இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளில் சீனா தலையிட்டால் அதற்கு எதிராக நடவடிக்கைகள் தொடரும் – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

இலங்கையை குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்பும் நடவடிக்கைகளை சீனா தடுக்க முயன்றால், சீனாவின் முயற்சியை எதிர்க்கும் நாடுகளின் நடவடிக்கைகள் தீவிரப்படும் என  நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்  தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்  மேலும் தெரிவிக்கையில், பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான தமிழர்களின் நீதிக்கான நடைபயணம் பெப்ரவரி மூன்றாம் திகதி முதல் ஏழாம் திகதி வரை இடம்பெ ற்றது.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என்பதே  குறித்த பேரணியில் கலந்து கொண்டவர்களின் பிரதான கோரிக்கையாக காணப்பட்டது.

 ஜனவரி 27ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர், மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளை இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

 அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்பும் முயற்சி நடந்தால் ஐநா பாதுகாப்புப் பேரவையில் அதனை சீனா (வீட்டோ) தடுப்பதிகாரத்தால் அதனை தடுத்து விடும் என்பதால், இத்தகைய முயற்சியால் ஒன்றும் ஆகப் போவதில்லை என்று சில வட்டாரங்களில் கருத்துகள் பேசப்படக் கேட்கிறோம்.

 முதலாவதாக தார்ஃபூர் தொடர்பாக சூடான் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்பப்பட்ட போது, சீனாவிற்கு சூடானுடன் நல்ல வணிக உறவு இருந்த போதிலும் அது இம்முடிவை எதிர்க்கவில்லை

சீனா தனது வீட்டோ தடுப்பதிகாரம் கொண்டு தடுத்தால் தடுக்கட்டும் என தெரிவித்துள்ளதோடு ஐ.நா பாதுகாப்புப் சபையில் சிறீலங்கா தொடர்பில் கருத்து மோதல் வரட்டும். சென்ற வாரம் மியான்மர் ஆட்சிக் கவிழ்ப்பு தொடர்பாகப் பாதுகாப்புப் பேரவையிலிருந்து ஒருமித்த அறிக்கை வரவிடாமல் சீனம் மறித்து விட்டது.

இதன் பொருள் மியான்மர் ஆட்சிக் கவிழ்ப்பு பன்னாட்டு அக்கறைக்குரியதாக இல்லாமற் போய்விட்டது என்பதன்று. இந்த அக்கறையை சீனத்தால் வழிமறிக்க முடியவில்லை. மேலும் மியான்மர் போன்ற நாடுகளில் சனநாயகம் மீள வேண்டும் என்ற அறைகூவலுக்கு சீனத்தின் செயல் உரமூட்டியுள்ளது.

இதேபோல்      சிறீலங்காவை      அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்பும் முயற்சியை சீனம் வழிமறிக்குமானால் இருதரப்பாகவோ பலதரப்பாகவோ நடவடிக்கைகள் எடுக்க மற்ற நாடுகளின் முயற்சிகளுக்கு அது ஊக்கமாகும்”என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.