இறம்பொடையில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 22 பேர் உயிரிழப்பு- 60 பேர் காயம்

நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் இறம்பொடை – கெரண்டிஎல்ல பகுதியில் இன்று (11) அதிகாலை பேருந்தொன்று வீதியை விட்டுவிலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்தனர்.
குறித்த விபத்தில் காயமடைந்த சுமார் 60 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, காயமடைந்தவர்கள் நுவரெலியா, கம்பளை, நாவலப்பிட்டி மற்றும் கொத்மலை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருநாகல் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றே இன்று அதிகாலை 4.30 அளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்குள்ளான பேருந்தில் சிக்கி இருந்த அனைவரும் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில், காயமடைந்த பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து இடம்பெற்ற வேளையில் பேருந்தில் சுமார் 60 முதல் 70 பேர் வரை பயணித்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பேருந்து பயணித்துக் கொண்டிருந்த போது அதில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக இந்த விபத்துக்கு ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இதேவேளை, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படுமென்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதேநேரம் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தமது இரங்கலை தெரிவித்துள்ளார்.