனநாயகத்தை நிலைநிறுத்திட முடியும் என்ற கேள்விகளே புறக்கணிப்பின் பதில்.

ரணில் வந்திருந்தால் நல்லது, கடும்போக்கு மகிந்த வந்ததாலே இனவழிப்பு என்பதெல்லாம் அரசியல் அரிச்சுவடிக்கூட அறியாதார் வாதாம்.

2009இல் போரில் தலைமை தாங்கிய சரத் பொன்சேகாவை 2010இல் பொது வேட்பாளரை ஆதரித்தும், 2015இல் பொது வேட்பாளர் அடையாளத்தோடு, ‘நல்லாட்சி’ முழக்கத்தோடு வந்திறங்கிய மைத்திரியை ஆதரித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதனை நிலைநிறுத்த முடிந்ததென சிந்தித்தால் மட்டுமே இலங்கைத்தீவில் ஸ்ரீ லங்கா ஜனாதிபதிக்கான தேர்தல் தமிழர் தேசத்திற்கானது அல்ல என்பதையும் நாம் சேர்த்தே உணரலாம்.

தமிழர் தேச மக்கள் சிங்களத் தலைமையின் தேர்விற்கு எதிராக ஒருமித்த அடையாளத்தை தங்கள் வாக்குகள் மூலம் நிலைநிறுத்தி வருகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை எனினும் அதே வாக்கு தமிழர் சார்பிலான பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டாலும் நிறுவ முடியும், ஆனால், சிங்களத் தேசத் தலைவருக்கானத் தேர்தலில் தமிழர் தேசம் பங்குபெறாமல் இருப்பதே தமிழர் தேசத்தின் அரசியல் வேணவாவினை நிலைநிறுத்தும் முதற்படியாகும். இதனை புரிந்துக்கொண்டால் மட்டுமே 2005 தேர்தல் புறக்கணிப்புக் கோரிக்கையைப் புரிந்துக்கொள்ளலாம்.

நன்றி – நக்கீரன்